வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட நாசிவந்தீவு மக்களின் குடிநீர்ப் பிரச்சனையை ஓரளவு தீர்க்குமுகமாக தண்ணீர்த் தாங்கிகள் வைக்கப்பட்டு குடிநீர் விநியோகிக்கப்படுகின்றது.
நாசிவன்தீவு மாதர் அபிவிருத்திச் சங்கத்தினால் வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினரும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் கோறளைப்பற்றுக் கிளை செயலாளருமான க.கமநேசனிடம் நாசிவன்தீவுக் கிராமத்தில் குடிநீர் உவர்த்தன்மையுள்ளதால் நீர்த்தாங்கி வைத்து நீர் வழங்குமாறு வேண்டுகோள் விடுத்தனர்.
அதன் பிரகாரம் வாழைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் மற்றும் பிரதேச சபைச் செயலாளரின் கவனத்திற்கு சபை உறுப்பினர் கொண்டு வந்ததன் பிற்பாடு நாசிவந்தீவுப் பகுதியில் எட்டு நீர்த்தாங்கிகள் வைத்து நீர் வழங்கப்பட்டுள்ளதுடன், இதனை பிரதேச சபை உறுப்பினர் புதன்கிழமை மாலை நேரில் சென்று பார்வையிட்டார்.
நாசிவன்தீவுக் கிராமம் நான்கு பக்கமும் நீரினால் சூழப்பட்டுக் காணப்படுவதால், இங்கு கிணற்றிலிருந்து கிடைக்கும் நீர் உவர்த்தன்மையாகக் காணப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பில் பல அரசியல்வாதிகள் மற்றும் அரச அதிகாரிகள் கவனத்திற்குக் கொண்டு வந்தும் எந்தவித பலனும் கிடைக்கவில்லையென மக்கள் தெரிவிக்கின்றனர்.
வாழைச்சேனை கோறளைப்பற்று பிரதேச சபை உறுப்பினர் க.கமநேசனிடம் நாங்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க உடனடியாக எங்களது குடிநீர்ப் பிரச்சனைக்கு ஒரளவேனும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் செயற்பட்டமைக்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதாக மக்கள் தெரிவித்தனர்.
thehotline.lk




No comments:
Post a Comment