நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உலக முஸ்லிம்கள் கோபத்தால் கொதிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ள உலக முஸ்லிம்கள் கோபத்தால் கொதிப்பு

இம்முறை ரமழானில் உலகத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய மரணங்களில் ஒன்றாக சகோதரி ரஸான் (Razan – 21 வயது) இஸ்ரேலிய ஸ்னைப்பர் படைகளால் கொல்லப்பட்டுள்ளார். அலி பனாத்தின் மரணத்தை அடுத்து உலக முஸ்லிம்களால் இவரது மரணம் அதிகமாக பேசப்படுகின்றது. இரண்டு மாதங்களுக்கு மேல் ஃபலஸ்தீனியர்களால் நடத்தப்படுகின்ற கிரேட் ரிட்டர்ன் மார்ச் போராட்டத்தில் இஸ்ரேலிய படைகளால் காயமடைந்த சகோதரர்களுக்கு மருத்துவ உதவி செய்தவர் Dr. ரஸான். இவர் நேற்று, மருத்துவ உதவி செய்து கொண்டு இருக்கும் போது இஸ்ரேலிய அராஜக ராணுவத்தால் கொலை செய்யப்பட்டுள்ளார். பணியிலிருந்தபோது அவர் அணிந்திருந்த மேலங்கியைக் கட்டிக் கொண்டு அழுது கொண்டிருக்கிறார் அவரின் தாயார்.

இவ்வாறான கோர சம்பவங்களை இஸ்ரேல் நிகழ்த்தும் வேளையில் ஜெருசலத்திற்கு அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தை மாற்றியதுடன் சவூதி, பஹ்ரேன், ஐக்கிய அரபு இராச்சியம் என்பன இஸ்ரேலின் பின்னால் அணிவகுத்திருக்கின்றன.

விடாப்பிடி குணம் கொண்ட சுவிஷேச கிறிஸ்தவ யூதராக இருந்து அமெரிக்க ஜனாதிபதியான டொனால்ட் டிரம்ப் இஸ்ரேலில் உள்ள அமெரிக்காவின் தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு இடம்மாற்றினார். ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிக்கும் தனது செயற் திட்டத்தின் ஒரு முக்கிய கட்டமாக மே மாதம் 14ம் திகதி 2018ல் இந்த தூதரக இடம் மாற்றம் இடம்பெற்றுள்ளது.

சியோனிஸ யூதர்களின் ஆக்கிரமிப்புச் செயற்பாட்டுக்கு வெகுமதிகளை வழங்கும் அமெரிக்கப் பாரம்பரியத்தை டொனால்ட் டிரம்பும் சரியாகக் கையாண்டு வருகின்றார். எழுபது வருடங்களுக்கு முன்னால் இந்த யூத ஆக்கிரமிப்புத் தொடங்கிய போது அன்றைய அமெரிக்க ஜனாதிபதி ஹரி ட்ரியுமன் பலஸ்தீனத்தை கூறுபோட்டு சட்டவிரோதமாக இஸ்ரேலை அங்கு ஸ்தாபிக்கும் திட்டத்துக்கான ஐக்கிய நாடுகள் தீர்மானத்துக்கு வாக்களிக்குமாறு மூன்றாம் உலக நாடுகளை மிரட்டினார்.

1948 பிரிவினையின் போது யூதர்கள் மேற்கு ஜெரூஸலத்தின் பல பகுதிகளை அமெரிக்க மற்றும் ஐரோப்பிய ஆதரவோடு அபகரித்துக் கொண்டனர். எகிப்து, சிரியா, ஜோர்தான், லெபனான் ஆகிய நாடுகளுடன் நடந்த 1967 ஜுன் யுத்தத்தின் போது கிழக்கு ஜெரூஸலத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்துக் கொண்டது.

இப்போது சுமார் 70 வருடங்கள் கழித்து கடந்த டிசம்பரில் அமெரிக்கா தனது இஸ்ரேல் தூதரகத்தை ஜெரூஸத்துக்கு மாற்றும் என்று டிரம்ப் அறிவித்தார். அத்தோடு ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக தான் ஏற்றுக் கொள்வதாகவும் அவர் அறிவித்தார். இது அமெரிக்காவில் உள்ள இஸ்ரேல் ஆதரவு குழுவான அமெரிக்க இஸ்ரேல் பொது விவகார குழுவுக்கு ஜனாதிபதி தேர்தல் பிரசார காலத்தில் டிரம்ப் அளித்திருந்த ஒரு வாக்குறுதியாகும்.

பலஸ்தீனர்கள் வருடாந்தம் அனுஷ்டிக்கும் பேரழிவு தினத்துக்கு ஒரு தினம் முன்பதாக இந்த தூதரக இடம்மாற்றம் அமைந்துள்ளமையும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும். பலஸ்தீனர்களை அவர்களது சொந்த பூமியில் கொன்று குவித்து எஞ்சியவர்களை அங்கிருந்து விரட்டி அடித்த சம்பவம் தான் ‘நகபா தினம்’ அல்லது பேரழிவு தினம் என பலஸ்தீனர்களால் நினைவு கூறப்பட்டு வருகின்றது. இதன் மூலம் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக அமெரிக்காவும் இஸ்ரேலும் இழைத்து வரும் கொடுங்கோன்மைக்கு துணைநிற்கும் சவூதி அரேபியா உற்பட முழு முஸ்லிம் உலகின் உணர்வுகளையும் அமெரிக்க ஜனாதிபதி புறக்கணித்துள்ளார்.

இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் கூமார் 14 நூற்றாண்டு கால வரலாற்றில் இது மிகவும் வெற்கக் கேடான ஒரு தினமாகும். அது மட்டும் அன்றி இது இன்றைய மத்திய கிழக்கின் வங்குரோத்து ஆட்சியாளர்களின் பரிதாப நிலையையும் புலப்படுத்துகின்றது. ஆத்திரத்தால் கொதிக்கும் தமது மக்களின் உணர்வுகளைக் கூட வெளிப்படுத்த விடாமல் அவர்கள் மக்களின் குரல்வளையை நசுக்கி வைத்துள்ளனர்.

இந்த தூதரக இடம்மாற்றம் இடம்பெற ஒரு தினம் முன்னதாக அதாவது 13ம் திகதி ஞாயிற்றுக்கிழமை அமெரிக்க வெள்ளை மாளிகையின் சிரேஷ்ட ஆலோசகரும் டிரம்ப்பின் மருமகனுமான ஜெராட் குருஷ்னர், அவரது மனைவியும் டிரம்ப்பின் மகளுமான இவன்கா மற்றும் அவர்களோடு சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மான் ஆகியோர் இஸ்ரேலுக்கு வருகை தந்துள்ளனர். தூதரக இடம்மாற்ற உத்தியோகப்பூர்வ நிகழ்வுகளில் பங்கேற்கும் பிரதிநிதிகள் குழுவின் ஒரு அங்கமாகத் தான் அவர்களது வருகை அமைந்துள்ளது.

ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராக அங்கீகரிப்பது என்பது ஏற்கனவே அந்தப் பிராந்தியத்தில் இடம்பெற்று வருகின்ற பல்வேறு மோதல் நிலைமைகளை மேலும் மோசமடையச் செய்யும் என்பதே பலரதும் அபிப்பிராயமாகும். அது மட்டுமன்றி இஸ்ரேல் பலஸ்தீன பிரச்சினையில் ஒரு கௌரவமான தரகர் என்ற அமெரிக்காவின் பங்களிப்பையும் இந்த விடயம் முடிவுக்கு கொண்டு வந்துள்ளது.

தற்போது புறூகிங்ஸ் நிறுவனத்தில் புலனாய்வுப் பணிப்பாளராகப் பணியாற்றும் அமெரிக்க சிஐஏ யின் முன்னாள் பணிப்பாளர் புறூஸ் ரீடெல் இதுபற்றி கருத்து வெளியிடுகையில் ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான பதற்ற நிலை மேலோங்கி வருகின்ற நிலையில் இந்தப் பராந்தியத்தில், அமெரிக்க தூதரகத்தை ஜெரூஸலத்துக்கு மாற்றியதன் மூலம் பற்றி எரியும் நெருப்பில் டிரம்ப் மேலும் ஒரு தொகுதி எண்ணெயை ஊற்றி உள்ளார். இது மிகவும் ஆபத்தான ஒரு செயற்பாடாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த தூதரக இடம்மாற்றம் என்பது பலஸ்தீனர்களைப் பொறுத்தமட்டில் மிகவும் சர்ச்சைக்குரியதாகும். தமது எதிர்காலத் தலைநகரின் ஒரு பகுதியாக ஜெரூஸலம் அமைய வேண்டும் என்பதுதான் அவர்களின் நீண்ட நாள் எதிர்ப்பார்ப்பாகும். இந்த இடம் முஸ்லிம்களின் பல புனித பிதேசங்களை உள்ளடக்கியதாக இருப்பதால் உலக முஸ்லிம்களில் பெரும்பாலானவர்களின் எதிர்ப்பார்ப்பும் இதுவேதான். 

இந்த விடயம் மிகவும் உணர்வுபூர்வமான ஒன்றாக இருப்பதால் இந்த விடயம் பற்றி பேச்சு நடத்திய எல்லோருமே இதுவரை இந்த விடயத்தில் ஒரு முடிவுக்கு வரவில்லை. இறுதி சமாதானத் தீர்வு ஒன்று எட்டப்படும் போது பார்த்துக் கொள்ளலாம் என்று விட்டு வைத்துள்ளனர்.

அமெரிக்கத் தூதரகத்தை தற்போதைய இஸ்ரேல் தலநகர் டெல் அவிவ்வில் இருந்து சர்ச்சைக்குரிய ஜெரூஸலத்துக்கு மாற்ற வேண்டும் என்ற தீர்மானம் அமெரிக்க காங்கிரஸில் 1995ல் நிறைவேற்றப்பட்டது. ஆனால் அன்று முதல் அமெரிக்காவில் பதவியேற்ற எந்த ஒரு ஜனாதிபதியும் இந்த விடயத்தை தொடவில்லை. தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி அவர்கள் அந்த முடிவை கிடப்பில் போட்டிருந்தனர்.

ஆனால் இஸ்ரேலை அமெரிக்கா அங்கீகரித்து 70 வருடங்கள் பூர்த்தியாவதை முன்னிட்டு இந்த தூதரக இடம்மாற்றம் இடம்பெறுவதாக அnரிக்க ராஜாங்கத் திணைக்களம் தற்போது அறிவித்துள்ளது. இது இஸ்ரேல் ஸ்தாபிக்கப்பட்ட தினம் ஆனால் பலஸ்தீனர்களுக்கு அதுவே ஆயிரக்கணக்கான தமது மக்கள் கொல்லப்பட்ட, இலட்சக்கணக்கான தமது மக்கள் சொந்த வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்ட பேரழிவு தினம்.

முழு முஸ்லிம் உலகும் இன்று வெற்கித் தல குனிந்து நிர்க்கதி நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் காட்டுமிராண்டித் தனத்தால் பலஸ்தீனர்கள் நசுக்கப்படுகின்றனர். அபுதாபியும் மனாமாவும் இஸ்ரேலுடன் கைகோர்த்து இயல்பு நிலையை ஏற்படுத்த தயார் நிலையில் காத்திருக்கின்றன. றியாத் அந்த விடயத்தில் ஏற்கனவே அவர்களை முந்தி விட்டது.

கிறிஸ்தவ – இஸ்லாமிய குழுவின் உறுப்பினரான பிதா மெனுவல் முஸல்லாம் ஜெரூஸலத்தில் உள்ள புனிதத் தலங்களுக்கு ஆதரவானவர். ஒரு புதிய சலாஹுத்தீன் அய்யூபியால் தான் ஆக்கிரமிக்கப்பட்ட பலஸ்தீனத்தை மீண்டும் மீட்டு எடுக்க முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார். பலஸ்தீனத்தின் இன்றைய நிலை பற்றிய புதிய விடியோ காட்சிகளை வெளியிட்டு வைக்கும் போதே அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளார்.

ஜெரூஸலத்தை விடுவிப்பதற்கான வீதி காஸாவில் தொடங்கும். ஆனால் அந்த வீதியால் சென்று ஆக்கிரமிப்பில் இருந்து பலஸ்தீனத்தை விடுவிக்க ஒரு புதிய சலாஹுத்தீன் பிறக்க வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார். சுல்தான் சலாஹுத்தீன் அய்யூபி எகிப்தினதும் சிரியாவினதும் முதலாவது சுல்தானாகத் திகழ்ந்தவர். அவருடைய படைகள் சிலுவைப் படைகளின் பெரும்பாலன வீரர்களைக் கொன்று அல்லது கைது செய்து 1187ல் பலஸ்தீனத்தை விடுதலை செய்தனர்.

பலஸ்தீனத்தின் அரசியல் பிரிவுகள் அனைத்தும் இராணுவ ஆள்சேர்ப்பை கட்டாயமாக்க வேண்டும் என்று தெரிவித்துள்ள பிதா மெனுவல் முஸல்லாம் இஸ்ரேலிய இராணுவத்தின் கண்களில் படாமல் சுரங்கப் பாதை வழியாக பிரவேசித்து இஸ்ரேலியப் படை வீரர்களைக் கைது செய்து யுத்தக் கைதிகள் ஆக்க வேண்டும் என்றும் அதற்கு தான் ஆதரவளிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜெரூஸலம் நகரம் யூத மதம், கிறிஸ்தவ மதம், இஸ்லாம் ஆகிய மூன்று மதத்துக்கும் புனிதப் பிரதேசமாகும். எல்லா சமயங்களுக்கும் அங்கு முக்கியத்துவம் உள்ளது. அந்த நகரம் அதன் குடியிருப்பாளர்கள் பல நூற்றாண்டுகள் போராடிய ஒரு நகரமாகும். பிராந்திய சக்திகளும், எகிப்து, பபிலோனியா, ரோமர்கள், ஆரம்ப கால முஸ்லிம் ஆட்சியாளர்கள், சிலுவைப் படையினர், துருக்கிப் பேரரசு, பிரிட்டிஷ் சாம்ராஜ்ஜியம், தற்போதைய நவீன இஸ்ரேலியர்கள், அதன் அண்டை நாட்டு அரபு ஆட்சியாளர்கள் என பல தரப்பினர் அதிகாரத்துக்காகப் படை எடுப்பு நடத்திய ஒரு பிரதேசமே இதுவாகும்.

சவூதி அரேபிய முடிக்குரிய இளவரசர் மொஹமட்; பின் சல்மான் பலஸ்தீன விடயம் என்பது இனிமேலும் சவூதி ஆரேபியாவுக்கு முக்கியமான ஒரு விடயமாக அமையப் போதில்லை என்று தெரிவித்துள்ளதாக பத்தி எழுத்தாளர் டொக்டர் மொஹமட் சாலேஹ் அல் மிஸ்பர் குறிப்பிட்டுள்ளார். இதை ஒரு வெறுக்கத்தக்க கூற்றாக முஸ்லிம்களும் அரபிகளும் நோக்குகின்றனர். 

இந்தப் பிராந்தியத்தில் தன்னை நிலைநிறுத்திக் கொள்ளும் உரிமை இஸ்ரேலுக்கு இருப்பதாகக் கூறும் அவர் இஸ்ரேலுக்கும் சவூதி அரேபியாவுக்கும் பொதுவான பல விடயங்கள் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார். பலஸ்தீனர்களுக்கு என்ன வழங்கப்பட்டுள்ளதோ அதை அவர்கள் ஏற்றுக் கொள்ள வேண்டும் அல்லது வாயை மூடி மௌனம் காக்க வேண்டும் என்றும் சல்மான் தெரிவித்துள்ளதாக மிஸ்பர் தனது குறிப்பில் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் கைக்கூலியாக பலஸ்தீனத்தில் அதிகாரத்தில் இருக்கும் மஹ்மூத் அப்பாஸ் மீது சவூதி அரேபியா இயன்றவரைக்கும் நெருக்குதல்களைப் பிரயோகித்து வருகின்றது. மேற்கு கரைப் பகுதியில் தொடர்பற்ற நிலப்பகுதிகளை உள்ளடக்கிய இஸ்ரேல் குடியேற்றங்கள் காணப்படும் பலஸ்தீனப் பகுதிகளையும் உள்ளடக்கிய பலஸ்தீன கட்டுப்பாடு மற்றும் கிழக்கு ஜெரூஸலத்தின் புறநகர் பகுதியான பிரிவினைத் தடைக்கு அப்பால் உள்ள அபு திஸ் பகுதியை தலைநகராக ஏற்றுக் கொள்ளல் என்பனவற்றை உள்ளடக்கிய சமாதானத் திட்டத்தை ஏற்க வேண்டும் என்பதே பலஸ்தீன தரப்புக்கு கொடுக்கப்பட்டு வரும் நெருக்குதலாகும். டிரம்பின் மருமகன் குஷ்னரும் சவூதி இளவரசர் சல்மானும் இணைந்து தான் இந்தத் திட்டத்தை உருவாக்கி உள்ளதாகவும் கூறப்படுகின்றது.
சவூதி முடியாட்சிக்கு இஸ்ரேலை நோக்கி நகர வேண்டிய தேவை என்ன என்பதுதான் இங்கு முக்கியமான கேள்வி. இஸ்ரேல் பற்றி மூன்றாவது சவூதி இராஜ்ஜியத்தை நிறுவிய காலஞ்சென்ற மன்னர் அப்துல் அஸீஸ் குறிப்பிடுகையில் ‘பலஸ்தீனத்தில் சியோனிஸத்தின் ஆபத்து என்பது பலஸ்தீனர்களுக்கு மட்டும் உரியது அல்ல. அது எல்லா அரபு நாடுகளையும் அச்சுறுத்தும் ஒரு ஆபத்தாகும்’ என்று கூறியிருந்தார். 

இந்த ஆபத்து இன்றும் உயிருடன் இருக்கின்றது என்பதுதான் நாம் காணுகின்ற யதார்த்தமாகும். மேலும் அந்த ஆபத்தால் முதலாவது பாதிக்கப்படும் நாடாக சவூதி இருக்கின்றமையும் இங்கு குறிப்பிடத் தக்கதாகும். சவூதி அரேபியா இந்த உலகில் அதன் மக்களைத் தவிர வேறு யாரையும் மகிழ்விக்க வேண்டும் என்ற தேவை இல்லை என்பதே யதார்த்தமாகும்.

இன்று காணப்படுகின்ற மிகவும் வெற்கக் கேடான நிலைமை எதுவென்றால் அமெரிக்கா முஸ்லிம்களை உலகில் தேங்கிக் கிடக்கும் ஒரு குப்பையாகவே கணிக்கின்றது. ஆனால் முஸ்லிம்களின் இரு பெரும் புனிதத்தலங்களான மக்கா மற்றும் மதீனா என்பனவற்றின் காவலர்கள் என தன்னைக் கூறிக் கொள்ளும் சவூதி அரேபியா தனது இருப்புக்கும் பாதகாப்புக்கும் இஸ்லாத்தின் முதல் தர எதிரியான அதே அமெரிக்காவிடம் தான் தங்கி இருக்கின்றது.

‘ஜெரூஸலம் முஸ்லிம்களுக்கு ஒரு சிவப்புக் கோடு’ என்று தெரிவித்துள்ள துருக்கி ஜனாதிபதி எர்டொகன் ‘நாங்கள் அமெரிக்காவை மீண்டும் கண்டிக்கின்றோம். நீங்கள் இந்த நடவடிக்கையை எடுக்க முடியாது’ என்றும் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தூதரக இடம்மாற்ற தகவல்கள் வெளியானது முதல் இந்தப்பிராந்தியத்தில் பதற்றம் ஏற்பட்டுள்ளது. எல்லைப் பகுதியில் ஆறு வார காலமாக இடம்பெற்று வரும் ஆர்ப்பாட்டங்களில் இதுவரை சுமார் 92 பேர் பலியாகி உள்ளனர். இடம்மாற்றம் நிகழ்ந்த மே 14ம் திகதி 2018ல் மட்டும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்ட 56 பேர் கொல்லப் பட்டுள்ளனர். சுமார் 2700 பேர் காயம் அடைந்துள்ளனர்.

1948 மே 15ல் பலஸ்தீனம் சட்டவிரோதமாகத் துண்டாடப்பட்ட தினத்தையும் பலஸ்தீன மக்கள் தூதரக இடம்மாற்றம் இடம்பெற்ற அடுத்த தினத்தில் வழமை போல் நினைவு கூர்ந்துள்ளதால் நிலைமைகள் மேலும் மோசம் அடைந்துள்ளன.

டைம்ஸ் ஒப் இஸ்ரேல் பத்திரிகையில் மஹ்மூத் அப்பாஸை மேற்கோள் காட்டி வெளியாகியுள்ள தகவலில் இஸ்ரேலுடனான சமாதானத் தீர்வில் கிழக்கு ஜெரூஸலம் எங்களுடையதாகவும் மேற்கு ஜெரூஸலம் அவர்களுடையதாகவும் அமைந்திருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேநேரம் அப்பாஸை மேற்கோள் காட்டி அனடுலு செய்திச் சேவை வெளியிட்டுள்ள தகவலில் ‘ஜெரூஸலத்தை இஸ்ரேலின் தலைநகராகக் குறிப்பிட பலஸ்தீன நிர்வாகம் அமெரிக்க ஜனாதிபதியையோ அல்லது வேறு எவரையுமோ அனுமதிக்காது’ என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்பாஸைப் பொறுத்தமட்டில் இது வெறும் வாய் வீச்சு தான். அவரால் வேறு எதுவும் செய்ய முடியாது. இதற்கு காரணம் அதிகார சமநிலை இன்மை. அது மட்டுமன்றி இஸரேலுடன் பலஸ்தீன அதிகார சபை கொண்டுள்ள இழிநிலை உறவுகளும் அமெரிக்காவினதும் சர்வதேசத்தினதும் கோரிக்கைகளுக்கு பணிந்து செல்வதும ஆகும்.

இரு தேசங்கள் என்ற இணக்கப்பாட்டின் அடிப்படையில், அப்பாஸ் ஜெரூஸலம் துண்டாடப்படுவதை ஊக்குவிக்கின்றார். இது பலஸ்தீனர்களின் குடியேற்றவாதத்துக்கு எதிரான ஒட்டு மொத்த போராட்டத்துக்கும் முரணானதாகும். பலஸ்தீனக் கண்ணோட்டத்தில் இருந்து ஜெரூஸலத்தை வரையறை செய்ய பலஸ்தீன அதிகார சபை தவறி உள்ளமை அப்பாஸின் கருத்துக்களை ஆழமான குற்றத்துக்கு ஆளாக்குகின்றது. 

ஒரு காலணித்துவ இராணுவ ஆக்கிரமிப்பு சட்டகத்துக்கள் ஜெரூஸலத்தை கிழக்கு மேற்கு என கூறு போடுவது இஸ்ரேலுக்கு மட்டுமே நன்மையானதாக அமையும். காரணம் இஸ்ரேலிடம் தான் பெருமளவான பலஸ்தீன பிராந்தியம் உள்ளது. மேலதிக விஸ்தரிப்புக்கான வாய்ப்பை இஸ்ரேலுக்கு வழங்கும் சர்வதேச ரீதியாக திணிக்கப்ட்ட ஒரு முடிவை அப்பாஸ் பயன்படுத்துவது டிரம்ப்புக்கு எதிரான போராட்டத்தை உள்ளடக்கி இருக்காது. அதனால் ஏனைய நாடுகளும் அnரிக்காவைத் தொடர்ந்து தமது தூதரகங்களை ஜெரூஸலத்துக்கு மாற்றலாம் என்றே எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

பலஸ்தீன அதிகார சபையின் இந்த அணுகுமுறை பலஸ்தீன மக்களின் உரிமைகள் மீறப்படலாம் என்பதற்கான ஒரு எச்சரிக்கையாகவே அமைந்துள்ளது. இந்த முயற்சிதான் இஸ்ரேல் நன்மைகளை அடையக் காரணமாக இருந்த காலம் கடந்த மூலோபாயமாகும். பலஸ்தீன மக்கள் டிரம்ப்பின் முடிவை எதிர்த்து மட்டும் போராடவில்லை. அவர்கள் குடியேற்றவாத செயற்பாடுகளுக்கு எதிராகவும் போராடுகின்றனர். 

அப்பாஸை பொறுத்தமட்டில் ஜெரூஸலத்தை முன்னுரிமை கொடுத்து தெரிவு செய்வதென்பது பலஸ்தீனர்களின் உரிமைகளோடு எந்த வகையிலும் தொடர்பு படாத ஒரு விடயமாகவே உள்ளது. பாதுகாப்பான ஒரு பரப்பளவுககுள் இருந்து கொண்டு வெறுமனே புலப்படக் கூடிய ஒரு உரிமை மீறலில் தொங்கிக் கொண்டிருப்பது போன்ற ஒரு செயற்பாடே இதுவாகும். அதேநேரம் சர்வதேச சமூகம் மௌனம் காத்துக் கொண்டே ஆணையிடும் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதன் ஒரு வெளிப்பாடாகவும் இது காணப்படுகின்றது.

மீள்பார்வை செய்திகள்

No comments:

Post a Comment