உத்தேச கணக்காய்வாளர் சட்டமூலம், தகவலறியும் உரிமைக்கு எதிர் - தகவலறியும் ஆணைக்குழு முற்றாக நிராகரிப்பு - News View

About Us

About Us

Breaking

Saturday, June 2, 2018

உத்தேச கணக்காய்வாளர் சட்டமூலம், தகவலறியும் உரிமைக்கு எதிர் - தகவலறியும் ஆணைக்குழு முற்றாக நிராகரிப்பு

உத்தேச தேசிய கணக்காய்வாளர் சட்டமூலத்தின் உள்ளடக்கங்கள் தகவலறியும் உரிமை சட்டத்தை மீறும் வகையில் அமைந்திருப்பதனால் அதனை நிராகரிப்பதாக தகவலறியும் ஆணைக்குழு நேற்று தெரிவித்தது.

சட்டமூலத்தில் உள்ளடக்கப்பட்டுள்ள சில சொற் பிரயோகங்கள் நாட்டின் தகவலறியும் சட்டத்தை மீறுவதாக கடந்த ஏப்ரலில் இலங்கை ட்ரான்பேரன்ஸி இன்டர்நெஷனல் அமைப்பு உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தது. இந் நிலையில் அதே குற்றச்சாட்டை முன்வைத்து தகவலறியும் ஆணைக்குழுவும் நேற்று அறிக்கையொன்றை விடுத்துள்ளது.

இதனடிப்படையில் எவரேனும் ஒருவர் தகவல் கோரி, உத்தியோகப்பூர்வ அறிக்கையொன்றை பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்படும் வரை கணக்காய்வாளர் சேவை ஆணைக்குழுவிற்காக வேலை செய்வோர், கணக்காய்வாளர் நாயகம் அல்லது கணக்காய்வாளர் சட்டத்தின் கீழ் இயங்கும் எந்தவொரு அலுவலகமும் தகவல் வழங்குவதை நிராகரிக்க முடியுமென கணக்காய்வாளர் சட்டமூலத்தின் குறிப்பிட்டதொரு சரத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இதற்கமைய பாராளுமன்றத்தின் கோரிக்கை அல்லது நீதிமன்ற உத்தரவு ஆகியனவே இத்தகவலை பெறுவதற்கான ஒரேயொரு விதிவிலக்கு. இது மக்களின் தகவலறியும் உரிமையை மீறுவதாகவும் தகவலறியும் உரிமை சட்டத்துக்கு முரணானதாக அமையுமெனவும் தாங்கள் கருதுவதாக ஆணையாளர் தெரிவித்தார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது- மக்களின் தகவல் அறியும் உரிமையை நிலைநிறுத்துவதற்காகவே 2016 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க தகவல் அறியும் உரிமை சட்டம் இயற்றப்பட்டது. 

எனினும் சில அரச அலுவலகங்களை தகவலறியும் உரிமையிலிருந்து விலக்களிக்கும் வகையில் தற்போது சில சட்டமூலங்கள் வரையப்பட்டு வருகின்றன. இது குறித்த நிறுவனங்களின் வெளிப்படையான செயற்பாட்டை பாதிக்கும் நடவடிக்கையாகும்.

அதேவேளை இது, இலங்கை மக்களுக்கு கிடைத்துள்ள தகவல் சுதந்திரத்தை கேள்விக்குறியாக்கியுள்ளது. அத்துடன் இது தகவலறியும் உரிமை சட்டத்துக்கு உள்ள அங்கீகாரத்தையும் கேள்விக்குறியாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment