காஸா பகுதியில் பலஸ்தீனியர்களை இஸ்ரேல் நடத்தும் விதம் காரணமாக எழுந்த அரசியல் அழுத்தங்களை அடுத்து இஸ்ரேலுடன் விளையாட இருந்த கால்பந்து உலக கோப்பை பயிற்சி விளையாட்டு போட்டி ஒன்றை ஆர்ஜென்டீனா ரத்துச் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அர்ஜென்டீனா வீரர் கொன்ஸாலோ ஈஎஸ்பினிடம் செவ்வாய்க்கிழமை இந்த தகவலை தெரிவித்தார்.
உலகக் கோப்பை கால்பந்துப் போட்டிகள் இம்மாதம் ரஷ்யாவில் தொடங்கவுள்ளன. இதற்கு முன்னராக இஸ்ரேல் - ஆர்ஜென்டீனா இடையே நட்பு ரீதியிலான கால்பந்து போட்டி சனிக்கிழமை நடைபெற இருந்தது.
ஆனால், இஸ்ரேல்-, பலஸ்தீன நாடுகளுக்கிடையே நிலவும் பதற்ற சூழ்நிலை காரணமாக இஸ்ரேலுடன் ஆர்ஜென்டீனா அணி கால்பந்துப் போட்டியில் பங்கேற்கக் கூடாது என்று பலஸ்தீன தரப்பில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மேலும் ஆர்ஜென்டீனா வீரர் லியோனல் மெஸ்ஸிக்கு அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டன. இந்த நிலையில் இஸ்ரேல் உடனான நட்பு ரீதியிலான ஆட்டம் ரத்து செய்யப்படுவதாக ஆர்ஜென்டீனா தெரிவித்துள்ளது. இதனை இஸ்ரேல் கடுமையாக விமர்சித்துள்ளது.
இதுகுறித்து இஸ்ரேல் பாதுகாப்புத் துறை அமைச்சர் அவிடார் லெபர்மன் தனது ட்விட்டர் பக்கத்தில், ”ஆர்ஜென்டீனா ஜெரூசலத்தில் விளையாட இருந்த கால்பந்துப் போட்டியை ரத்துச் செய்துள்ளது. ஆர்ஜென்டீனா வெறுப்புக்கு சரணடைந்துள்ளது. இது அவமானம்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதேவேளை இந்த தீர்மானத்தை மேற்குக் கரையில் உள்ள ரமல்லா மக்கள் உற்சாகத்துடன் கொண்டாடித் தீர்த்தனர். பலஸ்தீனிய கால்பந்து சங்கம் ஆர்ஜென்டீனா வீரர் மெஸ்ஸிக்கும் பிற வீரர்களுக்கும் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த இரத்தின் மூலமாக இஸ்ரேலுக்கு எதிராக சிவப்பு அட்டை காண்பிக்கப்பட்டுள்ளதாக பலஸ்தீனிய கால்பந்து சங்கத்தின் தலைவர் ஜிப்ரீல் ரஜோப் தெரிவித்துள்ளார்.
அவாஸ் என்ற அமைப்பு இஸ்ரேலுடன் ஆர்ஜென்டீனா விளையாட கூடாது என்று பிரசாரம் செய்து வந்தது. இந்த அமைப்பு ஆர்ஜென்டீனாவின் முடிவினை 'நெறி சார்ந்த துணிச்சலான முடிவு' என்று வரவேற்றுள்ளது.
கடந்த மார்ச் முதல் காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை எதிர்த்து பலஸ்தீனர்கள் நாள்தோறும் பேரணி மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்களுக்கு எதிராக இஸ்ரேல் அரசு தூப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்டு வருகிறது. இதில் இதுவரை 120க்கும் மேற்பட்ட பலஸ்தீனர்கள் பலியாகியுள்ளனர்.
Vidivelli

No comments:
Post a Comment