100 நாள் வேலைத்திட்டம் கொண்ட அரசாங்கம் ஒன்றினை அமைப்பதற்கு ஜனாதிபதி பிரதமரிடமே இறுதித் தீர்மானம் எடுக்கும் பொறுப்பினைக் கொடுத்திருந்தார். இத்திட்டத்தில் ஜனாதிபதி அதிகம் சம்பந்தப்படவில்லை. இத்திட்டத்தை அரசியலுடன் தொடர்புபடாத புத்திஜீவிகளே வகுத்தார்கள். பிரதமர் அனைவருடன் கலந்து பேசி தீர்மானம் எடுத்தார் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
நேற்று தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையிலே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் பதிலளிக்கையில், இரு கட்சிகளும் சேர்ந்து தேசிய அரசாங்கம் ஒன்றினை அமைப்பதைத் தவிர எமக்கு மாற்று வழியிருக்கவில்லை.
சோபிததேரரின் நினைவு தின நிகழ்வில் ஜனாதிபதியின் உரையினையடுத்து கூட்டு எதிர்க்கட்சியினர் தேசிய அரசாங்கம் 2 மாதங்களுக்கு மேல் நீடிக்காது என்று தெரிவிப்பது அவர்களது கனவாகும். நாங்கள் 2020 வரை எமது பயணத்தைத் தொடர்வோம். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலிலும் நாமே வெற்றி பெறுவோம். இதற்காக நாம் ஒன்றிணைய வேண்டும்.
ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சுதந்திரக் கட்சிக்கும் இடையில் பிரச்சினைகள் இருந்தாலும் நாம் முரண்பட்டுக்கொண்டே தொடர்ந்து பயணிப்போம். இரு கட்சிகளும் உள்ளூராட்சி தேர்தலில் இணைந்து போட்டியிட்டால் பாரிய வெற்றியைப் பெற்றிருக்கலாம். இது தொடர்பாக நான் ஜனாதிபதியுடனும் கலந்துரையாடினேன். ஆனால் அவ்வாறு நடைபெறவில்லை என்றார்.
Vidivelli

No comments:
Post a Comment