ஓட்டமாவடி பிரதேச சபையின் 2வது அமர்வு கடந்த வியாழக்கிழமை பிரதேச சபையின் தவிசாளர் அமஸ்டீன் தலைமையில் நடைபெற்றது. இதன் போது சபையினால் மேற்கொள்ளப்பட வேண்டிய பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.
கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் இரண்டு கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட சபைக்குச் சொந்தமான நவீன சிறுவர் பூங்கா தொடர்பில் பாரிய நிதி மோசடிகள் நடைபெற்றுள்ளதாகவும், அங்குள்ள பெரும்பாலான மின்சார விளையாட்டுபகரணங்கள் செயலிழந்துள்ளதாகவும் பிரதேச சபை உறுப்பினர் மெளலவி எம். ஐ. ஹாமித் அவர்கள் தெரிவித்தார்.
சபையில் உரையாற்றும் போதே அவர் இக்கருத்துக்களை வெளியிட்டார். அவ்வூழலைக் கண்டுபிடிக்க இச்சபை ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனக் கேட்டுக்கொண்ட அவா், மேலும் சபையின் சொத்துக்கள் வீணாடிக்கப்படுவதனையும், அரசியல் கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் தேவைகளுக்காக சபையின் ஊழியர்கள் பயன்படுத்தப்படுவதனையும் எம்மால் அவதானிக்க முடிகின்றது. சபையின் ஒரு ரூபாய்க்காசாக இருந்தாலும் வீண்விரயம் செய்ய தாம் அனுமதிக்கப்போவதில்லையெனவும் குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அனைவரும் விழிப்புடன் செயற்பட வேண்டுமெனவும், சபையின் நிர்வாக எல்லைகளிலுள்ள இயற்கை வளங்கள் மற்றும் பிரதான மீன் சந்தைக்கு அருகாமையிலுள்ள சபைக்குச் சொந்தமான காணி அரசியல்வாதியொருவரின் ஆதரவுடன் கபளீகரம் செய்யப்பட்டுள்ளதாகச் சுட்டிகாட்டிய அவர், ஓட்டமாவடி பாலத்தையும் ஆற்றங்கரையையும் அண்டி பகுதிகளில் அதிகமான கண்டல் தாவரங்கள் காணப்படுகின்றது.
அப்பகுதியினை இப்பிரதேசத்தின் காணிக்கொள்ளையர்கள் சிலரால் சூறையாட முயற்சிகள் இடம்பெற்று வருவதாகவும், உடனடியாக அதனைக் கவனத்திற்கொண்டு எமது பிரதேசத்தையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்க நடவடிக்கையெடுக்க வேண்டுமென பிரேரணையொன்றினை முன்வைத்து உரையாற்றியமை குறிப்பிடத்தக்கது.
இதற்கு முன்னரும் சிறுவா் பூங்காவில் இடம்பெற்றுள்ள ஊழல் விவகாரம் தொடர்பில் ஓட்டமாவடி பிரதேச அபிவிருத்திக்குழுக்கூட்டத்தில் பல தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு, அதனை எப்.சீ.ஐ.டி (FCID) க்கு விசாரணைக்காக வழங்கத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டும், ஓட்டமாவடி பிரதேச செயலகம் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ளவில்லையென்பதும் குறிப்பிடத்தக்கது.
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment