அகில இலங்கை ஜம்மியதுல் உலமா சபை இனிவரும் காலங்களிலாவது பிறை விடயத்தில் சரியான பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும் என பிரபல சமூக ஆர்வாளர் றுஸ்வின் முஹம்மத் தெரிவித்தார்.
அவர் இது தொடர்பில் மேலும் கூறியதாவது, “பிறை தொடர்பில் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் மற்றும் சர்ச்சையான நிலைமை வலுப்பெற்று வரும் நிலையில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமா குர்ஆன் – சுன்னா அடிப்படையில் அதற்கான விசேட பொறிமுறையொன்றை அமைக்க வேண்டும்.
முஸ்லிம் சமூக நிறுவனங்கள், இயக்கங்கள் என சகல தரப்பையும் இணைத்து உலமா சபையின் தலைமையில் அது இயங்க வேண்டும். இது தொடர்பான கலந்துரையாடல்களை மார்க்க அறிஞர்கள், முஸ்லிம் புத்திஜீவிகள் என சகல தரப்போடும் மேற்கொண்டு பொறிமுறை வகுக்கப்பட வேண்டும்.
இதேவேளை, கடந்த வெள்ளிக்கிழமை அ.இ.ஜ.உலமா சபை தலைவர் அஷ்ஷேக் றிஸ்வி முப்தி கொள்ளுப்பிட்டிய ஜும்ஆ பள்ளிவாசலில் ஆற்றியிருந்த குத்பா உரையை அவதானிக்கும் போது, பிறை விடயத்தில் பிறைகுழுவோ ஏனைய தரப்போ சரியான ஒரு கட்டமைப்பைக் கொண்டிருக்கவில்லை என்ற எண்ணம் தோன்றுகின்றது.
எனவே, குர்ஆன் – சுன்னா அடிப்படையில் பிறைகுழுவில் மாற்றங்கள் செய்யப்படுவது அவசியமாகும். இல்லையெனில் உலமா சபையின் பிறை தொடர்பான அறிவிப்புக்கள் எதிர்காலத்தில் சமூகம் ஏற்றுக்கொள்ளாது போகும்.
இலங்கையில் வாழ்கின்ற பெருமளவிலான முஸ்லிம்கள் ஜம்மியதுல் உலமா சபைக்கு கட்டுப்பட்டு அதன் வழிகாட்டல்களை பின்பற்றுவபர்கள். அதிலுள்ள உலமாக்கள் சமூக அங்கீகாரம் உள்ள திறமையானவர்கள்.
இவ்வாறான நிலையில் பிறை என்கின்ற விடயத்தில் மாத்திரம் சமூகத்தில் முரண்பாடான கருத்துக்கள் நிலவுகின்றமை கவனம் செலுத்த வேண்டிய ஒரு விடயமாகும். இது தொடர்பில் ஜம்மியதுல் உலமா விசேட கவனம் செலுத்தி நிரந்தர தீர்வொன்றை எடுக்க வேண்டும் – என்றார்.

No comments:
Post a Comment