உயர் கல்வி அமைச்சர் விஜயதாச மீது சீறுகிறார் முன்னால் முதலமைச்சர் நஸீர் அஹமட் - News View

About Us

About Us

Breaking

Sunday, June 10, 2018

உயர் கல்வி அமைச்சர் விஜயதாச மீது சீறுகிறார் முன்னால் முதலமைச்சர் நஸீர் அஹமட்

தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பில், அமைச்சர் விஜயதாச ராஜபக்‌ஷ தெரிவித்திருந்த கருத்துக்குக் கண்டனம் தெரிவித்துள்ள, கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமட், அவர் அமைச்சராக இருப்பது, நாட்டுக்கே வெட்கக்கேடானது என்றும் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, (10) ​வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே, இனத்துவேசக் குற்றச்சாட்டுகளையும், அமைச்சர் மீது முன்வைத்துள்ளார்.

"விரிவுரையாளர்களுக்குப் பாலியல் இலஞ்சம் கொடுத்தே, தென்கிழக்குப் பல்கலைக்கழக மாணவிகள், பரீட்சைகளில் சித்தி​யடைகின்றனர் என, நாடாளுமன்றத்தில் அமைச்சர் கூறியிருந்தமை, கண்டிக்கத்தக்கது. இனவெறுப்பைப் பகிரங்கமாகப் பிரதிபலிக்கும் ஒருவர், நல்லாட்சியில் இருப்பது, நாட்டுக்கே அவமானமானது" என்று, முன்னாள் முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்த நாட்டின் சகவாழ்வை விரும்பும் ஒரு பிரஜை என்ற ரீதியில், தான் இதை வன்மையாகக் கண்டிப்பதாகத் தெரிவித்த அவர், அமைச்சரின் கருத்தை அறிவீனமானது எனவும் அடிப்படையற்றது எனவும் வர்ணித்ததோடு, இக்கருத்து, தென்கிழக்குப் பல்கலைக்கழக கல்விச் சமூகத்துக்கு மட்டுமல்ல, இந்த நாட்டின் ஒட்டுமொத்த பெண் குலத்துக்குமே வந்த இழுக்காகும் என்றும் கூறியுள்ளார்.

தென்கிழக்குப் பல்கலைக்கழகம், மறைந்த தலைவர் அஷ்ரப்பின் தூரநோக்குச் சிந்தனையில் உருவானது என்பதையும், முஸ்லிம்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பிராந்தியத்தில் அப்பல்கலைக்கழகம் அமைந்திருந்தாலும், சிங்கள, தமிழ், முஸ்லிம் சமூகங்களைச் சேர்ந்த பௌத்த, இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சமயங்களைப் பின்பற்றும் சகல இன மாணவர்களும் கல்வி கற்கிறார்கள் என்பதையும் முன்னாள் முதலமைச்சர் சுட்டிக்காட்டினார்.

மாணவர்களைப் போலவே, விரிவுரையாளர்களும் அனைத்து இன, சமூக, மதங்களைச் சேர்ந்தவர்கள் எனக் குறிப்பிட்ட முன்னாள் முதலமைச்சர், "ஆகவே, இனவெறுப்புவாதியான விஜேதாஸ ராஜபக்‌ஷவின் கருத்து, இந்த நாட்டின் அனைத்து சமூகங்களையும் இழித்துரைப்பதாகவே அமைந்துள்ளது" என்று சாடினார்.

பொறுப்புவாய்ந்த நிலையிலுள்ள அமைச்சர், பொறுப்புணர்ச்சியற்றும் இழிவாகவும் சிந்திக்கிறார் எனவும், அது பொருத்தமான ஒன்றல்ல என்றும் குறிப்பிட்ட அவர், அரசாங்கத்தால் அவருக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள், மீள்பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் கோரினார்.

தொடர்ந்து, "உயர்கல்வி மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சராகவுள்ள ஒருவர், நாட்டின் உயரிய சபையில், அறிவீனமாக, பெண்களை இழிவுபடுத்தியிருப்பது, சரித்திரத்தில் இதுவே முதல் தடவையாகும்.

"எனவே, நாட்டின் சரித்திரமாகப் பதிவாகியுள்ள இந்த அமைச்சரின் அசிங்கமான அறிக்கையை, ஹன்சார்ட்டிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அமைச்சரின் கூற்றுக்கு, இந்த நாட்டிலுள்ள பெண்கள் உட்பட சகவாழ்வையும் கண்ணியத்தையும் விரும்பும் அனைவரும் உடனடியாக எதிர்வினையாற்ற வேண்டும்" என்றும் அவர் கோரியுள்ளார்.

No comments:

Post a Comment