கிழக்கு மாகாணத்தில் கல்வித்தரத்தை மேம்படுத்தும் நோக்கில் 12 உதவிக்கல்வி பணிப்பாளர்களுக்கு நியமனம் வழங்கும் நிகழ்வு கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகமவினால் கடந்த வௌ்ளிக்கிழமை (08) வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் தமிழ் மொழி மூலம் 10 பேருக்கும் சிங்கள மொழி மூலமாக இருவருக்கும் இந்நியமனம் வழங்கி வைக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.
இந்நிகழ்வின் போது கிழக்கு மாகாண ஆளுநர் செயலாளர் அசங்க அபேவர்தன கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ஜே.கே.ஜி.முத்துபண்டா மற்றும் இணைப்புச்செயலாளர் நிமால் சோமரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன் போது நியமனம் பெறுபவர்களுடன் உரையாற்றும் போது கிழக்கு மாகாண ஆளுநர் ரோஹித போகொல்லாகம
இலங்கையில் கல்வித்துறையில் கிழக்கு மாகாணம் ஒன்பதாவது இடத்தில் இருப்பதாகவும் எதிர்வரும் காலங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் கணிப்பீடு நிகழ்ச்சியின் போது கிழக்கு மாகாணம் கல்வித்துறையில் முன்னேற்றம் கண்டுள்ளதாக அறிவிக்கப்பட வேண்டுமெனவும் நியமனம் பெறுபவர்கள் மிக கரிசனையுடன் கடமையாற்ற வேண்டுமெனவும் ஆளுநர் ரோஹித போகொல்லாகம இதன் போது கோரிக்கை விடுத்தார்.
கிழக்கு மாகாணத்தில் கல்வி நிர்வாக சேவை போட்டிப்பரீட்சையில் சித்தியடைந்த உங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் கிழக்கு மாகாண கல்வி அபிவிருத்தி நடவடிக்கைக்காக தன்னுடன் இனைந்து செயற்படுமாறும் ஆளுநர் குறிப்பிட்டார்.
அப்துல் சலாம் யாசீம்



No comments:
Post a Comment