குடியிருப்புப் பிரதேசத்தில் ரெஸ்டோரன்ட் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு நேரில் சென்று பார்வையிட்டார் மாவை சேனாதிராஜா (பா.உ) - News View

About Us

About Us

Breaking

Sunday, June 3, 2018

குடியிருப்புப் பிரதேசத்தில் ரெஸ்டோரன்ட் அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்பு நேரில் சென்று பார்வையிட்டார் மாவை சேனாதிராஜா (பா.உ)

யாழ்ப்பாணம் பிரதேச செயலக எல்லைக்குள் ஜே 87ம் பிரிவின் கீழ் ஜின்னா வீதி, கலீமா ஒழுங்கையில் மக்கள் குடியிருப்புப் பிரதேசங்களில் மினி ரெஸ்டோரன்ட் மற்றும் லொட்ஜ் அமைப்பதற்கு மேற்கொள்ளப்படும் முயற்சிகளைத் தொடர்ந்து அப்பிரதேச மக்கள் தமது பகிரங்க எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர். 

இந்நிலையில் குறித்த ஹோட்டலை அமைப்பதற்கான முயற்சிகள் வேறுவழிகளில் முன்னெடுக்கப்படுவதாக பிரதேச மக்கள் தெரிவித்திருந்தனர்.

இதற்கமைவாக 13ம் வட்டாரத்தின் யாழ் மாநகர முதல்வரின் பிரத்தியேக இணைப்பாளர் ஜனாப் ஏ.ஜி.நௌபர் அவர்களின் விஷேட அழைப்பிற்கிணங்க கௌரவ மாவை சேனாதிராஜா (பா.உ) அவர்களும் வடக்கு மாகாண சபை உறுப்பினர் கௌரவ அய்யூப் அஸ்மின் ஆகியோர் குறித்த பிரதேசத்திற்கு நேற்றைய (03-06-2018) தினம் விஷேட விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.

இதன்போது குறித்த பிரதேச மக்கள் குறித்த ரெஸ்டோரன்ட் அமைக்கப்படுவதற்கான ஆரம்பக் கட்ட வேலைகள் முன்னெடுக்கப்படுவதாகவும், கொழும்பில் இருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்த்தர் துவாரகேஸ்வரன் என்பவரே தற்போதைய நிர்மானப் பணிகளைப் பொறுப்பெடுத்துள்ளதாகவும் 20க்கும் மேற்பட்ட அடியாட்கள் குறித்த பிரதேச மக்களை அச்சுறுத்தும் வகையில் மோட்டார் சைக்கிள் மற்றும் ஆட்டோக்களில் குறித்த காணிக்கு அருகில் தரித்திருப்பதாகவும் அடிக்கடி பொலிஸாரும் புலனாய்வுத்துறையினரும் குறித்த பிரதேசத்திற்கு வந்து செல்வதாகவும் தெரிவித்தனர். 

இது ஒரு பாரிய அச்சுறுத்தல் மிகுந்த நிலையாகவும், இனரீதியான கலவரமொன்றை நோக்கியே முன்னெடுப்புக்கள் மேற்கொள்ளப்படுவதாகவும் மக்கள் அச்சம் வெளியிட்டனர்.
இந்நிலையில் யாழ் மாநகர சபை அதிகாரிகளுக்கு நகர அபிவிருத்தி அதிகார சபையினர் குறித்த விடயத்தில் தலையீடு செய்ய வேண்டாம் என அறிவுறுத்தியிருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது. 

இப்பிரதேசத்திற்கு வருகை தந்து பார்க்கின்றபோதே இப்பிரதேசம் செறிவான மக்கள் குடியிருப்புப் பிரதேசம் என்பதும், இவ்விடம் ரொஸ்டோரன்ட் அமைப்பதற்குப் பொறுத்தமற்ற இடம் என்பதும் புலனாகின்றது. இந்தத் திட்டம் எமக்கு பலத்த சந்தேகங்களையும் ஏற்படுத்துகின்றது என கௌரவ மாவை சேனாதிராஜா அவர்கள் பிரதேச மக்களிடம் தெரிவித்தார். 

அத்தோடு அவர் இதனை எமது அரசியல் உயர் மட்டங்களோடு பேசி முடிவுக்குக் கொண்டுவருவதற்கு முயற்சிப்போம், முடியாவிட்டால் சட்ட ரீதியாக இதனை நிறுத்துவதற்கு நீதிமன்றத்தினூடாக நடவடிக்கை எடுப்போம் என்றும் தெரிவித்தார்.

இப்பிரதேசத்தில் முஸ்லிம்கள் முன்னர் வாழ்ந்தாலும் இப்போது தமிழ் மக்களே அதிகம் வாழ்கின்றார்கள் இதற்குப் பின்னால் புலனாய்வுத்துறையினரும், தேசியக் கட்சிகளினதும் பிரதிநிதிகள் செயற்படுவதும் எமக்கு வேறு செய்திகளையே தருகின்றன. எனவே இதற்கு துரிதமான தீர்வொன்றினைக் காண முயற்சிப்போம் என்றும் அவர் பிரதேச மக்களிடம் தெரிவித்தார்.

No comments:

Post a Comment