குழு மோதலைத் தடுக்க முற்பட்ட பொலிஸாரை தாக்க வந்தோர் மீதே சூடு - சம்பவம் குறித்து பொலிஸார் விபரிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

குழு மோதலைத் தடுக்க முற்பட்ட பொலிஸாரை தாக்க வந்தோர் மீதே சூடு - சம்பவம் குறித்து பொலிஸார் விபரிப்பு

இரு குழுவினருக்கிடையில் இடம்பெற்ற மோதலைக் கண்ணுற்ற பொலிஸார் அதனைத் தடுக்கச் சென்றபோது, பொலிஸாரை வாளால் வெட்ட முற்பட்டனர். இதன் போதே துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும், காயமடைந்த இளைஞர் ஒருவர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேநேரம், பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளாவிட்டிருந்தால் மற்றக் குழுவினர் தம்மை வாளால் வெட்டியிருப்பார்கள் என காயமடைந்து போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் வாக்குமூலம் அளித்திருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸார் கூறுகின்றனர். 

இது தொடர்பான விசாரணைகளை தெல்லிப்பளைப் பொலிஸார் மேற்கொண்டிருப்பதாக பொலிஸ் பேச்சாளர் குறிப்பிடுகின்றார்.

தெல்லிப்பளைப் பகுதியில் கிணற்றில் வீழ்ந்து உயிரிழந்த பெண் ஒருவரின் மரண விசாரணைக்காக தெல்லிப்பளைக்குச் சென்றுகொண்டிருந்த இரு பொலிஸார், மல்லாகம் பகுதியில் இளைஞர்கள் குழுக்களுக்கிடையில் மோதல் இடம்பெறுவதைக் கண்ணுற்றுள்ளனர். 

இவர்கள் செல்லும்போது இளைஞர் ஒருவரை நிலத்தில் தள்ளி மற்றொருவர் வாளால் வெட்டுவதற்கு முயற்சித்துள்ளார். அதேநேரம், மற்றொருவர் பொலிஸாரை வாளால் வெட்டச் சென்றதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர கூறினார்.

இதன் பின்னரே பொலிஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர். இதன் பிரதிபலனாக அங்கிருந்த 33 வயது இளைஞர் உயிரிழந்தார். மற்றுமொருவர் காயமடைந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

இளைஞர்களின் வாள் வெட்டுக்கு இலக்கான மோட்டார் சைக்கிள் ஒன்று பொலிஸாரின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டிருப்பதுடன், இச்சம்பவம் தொடர்பில் ஐவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

உயிரிழந்த இளைஞரின் சடலம் பிரேதப் பரிசோதனைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து மல்லாகம் பகுதியில் பதற்றநிலை நீடித்து வருகிறது.

பிரதான வீதிகளில் பொலிஸாரும், விசேட அதிரடிப்படையினரும் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டிருப்பதையும் அவதானிக்க முடிந்தது. இது இவ்விதமிருக்க பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் நடத்தாவிட்டால் மற்றைய குழுவினர் தம்மை வாள்களால் வெட்டியிருப்பார்கள் என வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் இளைஞர் கூறியிருப்பதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர். இதற்கு பொலிஸார் பயணித்த முச்சக்கர வண்டியின் சாரதி சாட்சியாக இருப்பதாகவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

மல்லாகம் பகுதியில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் யாழ். குடாநாட்டில் மக்கள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மகேஸ்வரன் பிரசாத் - யாழ்ப்பாணம் 

No comments:

Post a Comment