விடுமுறை பெறாமல் தலைமறைவாகிய இராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

விடுமுறை பெறாமல் தலைமறைவாகிய இராணுவத்தினருக்கு பாதுகாப்பு வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும்

இராணுவத்தில் இருந்து விடுமுறை பெறாமல் சேவைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு பாதுகாப்பு வழங்குவது தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 

இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் அல்லது விடுமுறை பெறாமல் சேவைக்கு சமூகமளிக்காதவர்களில் சிலர் இன்னும் தலைமறைவாக இருப்பதாக இராணுவத் தலைமையகம், அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது. 

அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடம்பெறுகின்ற கொள்ளை மற்றும் சமூக விரோத செயல்களுடன் தொடர்புபட்டிருப்பதாக இராணுவத் தலைமையகம் தெரிவிக்கின்றது. 

தலைமறைவாக இருக்கும் இராணுவ வீரர்கள், பல்வேறு பகுதிகளில் வியாபாரிகள், பாதாள உலக தலைவர்கள் மற்றும் வேறு பிரிவினர்களின் ஆதரவை பெற்றுக்கொண்டு பல குற்றச் செயல்களில் ஈடுபட்டுவருவது பொலிஸ் அறிக்கைகளில் இருந்து தெரியவருவதாக இராணுவத் தலைமையகம் தெரிவித்துள்ளது. 

இவர்களின் பாதுகாப்பில் சில அரசியல்வாதிகளும், சமயத் தலைவர்களும் பல்வேறு வன்முறை செயல்களில் ஈடுபட்டு வருவதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறு இராணுவத்தில் இருந்து தப்பிச் சென்றவர்கள் அல்லது விடுமுறை பெறாமல் சேவைக்கு சமூகமளிக்காதவர்களுக்கு வேலைவாய்ப்புகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை செய்து கொடுப்பது குற்றவியல் சட்டத்தின் 133 ஆவது சரத்தின் படி தண்டனைக்குரிய குற்றமாகும் என இலங்கை இராணுவம் தெரிவித்துள்ளது. 

பொலிஸாரின் உதவியுடன் குறித்த நபர்களை கைது செய்து சட்டப்படி பதவி விலக்குவது அல்லது முகாம்களுக்கு திருப்பி அனுப்புவதற்கான நடவடிக்கைகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்படுவதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment