தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதாக கூறி மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது தொடுக்கப்பட்டிருந்த இரண்டு வழக்குகளையும் அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க மீளப்பெற்றுக்கொண்டுள்ளார்.
மௌபிம பத்திரிகை நிறுவனத்தின் மீது 1 பில்லியன் ரூபா மற்றும் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி தொடுக்கப்பட்டிருந்த மானநஷ்ட வழக்குகள் இரண்டே இவ்வாறு அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்கவால் மீளப் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொழும்பு மாவட்ட நீதிமன்றம் இந்த இரண்டு வழக்குகளையும் இன்று (07) இரத்து செய்வதாக அறிவித்துள்ளது.
2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 30 ஆம் திகதி மௌபிம பத்திரிகையில் வெளியான ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான செய்தியில் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியதற்காக 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
அத்துடன் 2016 ஆம் ஆண்டு ஜுலை மாதம் 15 ஆம் திகதி நிலக்கரி ஏற்றுமதியில் முறைகேடு ஏற்பட்டதாக கூறி வெளியிடப்பட்ட செய்தியிலும் தன்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்து அதற்காக 1 பில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்கு தொடுக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்குகள் இன்று கொழும்பு மாவட்ட நீதவான் பமில ரத்னாயக்க முன்னிலையில் விசாரணை செய்யப்பட்ட போது அமைச்சர் பாட்டலி சம்பிக ரணவக்க சார்ப்பாக முன்னிலையான வழக்கறிஞர், இந்த வழக்குகளை மீளப் பெற்றுக்கொள்ள தன்னுடைய கட்சிக்காரர் விரும்புவதாக தெரிவித்துள்ளார்.
அதன்படி குறித்த வழக்கை மீள பெற்றுக்கொள்ள அனுமதி தருமாறு மனுதாரர் சார்ப்பாக முன்னிலையாகிய வழக்கறிஞர் நீதிமன்றத்திடம் வேண்டியிருந்தார்.
இதன்போது மனுதாரர் வழக்கை மீள பெற்றுக்கொள்ள தீர்மானித்தால் அதற்கு தாங்கள் எவ்விதத்திலும் எதிர்ப்பு தெரிவிக்கப் போவதில்லை என பத்திரிகை நிறுவனத்தின் சார்ப்பாக முன்னிலையான வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
அதனடிப்படையில் குறித்த இரு வழக்குகளையும் மீளப் பெற்றுக்கொள்ள நீதிபதி அனுமதி வழங்கியுள்ளார்.

No comments:
Post a Comment