நாட்டைவிட்டு வெளியேறி பங்களாதேஷில் தஞ்சமடைந்துள்ள ரோஹிங்ய அகதிகள் மீளத் திரும்புவதற்கு முன்வந்தால் ஏழு இலட்சம் ரோஹிங்ய முஸ்லிம்களையும் ஏற்றுக்கொள்வதாக மியன்மாரின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் யூ தௌதுன் கடந்த சனிக்கிழமையன்று தெரிவித்தார்.
சிங்கப்பூரில் நடைபெற்ற பிராந்திய பாதுகாப்பு மாநாட்டின் சங்கரில்-லா கலந்துரையாடலில் ரோஹிங்யர்கள் பெரும்பான்மையாக வசித்த மியன்மாரின் ராக்கைன் மாநிலத்தில் ஐக்கிய நாடுகள் சபையின் 'பாதுகாப்பதற்கான பொறுப்பு செயற்றிட்டம்' மேற்கொள்ளபடும் பட்சத்தில் அதன் நிலைமை தொடர்பில் வினவப்பட்டபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
'பாதுகாப்பதற்கான பொறுப்பு செயற்றிட்டம்' 2005 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் உலக உச்சிமாநாட்டின்போது அங்கீகரிக்கப்பட்டது. அதில் நாடுகள் தமது சொந்த மக்கள் மீது படுகொலைகள், யுத்தக் குற்றங்கள், இனச் சுத்திகரிப்பு மற்றும் மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றச் செயல்களிலிருந்து பாதுகாப்பதற்கும், இந்த அர்ப்பணிப்பினை முன்கொண்டு செல்வதற்கு ஒவ்வொரு நாடும் ஏனைய நாடுகளுக்கு ஊக்கமும் உதவியும் வழங்குவது சுட்டுக் கடமை என்பதையும் ஏற்றுக்கொண்டன.
தன்னார்வ அடிப்படையில் 700,000 பேரும் திருப்பி அனுப்பப்படுவார்களாயின் நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருக்கின்றோம் என தௌ துன் தெரிவித்தார். இதனை இனச் சுத்திகரிப்பு எனக் கூற முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பினார்.
அங்கே யுத்தம் நடைபெறவில்லை, எனவே அங்கு யுத்தக் குற்றம் இடம்பெறவில்லை. மனிதாபிமானத்திற்கு எதிரான குற்றங்கள், அது தொடர்பில் நாம் கவனம் செலுத்தலாம், ஆனால் எமக்கு தெளிவான ஆதாரங்கள் தேவை. இந்த ஆபத்தான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட வேண்டும். மேலோட்டமாக குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.
பௌத்தர்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மியன்மாரிலிருந்து இராணுவ நடவடிக்கை காரணமாக கடந்த 2017 ஆகஸ்ட் மாதம் தொடக்கம் 700,000 ரோஹிங்ய முஸ்லிம்கள் நாட்டைவிட்டு தப்பிச் சென்றனர். இதன்போது பெருமளவில் கொலைகள், பாலியல் வன்புணர்வுகள், தீவைப்புச் சம்பவங்கள் இடம்பெற்றதாக ஐக்கிய நாடுகள் சபையும் ஏனைய உதவி வழங்கும் நிறுவனங்களும் தெரிவித்துள்ளன.
Vidivelli

No comments:
Post a Comment