கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு, மஹரகம நகர சபைக்குத் தெரிவான சுயேட்சைக்குழு உறுப்பினர்கள் 06 பேர் இராஜினாமா செய்துள்ளனர்.
குறித்த உறுப்பினர்களின் இடத்திற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இல்லத்தில் அவரது முன்னிலையில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண உறுப்பினர்கள் ஆறு பேர், பதவிப் பிரமாணம் செய்துள்ளனர்.
மஹரகம நகர சபையின் முன்னாள் தலைவர் காந்தி கொடிகார (உபால கொடிகாரவின் மனைவி) உள்ளிட்ட 06 பேரே இவ்வாறு பதவிப்பிரமாணம் செய்துள்ளனர்.
குறித்த விடயத்தை அடுத்து, ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட நகர சபை உறுப்பினர்கள், அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தமையால் நகர சபையில் பதட்ட நிலை ஏற்பட்டது. இதனையடுத்து, சபை நடவடிக்கைகளை தொடர்ந்தும் மேற்கொள்ளும் பொருட்டு அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த பெப்ரவரி 10 ஆம் திகதி இடம்பெற்ற உள்ளூராட்சி சபைத் தேர்தலில், மோட்டர் சைக்கிள் சின்னத்தில் போட்டியிட்ட சுயேட்சைக் குழு 02, 25 ஆசனங்கள் (44,783 வாக்குகள்) பெற்று மஹரகம நகரசபையைக் கைப்பற்றியிருந்ததோடு, சபையின் தலைவராக சுயாதீனக் குழு 02 இன் தலைவராக செயற்பட்ட டிராஜ் லக்ருவன பியரத்ன தெரிவு செய்யப்பட்டார்.
கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில், ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுண கட்சியினால் முன்வைக்கப்பட்ட வேட்புமனு நிராகரிக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த சுயேட்சைக் குழுவுடன் இணைந்து அவர்கள் தேர்தல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மஹரகம நகர சபைக்கு ஐ.தே.க. சார்பில் 11 உறுப்பினர்களும், ஐ.ம.சு.மு. சார்பில் 05 உறுப்பினர்களும், மக்கள் விடுதலை முன்னணி 05 உறுப்பினர்கள், சுயேட்சைக் குழு 01 ஒரு உறுப்பினர் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment