எந்தவொரு சிறிய பிரச்சினை ஏற்பட்டாலும், மாவட்ட செயலகத்தைக் குறை கூறிக்கொண்டு ஆர்ப்பாட்டத்தில் இறங்குவது ஆரோக்கியமான போக்கல்ல என மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
வந்தாறுமூலை கமநல சேவைப்பிரிவுக்குட்பட்ட விவசாயிகளுக்கு பாசனச்செய்கையின் போது செய்கை பண்ணப்பட்ட வேளாண்மைக்கான மானிய மேலதிக உர விநியோகம் வந்தாறுமூலை கமநல சேவை நிலையத்தில் வியாழக்கிழமை இன்று 07.06.2018ம் இடம்பெற்றது.
பெரும்பாக உத்தியோகத்தர் ஐ.பதூர்தீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதேச விவசாயிகள் மத்தியில் அவர் உரையாற்றினார்.
அங்கு தொடர்ந்து உரையாற்றிய அரசாங்க அதிபர், இம்முறை ஆகக்கூடுதலான உரம் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்று அவை விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன.
6940.15 மெற்றிக்தொன் தேவையாக இருந்தது. அது கிடைத்து விட்டது. அதே நேரம், மேலதிகமாகச் செய்கை பண்ணப்பட்ட வயல்களுக்கு உரம் தேவையாக இருந்தது. அந்த உரமும் இப்பொழுது கிடைக்கப் பெற்றுள்ளது.
புலுட்டுமானோடை, அடச்ச கல்குளம், அகத்தியர் குளம் போன்ற 3 குளங்கள் புனரமைப்புச்செய்துள்ள படியால் சராசரியாக 3000 ஹெக்ரேயர் நெற்செய்கை மேலதிகமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த விடயம் தேசிய உரச்செயலகத்திற்கு தெரிந்திருக்கவில்லை.
அந்த மேலதிகத் தேவைகளை அவர்களுக்குத் தெரியப்படுத்தி உங்கள் கரம் உரம் கிடைக்க வழி வகை செய்துள்ளோம். அதனையே இப்பொழுது நீங்கள் பெற்று வருகின்றீர்கள். இந்த மாவட்டத்திற்கு உரத்தேவைகளுக்காக அரசாங்கம் செலவிட்ட மொத்தத்தொகை 478 மில்லியன் ரூபாய்களாகும்.
அதே வேளை, விவசாயிகளிடமிருந்து மானியத்தொகையாகப் பெற்றுக்கொண்டது வெறுமனே 69 இலட்சம் ரூபாய்கள் மாத்திரம் தான். அரசு விவசாயத்தை மேம்படுத்த பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றது. அந்த வகையில், மட்டக்களப்பு விவசாயிகள் அரசாங்கத்திற்கு நன்றியுடையவர்களாக இருக்கிறார்கள்.
உரத்தின் விலை அதிகமாக இருந்த ஆரம்ப காலங்களில் விவசாயிகள் உரத்தை மிகவும் சிக்கனமாகப் பாவித்தார்கள். அதனால் பீடைத்தாக்கங்கள் குறைந்தளவில் இருந்தன. ஆனால், தற்போது உரம் மானிய அடிப்படையில் கிடைப்பதால் விவசாயிகள் அதிகளவான அறுவடையை எதிர்பார்த்து உரத்தை அளவுக்கதிகமாகப் பாவிக்கின்றார்கள்.
இதனால் தற்போது நெல் வயல்களில் பீடைத்தாக்கங்கள் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக, அறக்கொட்டித்தாக்கம் அதிகரித்துள்ளது.
எந்தவொரு பிரச்சினை வந்தாலும் உடனடியாக மாவட்டச்செயலகத்திற்கெதிராக அல்லது அரசாங்கத்திற்கெதிராக செயற்படத் தொடங்குவது, வீதியிலிறங்கி அதிகாரிகளுக்கெதிராகப் போராடுவது அண்மைக்காலமாக இடம்பெற்று வரும் போக்காகவுள்ளது.
இது அதிகாரிகளுக்கும், பயனாளிகளான மக்களுக்குமிடையில் அநாவசியமான முரண்பாடுகளைத் தோற்றுவிக்கும். இத்தகைய எதிரும் புதிருமான நிலைப்பாடுகளால் ஆன பயன் ஏதுமில்லை. கடந்த கால நிலைமை தற்போதைக்கில்லை. ஆனால், சில குறைபாடுகள் இருக்கலாம் அதனை உரிய முறையில் அணுக வேண்டும்.
இந்நிகழ்வில் கிரான்புல் அணையை மீண்டும் புனரமைத்தால் தான் பிரதேச விவசாயிகள் நனமையடைய முடியுமென அரச அதிபரிடம் விவசாயிகள் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இது விடயமாக நீர்ப்பாசத்திணைக்களத்துடன் தொடர்பை ஏற்படுத்தி விடயத்தை அணுகுகின்றோம் என்று அரச அதிபர் உறுதியளித்தார்.
இந்நிகழ்வில், தேசிய உரச்செயலகத்தின் மட்டக்களப்பு மாவட்ட உதவிப்பணிப்பாளர் கே.எல்.எம். ஷிராஜுன் உட்பட அதிகாரிகளும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.
thehotline.lk







No comments:
Post a Comment