வாழைச்சேனையில் கல்குடா தௌஹீத் ஜமாஅத்தினருக்குச் சொந்தமான பள்ளிவாயல் மற்றும் அங்கு வணக்க வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தவர்கள் மீதும் கடந்த 04.06.2018ஆம்திகதி திங்கட்கிழமை நடாந்தப்பட்ட தாக்குதல் சம்பவத்தையடுத்து, அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமாவின் கொழும்பு தலைமையகத்திலிருந்து விஷேட குழுவினர் நேற்று புதன்கிழமை வாழைச்சேனைக்கு அவசர விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர்.
இத்தாக்குதல் சம்பவத்தின் பின்னணி குறித்தும் இது தொடர்பாக முன்வைக்கப்பட்டு வரும் கருத்துக்கள் குறித்தும் மூன்று கட்டப்பேச்சுவார்த்தையில் அவர்கள் ஈடுபட்டனர்.
தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்று கூறப்படும் நபர்களையும், வாழைச்சேனையிலுள்ள எட்டு பள்ளிவாயல்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நிருவாக சபையினரை வாழைச்சேனை முகைதீன் ஜும்ஆப்பள்ளிவாயளிலும், இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்ட நபர்களையும் கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் முக்கியஸ்தர்களையும் கல்குடா தௌஹீத் ஜமாஅத்தின் தலைமையகமான மீராவோடை தாருஸ்ஸலாம் ஜூம்ஆப் பள்ளிவாயலிலும், உலமா சபை கல்குடாக்கிளையினரையும் சந்தித்து கலந்துரையாடினர்.
இச்சந்திப்பானது, சம்பவத்துடன் தொடர்புடைய இரு தரப்பினருக்கிடையில் தனித்தனியே இடம்பெற்றது.
இதன் போது, அகில இலங்கை ஜம் இய்யதுல் உலமா சபை தலைமையகத்திலிருந்து எம்.காசிம் மதனி, எஹிய்யா பலாஹி, அப்துல் முக்சித் பாசி, அஹ்லம் என முக்கிய உறுப்பினர்களும், கல்குடாக்கிளையின் சார்பில் அதன் தலைவர் இஸ்மாயில் பஹ்ஜி, செயலாளர் இஸ்ஸத் நஹ்ஜி, எம்.ரீ.எம்.றிஸ்வி மஜீதி, எம்.எம்.தாஹிர் காமி உள்ளிட்ட முக்கிய உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
இப்பேச்சுவார்த்தைகளின் போது, இருதரப்பினரும் தமது இரு பக்க நியாயங்களை ஜம்இய்யதுல் உலமாவின் தலைமையகக் குழுவினரிடம் முன்வைத்தனர்.
இதன் போது, தப்லீக் ஜமாஅத்தினரே! இப்பிரச்சினையின் சூத்திரதாரிகள் என்று வெளிவந்த சில பத்திரிகை மற்றும் இணையத்தள செய்திகள் குறித்த விடயத்தில் கருந்துக்கள் முன்வைக்கப்பட்டன. இவ்வாதம் தவறானதெனச்சுட்டிக் காட்டப்பட்டதுடன், இவ்வாதம் ஒட்டு மொத்த தப்லீக் ஜமாஆத்தினரின் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலல்ல என்ற கருத்து முன்வைக்கப்பட்டது.
மேலும், தப்லீக் ஜமாஅத்தின் பணிகளில் ஈடுபட்டுக்கொண்டிருக்கும் ஒரு சில உலமாக்களினால் இதன் பாரதூரத்தினை விளங்கிக் கொள்ளாமல் மேற்கொள்ளப்பட்ட பிழையான நடவடிக்கையென்ற கருத்து தௌஹீத் ஜமாஅத்தினர்களுக்கிடையில் இடம்பெற்ற சந்திப்பின் போது முன்வைக்கப்பட்டு, அதனை அச்சபையோரினால் ஏற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இத்தாகுதலில் கல்குடா ஜம்இய்யதுல் உலமா சபையின் முக்கிய உறுப்பினர்கள் கலந்து வழிநடாத்தினர் என்ற விடயம் தொடர்பாகவும் ஆராயப்பட்டது. அதன் போது, இச்சம்பவத்திற்கும் உலமா சபைக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்று வலியுறுத்தப்பட்டதுடன், மேலும் கல்குடாக்கிளை அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையில் இந்நடப்பாண்டுக்கான நிருவாக சபையில் அங்கம் வகிக்கும் இரு உலமாக்களே இச்சம்பவத்தின் சூத்திரதாரிகள் என்ற விடயம் ஏற்றுக்கொள்ளப்பட்டது. இவர்களுக்கெதிராக ஜம்இய்யதுல் உலமா சபை ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமென உலமா சபையினர் தெரிவித்தனர்.
இதன் போது, தலைமையக ஜம்இய்யது உலமா சபையின் சார்பில் கலந்து கொண்ட குழுவினர் இரு தரப்பிடமும் பணிவான வேண்டுகோளொன்றினை விடுத்துள்ளனர். நோன்புப்பெருநாளின் பின்னர் சம்பவங்களுடன் தொடர்புடைய இரு தரப்பினரையும் கல்குடா கிளை உலமா சபையினரையும் அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா சபையின் கொழும்பு தலைமையகத்திற்கு அழைத்து, சுமூகமான பேச்சுவார்த்தையொன்றினை நடாத்தி, இதற்கு நிலையான தீர்வினைக் காண்பதற்கு உள்ளதால், இவ்வாறான விடயங்களிலிருந்து தவிர்ந்து கொள்வதுடன், ஒற்றுமையுடன் செயற்படுமாறும் அனைவரையும் கேட்டுக்கொண்டனர்.
இத்தாக்குதல் சம்பவம் தொடர்பில் வாழைச்சேனைப் பொலிசார் நீதி மன்றத்தில் வழக்கொன்றினைத் தாக்கல் செய்து வழக்கு இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.ரீ.எம்.பாரிஸ்






No comments:
Post a Comment