சுதாகரன் விடுதலைக்காக 3 இலட்சம் கையெழுத்து - ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Monday, June 18, 2018

சுதாகரன் விடுதலைக்காக 3 இலட்சம் கையெழுத்து - ஜனாதிபதியிடம் கையளிப்பு

சிறுவர்களைப் பாதுகாப்போம் தேசிய செயல் திட்டம் தொடர்பான ஜனாதிபதியின் கிளிநொச்சி மாநாட்டின் போது ஆனந்த சுதாகரனை விடுவிக்க கோரி 3 இலட்சம் கையெழுத்துக்களை பெற்ற மகஜர் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டுள்ளது. 

கிளிநொச்சியில் நேற்று (18) நடைபெற்ற நிகழ்வில் வட மாகாணக் கல்வி அமைச்சர் கந்தையா சர்வேஸ்வரன் இந்த மகஜரை ஜனாதிபதியிடம் கையளித்தார். 

தாயை இழந்து, தந்தை சிறையில் அடைக்கப்பட்டு, குழந்தைகள் அனாதரவாக்கப்பட்டு உறவினர்களின் அனுசரணையில் வாழும், இரு சிறுவர்களின் ஆரோக்கியமான மற்றும் பாதுகாப்பான எதிர்காலத்தை உத்தரவாதம் செய்யும் வகையில் அரசியல் கைதியான ஆனந்த சுதாகரன் ஜனாதிபதியின் கருணை அடிப்படையில் விடுவிக்கப்பட வேண்டும் என இந்த கையெழுத்துக்கள் பெறப்பட்டுள்ளன. 

எனினும் அவரது விடுதலையை உறுதிப்படுத்தும் வகையில் மேலும் வலியுறுத்தல்கள் தேவை என்ற அடிப்படையில் இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் வட மாகாணக் கல்வி அமைச்சின் அனுசரணையுடன், வட மாகாண கல்விச் சமூகமாகிய கல்விமான்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஆகியோரிடம் இருந்து 3 இலட்சம் கையொப்பங்களைப் பெற்று ஜனாதிபதிக்குச் சமர்ப்பிக்கும்படி வட மாகாணக் கல்வி அமைச்சரிடம் கையளித்திருந்தனர். 
இதனை நேரடியாக ஜனாதிபதியிடம் கையளிக்கும் பொருட்டு, அதற்கான நேரம் ஒதுக்கித் தருமாறு ஜனாதிபதியிடம் கோரிக்கைகள் அனுப்பப்பட்ட போதும் அது கைகூடவில்லை. 

எனினும் ஜனாதிபதி கிளிநொச்சிக்கு நேற்று வருகை தந்த போது, 3 இலட்சம் கையெழுத்துப் பிரதிகள் அடங்கிய மனுக்களைக் கையளிப்பது பொருத்தமாக இருக்கும் என்ற அடிப்படையில் வட மாகாண ஆளுநரின் ஊடாக இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டது. 

கிளிநொச்சியில் மேற்குறிப்பிட்ட நிகழ்வில் ஆனந்த சுதாகரனை விடுதலை செய்யக் கோரி 3 லட்சம் கையெழுத்துக்கள் மாகாணக் கல்வி அமைச்சரினதும், இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தினரதும் கோரிக்கைக் கடிதங்களுடன் கூடிய மனு ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது. 

இதனைப் பெற்றுக் கொண்ட ஜனாதிபதி இவ்விடயத்தில் அக்கறையுடனேயே இருப்பதாகவும், அதனை நோக்கி தாம் செயற்பட்டு வருவதாகவும், நம்பிக்கையை ஏற்படுத்தும் பதிலை வட மாகாணக் கல்வி அமைச்சரிடம் வழங்கியிருந்தார். 

கிளிநொச்சி  நிபோஜன்

No comments:

Post a Comment