ஓட்டமாவடி பிரதேச சபையின் 2வது அமர்வு பிரதேச சபைத்தவிசாளர் ஐ.ரீ.அமஸ்டீதீன் தலைமையில் கடந்த வியாழக்கிழமை மே 31 சபை கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
இதன் போது, நிதி, கொள்கை உருவாக்கம், வீடமைப்பு, சமூக அபிவிருத்தி, தொழில்நுட்ப மற்றும் சுற்றாடல் வாழ் வசதிகள் என நான்கு குழுக்கள் ஒரு குழுவிற்கு மூன்று பிரதேச சபை உறுப்பினர் என்ற வீத அடிப்படையில் அங்கத்தவர்கள் தெரிவு செய்யப்பட்டனர்.
அதனைத்தொடர்து சபையின் பணிகள் குறித்து ஆராயப்பட்டது. சுமார் ஐந்து மணி நேரம் நடைபெற்ற இவ்வமர்வின் போது, பல்வேறு விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டது.
இதன் போது பொது மக்களுக்குத் தெரியாத பல திடுக்கிடும் உண்மைச்சம்பவங்களும் வெளிவந்தன. தேர்தல் மற்றும் ஏனைய காலங்களில் பல்வேறு விமர்சனத்திற்குள்ளாக்கப்பட்டு வந்த சுமார் இரண்டு கோடி ரூபாய் பெறுமதியான நீர் சுத்திகரிப்பு இயந்திரம்; பற்றிய பிரரேணையை பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர் ஆசிரியர் முன்வைத்து உரையாற்றினார்.
இவ்வுபகரணம் மர்மமான முறையில் காணாமல் போய்யுள்ளது. இதற்கு விடை காண வேண்டிய பொறுப்பு எம்மனைவருக்கும் உள்ளது எனக்கேட்டுக்கொண்ட அவர், மேலும் உரையாற்றினார்.
சுனாமி அனர்த்ததினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீரினைச்சுத்திகரித்து வழங்குவதற்காக அரச சார்பற்ற நிறுவனமொன்றினால் மட்டக்களப்பு உள்ளூராட்சி உதவி ஆணையாளர் அலுவலகத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
அந்நீர் சுத்திகரிப்பு கருவியினை வாகரை, வாழைச்சேனை போன்ற பகுதிகளில் சுனாமியினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சுத்தமான நீரினை வழங்குவதற்காக அவசர காலத்தில் ஒரு மத்திய நிலையமாக கருதி வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலையில் பொருத்தப்பட்டுள்ளது.
அதனை ஓட்டமாவடி பிரதேச சபை பராமரிப்பதற்கும் கண்காணிப்பதற்குமாக சபையினால் பாதுகாப்பு ஊழியர்களும் நியமிக்கப்பட்டிருத்தனர். அதற்கான உரிமையை உள்ளூராட்சி உதவி ஆனையாளர் அலுவலகம் வழங்கியிருந்தது.
இருப்பினும், காலப்போக்கில் இந்த நீர் சுத்திகரிப்பு இயந்திரம் மர்மமான முறையில் காணாமல் போய்யுள்ளதாகவும், அதனை கடந்த மஹிந்த ராஜபக்ஷ அரசாங்க காலத்தில் அவரின் நெருங்கிய உறவினராகக்கூறப்பட்டு வரும் கடதாசி ஆலையின் தவிசாளராக இருந்த நபரொருவர் திருடி விற்றுள்ளதாகவும், அவ்வுபகரணத்தை மீளளிக்குமாறு பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் கே.பீ.எஸ்.ஹமீட் அவர்களினால் அக்காலப்பகுதியில் கையொப்பமிடப்பட்ட உத்தியோகபூர்வ கடிதம் பிரதேச சபையினால் முன்னாள் கடதாசி ஆலையின் தவிசாளருக்கு வழங்கப்பட்ட போதிலும், அதனை மீளளிக்க மறுத்ததாகவும் தெரிய வருகிறது.
இவ்வியந்திரமானது, ஓட்டமாவடி பிரதேச சபைக்குச் சொந்தமானதென பிரதேச சபை உறுப்பினர் எஸ்.ஐ.அன்வர் ஆசிரியர் அவர்களினால் குற்றசாட்டுகள் முன்வைக்கப்பட்டது.
இது குறித்து கடந்த காலங்களில் வாழைச்சேனை பொலீஸ் நிலையத்தில் பிரதேச சபையினால் கடதாசி ஆலையின் முன்னாள் தவிசாளருக்கெதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.
இதனை உரிய முறையில் ஆராய குழு அமைத்து நடவடிக்கையெடுக்க பிரரேணை நிறைவேற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பல வாதப்பிரதிவாதங்களும் இடம்பெற்றதுடன், மக்கள் நலத்திட்டங்கள் சபை உறுப்பினர்களால் முன்வைக்கப்பட்டு அதற்கு தீர்வுகளும் காணப்பட்டது, சுமூகமான முறையில் சபையின் அமர்வு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
எம்.ரீ.எம்.பாரிஸ்
No comments:
Post a Comment