வெள்ளம் வடிந்தபின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது விசேட செயலணிக்கு பணிப்புரை - News View

About Us

About Us

Breaking

Thursday, May 24, 2018

வெள்ளம் வடிந்தபின் சுத்தப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபடுமாறு அமைச்சர் ரவூப் ஹக்கீம் தனது விசேட செயலணிக்கு பணிப்புரை

தற்பொழுது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளம் வழிந்தோடிய பின்னர் அதிகம் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள கிணறுகளை இரைத்து சுத்தப்படுத்துவதோடு, ஏனைய நீர் மூலங்களையும் தூய்மைப்படுத்தும் பணியில் தமது பணிப்பின்கீழ் அமைக்கப்பட்டுள்ள தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் விஷேட செயலணி தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடுமென ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

சென்ற ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கின் போதும் இந்த விஷேட செயலணியினர் கொழும்பு மற்றும் தென் மாகாணத்தில் ஏற்பட்ட பாரிய வெள்ளப்பெருக்கின்போது துப்புரவு நடவடிக்கைகளை மேற்கொண்டு பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவியதாகவும் அவர் குறிப்பிட்டார்.
நகரத் திட்டமிடல் மற்றும் நீர் வழங்கல் அமைச்சில் வியாழக்கிழமை (24) முற்பகல் நடைபெற்ற மலக்கழிவு அகற்றும் நான்கு கனரக வாகனங்களை சில உள்ளுராட்சி சபைகளுக்கு கையளிக்கும் நிகழ்வின் போது அசாதாரண காலநிலை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ள நிலைமை தொடர்பில்அமைச்சின் பங்களிப்பு பற்றி ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே அவர் இதனைக் கூறினார்.

மலக்கழிவு அகற்றும் கனரக வாகனங்களை கிளிநொச்சி மாவட்டத்தில் கரைச்சி பிரதேச சபை, முல்லைத்தீவு பிரதேச சபை, மொனராகலை பிரதேச சபை மற்றும் தலவாக்கலை நகர சபை ஆகியவற்றுக்கு அமைச்சர் ஹக்கீம் வழங்கி வைத்தார்.
அங்கு முழுமையான மலக்கழிவு சுத்திகரிப்பு நிலையங்களை அமைப்பதற்கு முன்னோடி நடவடிக்கையாகவே உலக வங்கியின் செயல்திட்டத்தின் கீழ் பிரஸ்தாப உள்ளுராட்சி சபைகளுக்கு இந்த வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்.

உலக வங்கியின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்படுகின்ற இவ்வாறான செயல்திட்டங்களின் பயனாக நாட்டில் பல பாகங்களிலுமுள்ள உள்ளுராட்சி சபை எல்லைகளில் வசிப்போர் நன்மையடைவர் என்றும், இவ்வாறான நடவடிக்கைகள் மூலம் நிலத்தடி நீர் மாசடைவதையும் தடுக்க முடியுமென்றும் அமைச்சர் ஹக்கீம் நம்பிக்கை தெரிவித்தார்.

No comments:

Post a Comment