அமெரிக்கா ஜெருசலம் நகரில் கட்டியுள்ள புதிய தூதரகம் அமைந்துள்ள இடத்துக்கு அமெரிக்க தூதரகம் சாலை என பெயரிட்டு மூன்று மொழிகளில் பெயர் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன.
அமெரிக்க அதிபர் தேர்தல் பிரசாரத்தின் போது, ஜெருசலமில் அமெரிக்க தூதரகம் அமைக்கப்படும் என டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இதன் தொடர்ச்சியாக இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலமை அங்கீகரிக்க அமெரிக்கா தயாராக இருப்பதாக சமீபத்தில் அறிவித்தார். சுமார் 100 கோடி டொலர்கள் செலவில் கிழக்கு ஜெருசலம் பகுதியில் பிரமாண்டமான அமெரிக்க தூதரகம் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த தூதரகத்தின் திறப்பு விழாவில் அமெரிக்க அதிபர் டிரம்ப் கலந்து கொள்ளலாம் என ஊடகங்கள் தெரிவித்திருந்தன.
இந்நிலையில், ஜெர்மனி நாட்டின் பிரதமரை சமீபத்தில் வாஷிங்டன் நகரில் உள்ள வெள்ளை மாளிகையில் சந்தித்துப் பேசிய டொனால்டு டிரம்ப், அவருடன் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
பல ஆண்டு காலமாக, பல்வேறு அமெரிக்க அதிபர்கள் அளித்து நிறைவேற்றப்படாத வாக்குறுதியாக ஜெருசலம் விவகாரம் இருந்து வந்துள்ளது. அவர்கள் அனைவருமே தேர்தல் பிரசாரத்துக்காக வாக்குறுதி அளித்திருந்தனர். ஆனால், அதை நிறைவேற்றக்கூடிய தைரியம் அவர்களுக்கு இல்லை. ஆனால், நான் அதை நிறைவேற்றி முடித்து இருக்கிறேன்.
இந்த புதிய தூதரகம் விரைவில் திறப்புவிழா காணவுள்ளது. இதில் நான் பங்கேற்பதை பெருமையாக கருதுகின்றேன் என்று இந்த பேட்டியின்போது டிரம்ப் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் அடுத்த வாரம் திறப்புவிழா காணவுள்ள அமெரிக்க தூதரகம் அமைந்துள்ள சாலைக்கு அமெரிக்க தூதரகம் சாலை என இஸ்ரேல் அரசு பெயர் சூட்டியுள்ளது, இதற்கான அறிவிப்பு பலகைகள் ஆங்கிலம், எபிரேயம் மற்றும் அரபு ஆகிய மூன்று மொழிகளில் இன்று நிர்மாணிக்கப்பட்டன.
இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள ஜெருசலம் நகர மேயர் நிர் பர்காட், “இது கனவல்ல, இது நிஜம் ஆகிவிட்டது. புதிய அமெரிக்க தூதரகத்துக்கான வழிகாட்டி பலகைகளை அமைப்பது தொடர்பாக நான் பெருமைபடுகிறேன்“ என குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment