சமகால முஸ்லிம் சமுதாயத்தின் எதிர்கால வாய்ப்புக்களும் சவால்களும் என்ற தொனிப்பொருளிலான சர்வதேச மாநாட்டுக்கு இலங்கையிலிருந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் தலைமையிலான அணியினர் ஐக்கிய அரபு அமீரகம் UAE நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
செவ்வாய் மற்றும் புதன் (8-9) ஆகிய இரு தினங்களும் ஐக்கிய அரபு அமீரக நாடான அபூதாபியில் இடம்பெறவுள்ள இம்மாநாடு “சர்வதேச முஸ்லிம் சிறுபான்மை காங்கிரஸ்” என்ற அமைப்பால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இம்மாநாட்டில் பங்குபற்றும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் செய்னுலாப்தீன் ஆலிம் நஸீர் அஹமத் இலங்கையில் சிறுபான்மையினரான முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கும் சவால்கள், சமகால நெருக்கடிகள் மற்றும் வாய்ப்புக்கள் குறித்து அளிக்கை -Presentation ஒன்றைச் செய்யவுள்ளார்.
இந்த மாநாட்டில் உலகின் நாலா பாகங்களிலுமிருந்தும் சமூக செயற்பாட்டாளர்கள். சமூகத் தலைவர்கள், ஆன்மீக அழைப்பாளர்கள் முஸ்லிம் நிறுவனங்களின் பணியாளர்கள் உட்பட சுமார் 400 செயற்பாட்டுத் தலைவர்கள் கலந்து கொள்கின்றார்கள்.
சமூகப் பாதுகாப்பையும் நீடித்த சமாதானத்தையும் கலாசார விழுமியங்களையும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காக உலகில் வாழும் ஏனைய பல்லின, பல்சமய சமூகத்தாரோடு சகிப்புத் தன்மை, மற்றும் பரஸ்பர கலந்துரையாடல்களின் பெறுமானத்தை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டு இந்த சர்வதேச மாநாடு ஒழுங்கு செய்யப்பட்டிருப்பதாக ஐக்கிய அரபு அமீரகம் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளது.
இலங்கையில் இருந்து கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருடன் ஏறாவூர் நகர சபைத் தலைவர் ஐ. அப்துல் வாஸித், நகரசபை உறுப்பினர் எம்.ஏ.எஸ்.எம். சரூஜ் உள்ளிட்ட குழுவினர் சென்றுள்ளனர்.
No comments:
Post a Comment