கொழும்பு நகரிலுள்ள குறைந்த வசதிகளையுடைய வீடுகளில் வாழ்ந்த மக்களுக்காக நிர்மாணிக்கப்பட்ட மாதம்பிட்டிய, ஹேனமுல்ல ”மெத்சந்த செவன” மாடி வீடமைப்புத் தொகுதியின் 722 வீடுகளை மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் (23) பிற்பகல் இடம்பெற்றது.
கொழும்பு நகரிலுள்ள குறைந்த வசதிகளையுடைய பின்தங்கிய நகர் பிரதேசங்களை நாகரிகமடைந்த பிரதேசங்களாக மாற்றியமைக்கும் பொருட்டு பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் நெறிப்படுத்தலில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் நகர புனர்வாழ்வு செயற்திட்டத்தின் கீழ் இந்த வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன.
இரண்டு படுக்கை அறைகளையும் ஏனைய அடிப்படை வசதிகளையும் கொண்ட ஒரு வீட்டிற்கான நிர்மாணிப்பு மற்றும் சேவை வழங்கல்களுக்கான செலவு 4 மில்லியன் ரூபாய்களாகும். அத்துடன், 15 மாடிகளைக் கொண்ட இந்த வீடமைப்பு தொகுதியின் மொத்த செலவு ரூபா 28,880 இலட்சங்களாகும்.
குடியிருப்பாளர்களின் வசதிக்காக மின்னுயர்த்தி, சனசமூக நிலையம் உள்ளிட்ட சகல வசதிகளையும் கொண்டதாக இந்த வீடமைப்பு தொகுதி நிர்மாணிக்கப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.
கொழும்பு நகரில் குறைந்த வசதிகளையுடைய பிரதேசங்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு நவீன வசதிகளையுடைய நிரந்தர வீடுகளை வழங்கி, அவர்களது வாழ்க்கைத் தரத்தினை உயர்த்துவதனை நோக்காகக் கொண்டு நகர புனர்வாழ்வு செயற்திட்டத்தினூடாக 50,000 வீடுகளை நிர்மாணிக்கும் திட்டம் பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சின் ஆலோசனையில் நகர அபிவிருத்தி அதிகார சபையினால் நடைமுறைப்படுத்தப்படுகின்றது.
நினைவுப்பலகையை திரைநீக்கம் செய்து வீடமைப்பு தொகுதியை மக்களிடம் கையளித்த ஜனாதிபதி அவர்கள் அதனை பார்வையிட்டார்.
வீடமைப்பு தொகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி நிலையமும் இதன்போது ஜனாதிபதி அவர்களின் விசேட கவனத்திற்கு உள்ளானது.
அதனைத் தொடர்ந்து இடம்பெற்ற நிகழ்வில் வீடுகளைப் பெறும் பயனாளிகள் சிலருக்கு ஜனாதிபதி அவர்கள் வீட்டு சாவிகளை வழங்கி வைத்தார்.
பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, அமைச்சர்களான பாட்டலி சம்பிக்க ரணவக்க, மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, ரவி கருணாநாயக்க, வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுமேத ரத்நாயக்க உள்ளிட்டோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
No comments:
Post a Comment