இப்படியான பதிவுகள் இடுவதில் அதிகம் உடன்பாடில்லை இருந்தும் என்னையும் சேர்த்து எங்கள் குழுவினரை மீண்டும் மீண்டும் பேச வைத்த சம்பவம் என்பதனால் பகிர்கின்றேன்.
கொடிய நோய்க்காக வேண்டி நிதி திரட்டும் பணியில் கடந்த சில நாட்களாக என் நண்பர் குழுவுடன் எங்கள் ஊரில் வீடு வீடாக உதவி தொகை வசூலித்துக் கொண்டு வருகின்றோம்.
இதன் போது பல சம்பவங்கள் மனிதம் என்றால் என்ன என்பதை உணரச் செய்திருக்கின்றது. மேலும் பல இளகிய மனம் படைத்த மனிதர்களிடம் நின்று நிதானித்து கதை பேசி அவர்கள் நோயாளிகளுக்காக சிந்தும் மிகப் பெறுமதி வாய்ந்த கண்ணீர்த் துளிகளையும், பிறார்த்தனைகளையும் ஏற்றுக்கொண்டும் பயணித்து வருகின்றோம்.
இப்படி சிறிய சிறிய சம்பவங்களாக பல கதைகள் கொட்டிக்கிடக்கின்றன அதிலும் இன்றைய நாள் ஒரு குட்டி சீமாட்டி எங்கள் அனைவரினதும் மனத்தையும் வென்றுவிட்டாள்.
ஒரு வீட்டு கதவு தட்டப்பட்டு அந்த வீட்டிலிருந்த பெரியவர்கள் அவர்களால் முடிந்த தொகையினை தந்த பிற்பாடு எங்கள் நண்பர்கள் அவர்களுக்கு நன்றி கூறி கடந்து சில தூரம் சென்றபின் அந்த வீட்டின் குட்டி சீமாட்டி எங்களின் பின்னால் ஓடோடி வந்து தான் சேமித்து வைத்த சில்லறைகளை உண்டியலுடன் அன்பளிப்பு செய்துவிட்டு வீட்டுக்குள் ஓடிவிட்டாள்.
சிறு குழந்தை என்பதனால் ஆர்வத்தில் வீட்டில் இருப்பவர்களுக்கு தெரியாமல் தந்துவிட்டு சென்று விட்டாளோ என்ற சந்தேகத்தின் பேரில் மீண்டும் அந்த வீட்டுக்கு சென்று இப்படியாக இதனை தந்துவிட்டு ஓடி வந்துவிட்டார் உங்கள் குழந்தை என்றதும் அவர்களும் “இல்லை அவர் தெரிந்தேதான் அதனை உங்களுக்கு அன்பளிப்பு செய்திருக்கிறார் இதனையும் வைத்துக்கொள்ளுங்கள்” என்றனர்.
அந்த பிஞ்சு உள்ளம் எத்தனை ஆசையில் அந்த உண்டியலை நிறம்ப செய்ய வேண்டுமென்ற அவாவில் குருவி சேர்ப்பது போல் அதனை சேர்த்ததோ அறியோம் இருந்த போதிலும் உதவிட வேண்டுமே என்ற எண்ணம் காரணமாக சிறு வினாடி கூட யோசிக்காமல் தான் அதனை சேமிக்க எடுத்த பிரயத்தனங்களையெல்லாம் மறந்து தானம் தந்த அந்த மனதை என்னவெண்பேன்..!
இறுதியாக அந்த தேவதையின் குட்டி விரல்கள் தீண்டி சிறுகச்சிறுக சேமிக்கப்பட்ட அந்த சில்லறைகள் நண்பர்களின் வேண்டுகோலுக்கிணங்க தனித்துவமாக கணக்கிடப்பட்டது.
அந்த குட்டியின் கனவுச் சேமிப்பு மொத்தம் 655.75/= ஆக இருந்தது. எப்படியாவது அதிலிருந்த மொத்த தொகையினை அந்த பிஞ்சிடம் தெரியப்படுத்திட வேண்டும் இன்ஷா அல்லாஹ்.
No comments:
Post a Comment