ஒரு வாரகாலமாக நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் 18 மாவட்டங்களின் இயல்புநிலை தொடர்ந்தும் பாதிக்கப்பட்டுள்ளது. வெள்ளம், மண்சரிவு மற்றும் மின்னல் தாக்கம் காரணமாக நேற்று மாலை வரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12 ஆக உயர்வடைந்துள்ளதுடன் சுமார் ஒரு இலட்சத்து பத்தாயிரத்துக்கும் அதிகமானோர் பாதிப்படைந்திருப்பதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது.
தற்போதைய மழையுடனான காலநிலை எதிர்வரும் 26ஆம் திகதிவரை தொடரும் எனவும் இதனை கவனத்திற் கொண்டு ஐந்து மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்ைக விடுக்கப்பட்டுள்ளதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்தது. அடை மழை காரணமாக கொழும்பு, இரத்தினபுரி, கம்பஹா, களுத்துறை, கேகாலை, காலி, மாத்தறை, புத்தளம் உள்ளிட்ட அனேகமான மாவட்டங்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அரச அலுவலகங்கள் மற்றும் பாடசாலைகளின் செயற்பாடுகள் மந்தகதியிலேயே முன்னெடுத்துச் செல்லப்பட்டன. தூர இடங்களிலிருந்து கொழும்பு வரும் பயணிகளின் எண்ணிக்கை பொதுவாக குறைவடைந்திருந்ததுடன் வீதிகளில் வாகன நெரிசலும் அதிகமாக காணப்பட்டன. இதனால் பொதுமக்களும் வியாபாரிகளும் பாரிய சிரமங்களை எதிர்நோக்கினர்.
நாட்டின் தெற்கு, மேல், வட மேல் மற்றும் சப்ரகமுவ உள்ளிட்ட மாகாணங்களில் பெய்து வரும் தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழையினால் பாதிப்புக்குள்ளாகியுள்ள 28 ஆயிரம் குடும்பங்களின் 12 ஆயிரம் குடும்பங்களைச் செர்ந்த 45 ஆயிரம் பேர் இடம்பெயர்ந்து 214 முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
அத்துடன் 29 வீடுகள் முழுமையாகவும் 2ஆயிரத்து 527 வீடுகள் பகுதியளவிலும் சேதங்களுக்கு உள்ளாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை கற்பிட்டியில் நேற்று மீன்பிடிக்கச் சென்ற ஒருவர் மின்னல் தாக்கி உயிரிழந்ததாகவும் வென்னப்புவவைச் சேர்ந்த மாணவன் (17 வயது) ஒருவர் பெருக்கெடுத்துள்ள ஜின் கங்கையை பார்வையிடச் சென்றபோது வெள்ளத்தில் இழுத்துச் செல்லப்பட்டிருப்பதாகவும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பிரதிப் பணிப்பாளரும் பேச்சாளருமான பிரதீப் கொடிப்பிலி தெரிவித்தார்.
களுகங்கையின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனால் அதனை அண்டி வாழும் மக்கள் பாதுகாப்பான இடத்தை நோக்கி செல்லுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மண்சரிவு அபாயம் தொடர்ந்தும் நீடிக்கும் என்பதால் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள இடங்களைச் சேர்ந்த மக்கள் அவதானத்துடன் இருக்குமாறும் எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
பாதிப்புக்குள்ளாகியுள்ள 18 மாவட்டங்களதும் உடனடி தேவையை பூர்த்தி செய்வதற்காக அனர்த்த முகாமைத்துவ நிலையமும் தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையமும் 14.7 மில்லியன் ரூபாவை வழங்கியிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
தேடுதல் மற்றும் மீட்பு பணிகளுக்காக 557 இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ள அதேநேரம் சுமார் 06 ஆயிரம் இராணுவத்தினரும் பொலிஸாரும் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். முன்னெடுக்கப்பட்டுள்ள மதிப்பீட்டின்படி சுமார் 23 ஆயிரம் பேருக்கு அவசர உணவு மற்றும் சிகிச்சை அவசியம் என கணிப்பிடப்பட்டுள்ளதென்றும் கொடிப்பிலி கூறினார்.
பெய்யும் மழைவீழ்ச்சியினளவு 150 மில்லிமீற்றரிலும் அதிகரிக்கும் பட்சத்தில் இரத்தினபுரி,கேகாலை, நுவரெலியா, காலி மற்றும் களுத்துறை ஆகிய மாவட்டங்களில் மண்சரிவு, கற்பாறைகள் உருண்டு விழுதல் ஆகிய அனர்த்தங்கள் இடம்பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் இருப்பதாக தேசிய கட்டிட ஆராய்ச்சிகள் நிறுவனம் எச்சரித்துள்ளது.
இதன்படி இரத்தினபுரி மாவட்டத்தின் இரத்தினபுரி, எலபாத்த, குருவிட்ட, எஹெலியகொட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், கேகாலை மாவட்டத்தின் புலத்கோபிட்டிய, தெஹியோவிட்ட, தெரணியகல, ருவன்வெல, அரநாயக்க, மாவனல்ல ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், நுவரெலியா மாவட்டத்தின் அம்பகமுவ, கொத்மலை, நுவரெலியா பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள், களுத்துறை மாவட்டத்தின் பாலிந்த நுவர, அகலவத்த, புலத்சிங்கள, இங்கிரிய, வலளாவிட்ட ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகள் காலி மாவட்டத்தின் எல்பிட்டிய, நாகொட, நெலுவ, தவலம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகள் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளுக்கு மண்சரிவு அபாயம் விடுக்கப்பட்டுள்ளது.
சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள அனர்த்தங்களில் உயிரிழந்தவர்களுக்கு தலா ஒரு இலட்சம் ரூபாவை நஷ்ட ஈடாக வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தேசிய இடர் முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்தது.
அதேவேளை சீரற்ற காலநிலையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நிதியை அரசாங்கம் ஏற்பாடு செய்துள்ளதாக தேசிய இடர்முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் சமிந்த பத்திரண தெரிவித்தார்.
உயிரிழந்த ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபா இழப்பீடு வழங்கப்படுவதுடன் இறுதிக்கிரியைகளுக்காக 15ஆயிரம் ரூபா நிதி பிரதேச செயலாளர் மற்றும் கிராம சேவகர்களுக்கூடாக உடனடியாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எஞ்சிய தொகை 85 ஆயிரம் ரூபா உயிரிழந்தவரின் இறப்புச்சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் பெற்றுக்கொள்ளமுடியும் என்றும் அவர் குறிப்பிட்டார். இதற்கிணங்க இரண்டு கட்டங்களில் இந்த தொகை வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டில் நிலவும் தொடர்ச்சியான சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள. அனர்த்தம் காரணமாக இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களுள் 5 பேர் இடிமின்னலினால் உயிரிழந்துள்ளனர்.
நாட்டின் 18 மாவட்டங்களில் 27,623 குடும்பங்ளைச் சேர்ந்த 1இலட்சத்து 10 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் 7526 குடும்பங்ளைச் சேர்ந்த 27,621 பேர் இடம் பெயர்ந்துள்ளதுடன் அவர்கள் 194 பாதுகாப்பு முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இரத்தினபுரி மாவட்டத்தில் அதிகமான பாதிப்பு ஏற்பட்டுள்ளதுடன், அங்கு 27,621 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தம் ஏற்பட்ட மாவட்டங்களுக்கு தனித்தனியாக நிதி வழங்கப்பட்டுள்ளதாகவும். அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
லக்ஷ்மி பரசுராமன்
No comments:
Post a Comment