தேசிய ஹொக்கி போட்டிக்கு கிழக்கு மாகாணத்திலிருந்து அம்பாறை (காரைதீவு) மாவட்ட அணி தெரிவாகியுள்ளது.
கிழக்கு மாகாண விளையாட்டுத்திணைக்களம் நேற்றுமுன்தினம் (19) சனிக்கிழமை காரைதீவில் மாகாணமட்ட ஹொக்கி மற்றும் பீச் கபடிப்போட்டிகளை நடாத்தியிருந்தது.
கிழக்குமாகாண விளையாட்டுத்துறைப் பணிப்பாளர் கே.மணிவண்ணன் அம்பாறை மாவட்ட விளையாட்டதிகாரி எம்.அமீர்அலி ஆகியோரின் கண்காணிப்பில் இப்போட்டிகள் சிறப்பாக விபுலாநந்த மத்திய கல்லூரி மைதானத்திலும் காரைதீவுக் கடற்கரையிலும் நடைபெற்றன.
இதில் மாகாணமட்ட ஹொக்கிப் போட்டியில் முதற்றடவையாக அம்பாறை அணி வெற்றிவாகை சூடியது. கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை ஆகிய மாவட்ட அணிகள் களத்தில் மோதின. கடந்தவருட சம்பியானன திருமலை அணியினர் பை முறையில் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.
அதனால் முதல் போட்டியில் அம்பாறை மட்டக்களப்பு அணிகள் மோதியபோது 1-0 என்ற அடிப்படையில் அம்பாறை அணி வெற்றிபெற்றது. இறுதிப்போட்டியில் அம்பாறையுடன் திருமலை மோதியது. அதில் 2-1 என்ற புள்ளி அடிப்படையில் அம்பாறை அணி வெற்றிவாகைசூடி இவ்வருடத்திற்கான மாகாண சாம்பியனானது.
அம்பாறை அணியில் உள்ள 18வீரர்களுள் 16பேர் காரைதீவு ஹொக்கிலயன்ஸ் கழகத்தைச்சேர்ந்த தமிழ்வீரர்களாவர்.
காரைதீவு ஹொக்கி லயன்ஸ் கழகத் தலைவரும் வவுனியா பொலிஸ் போக்குவரத்துப்பிரிவு உத்தியோகத்தருமான தவராசா லவன் கடந்த 5வருடங்களாக இந்தவீரர்களுக்கு பயிற்சியளித்து இந்த வெற்றியைச் சாதித்துள்ளார்.
இவ்வருட அணிக்கு கே.நதீஸ்தரன் தலைமை தாங்க த.லவன் உள்ளிட்ட 18 வீரர்கள் இறுதிவரை போராடி இந்தச் சாதனையை நிலைநாட்டினர்.
கிழக்கு மாகாண சாம்பியனான அம்பாறை அணி எதிர்வரும் யூலை மாதம் 5 ,6 ,7, 8 ஆகிய திகதிகளில் மாத்தளையில் நடைபெறவிருக்கும் தேசியமட்ட ஹொக்கி போட்டியில் கலந்துகொள்ளவுள்ளது.
காரைதீவு நிருபர்
No comments:
Post a Comment