காத்தான்குடி நகர சபைக்கான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இன்று (1.4.2018) காத்தான்குடி ஹிஸ்புல்லாஹ் மண்டபத்தில் வைத்து சத்தியப்பிரமாணம் செய்து கொண்ட வைபவத்தின் போது கிழக்கு மாகாண ஆளுனரின் மனைவியும் கலந்து கொண்டிருந்தார்.
இந்த வைபவத்தில் கிழக்கு மாகாண ஆளுனர் ரோஹித போகொல்லாகமவின் மனைவியும் கூடவே கலந்து கொண்டார். ஆளுனரின் மனைவி வைபவத்தின் ஆரம்பம் முதல் நடந்து கொண்ட முறையானது பலரையும் சங்கடத்துக்குள்ளாக்கியது.
இந்த வைபவத்திற்கு வருகை தந்த அதிதிகள் ஊர்வலமாக பிரதான வீதியிலிருந்து ஹிஸ்புல்லாஹ் மண்டபம் வரை அழைத்து வரப்பட்டனர்.
இதன் போது ஆளுனர் மற்றும் அவரது மனைவியும் ஊர்வலமாக வருகை அழைத்து வரும் போதே ஏதோ தன்னை நடாத்திக் கூட்டிச் செல்கின்றார்கள் என்று ஆளுனரின் மனைவி அவ்விடத்தில் அடிக்கடி முரண்பட்டுக் கொண்டதை அவதானிக்க முடிந்தது.
பின்னர் ஹிஸ்புல்லாஹ் மண்படத்தின் முன் வரிசையில் ஆசனங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டு பெயர்களும் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. இதில் ஆளுனரின் மனைவியின் பெயர் தனது கணவருக்கு அருகாமையில் போடப்படவில்லை எனக் கூறி காத்தான்குடி நகர சபை செயலாளர் திருமதி றிப்கா ஷபீனிடம் கோபப்பட்டு கதைத்ததை நான் மாத்திரமல்ல அவ்விடத்தில் இருந்த பலரும் அவதானித்துள்ளனர்.
நான் யார் தெரியுமா நான் உயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த பெண், ஆளுனரின் மனைவி எனக்கு கதிரை போடவில்லை இவ்வாறு ஆத்திரமான தொனியில் பேசிக் கொண்டிருந்தார். இவ்வாறே நகர சபையின் தவிசாளர் அஸ்பரிடமும் இவர் பேசியதை அவதானிக்க முடிந்தது.
தனது பெயரை மேடையில் அறிவிப்பாளர்கள் பிழையாக உச்சரிக்கின்றார்கள் என்றும் அதற்கும் ஒரு ஆத்திரமான தொனியில் அவ்விடத்தில் பேசினார்.
ஆனால் இடையிடையே ஆளுனர் தனது மனைவியை சமாளிக்க முயன்றும் முடியவில்லை என்பதையே காணக் கூடியதாக இருந்தது. அதே போன்று இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ்வும் சமாளிப்பதற்காக ஏதோ பேசினார் ஆனால் அதற்கும் அவர் கட்டுப்பட்டதாக தெரியவில்லை.
பின்னர் ஆளுனர் உரையாற்றும் போது பல முறை எழும்பிச் செல்வதும் நுழை வாயிலில் நிற்பதும் போன்ற ஒரு நடவடிக்கையில் ஈடுபட்டது அவரை பேச விடாமல் தடுப்பது போன்றே நினைக்க தோன்றியது. ஆளுனரும் அவரது பேச்சில் தனது மனைவியை புகழ்ந்தும் ஒரு கட்டத்தில் பேசினார்.
இவ்வாறு ஒரு உயர்ந்த வைபவத்தில் அதிலும் குறிப்பாக இன்றுமொரு சமூகத்தின் மத்தியில் நடக்கும் வைபவத்தில் இவர் இவ்வாறு நடந்து கொண்டது சரியா என எனது உள்ளத்தில் கேள்வி எழும்புகின்றது. ஏன் ஒரு ஆளுனரின் மனைவி இவ்வாறு நடந்து கொண்டார் என்ற கேள்வி எனக்கு ஏற்பட்டது.
ஒரு அரசாங்க வைபவம் ஒரு மக்கள் திரள் ஒன்று கூடிய வைபவம் ஒரு சமூகத்தின் மக்கள் பிரதிநிதிகள் முதன் முதலாக மக்கள் சேவைக்காக காலடி எடுத்து வைத்து தனது சமூகத்திற்கு முன்னாள் சத்தியப் பிரகடனத்தை செய்து கொண்ட வைபவத்தில் இந்த நாட்டின் பெறுமதி மிக்க இந்த மாகாணத்தின் அரசாங்கத்தின் ஆளுமைமிக்க பிரதிநிதியும் ஜனாதிபதியின் நேரடி பிரதிநிதியுமான ஒரு ஆளுனரின் மனைவி நடந்து கொண்ட முறை சரியானதா? ஒழுக்க மானதா, பண்பானதா?
எம்.எஸ்.எம்.நூர்தீன்
காத்தான்குடி
No comments:
Post a Comment