ஆயுள்தண்டனை அனுபவித்து வரும் தமிழ் அரசியல் கைதி சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனை தனது நிறைவேற்று அதிகாரத்தினை பயன்படுத்தி கருணை மன்னிப்பு வழங்கி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்ய வேண்டும் என வட மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் வழியுறுத்தியுள்ளார்.
வட மாகாண முதலமைச்சரின் அலுவலக ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவ்வறிக்கையில்,
சச்சிதானந்தன் ஆனந்த சுதாகரனின் மனைவியின் இறுதி கிரியைகளின் போது ஆனந்த சுதாகரனின் பிள்ளைகள் செயற்பட்ட விதம் அனைவரின் கவனத்தினையும் ஈர்த்துள்ளது. ஆதரவற்ற பிள்ளைகளின் எதிர்காலம் தற்போது கேள்விக்குறியாகியுள்ள நிலையில், அவர்களின் எதிர்காலம் குறித்து நாட்டு தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மாத்திரமே பொறுப்பு கூற வேண்டும்.
கடந்த 2018.03.21 ஆம் திகதி எழுத்து மூல கடிதத்தில் ஆனந்த சுதாகரனின் இரண்டு பிள்ளைகளின் வயது மற்றும் தற்போதைய நிலை ஆகியவற்றை கருத்திற் கொண்டு ஆனந்த சுதாகரனுக்கு மன்னிப்பு வழங்கி விடுதலை செய்து பாதிக்கப்பட்ட குழந்கைகளுக்கு உதவுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
வடமாகாண முதலமைச்சரின் இக்கோரிக்கையினை பரிசீலனை செய்த ஜனாதிபதி செயலகம் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்தை இவ்விடயம் குறித்து விரிவான துரிதகரமான அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளது.
மேலும் அவ் அறிக்கையில், அரசியல் கைதிக்கு எதிரான வழக்கின் நீதிமன்ற விசாரணை அறிக்கை மற்றும் வழங்கபட்ட தீர்ப்பு ஆகிய விடயங்கள் உள்ளடக்கப்பட வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறிருப்பினும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மன்னிப்பு என்ற விடயத்திற்குள் சட்டங்களை உள்ளடக்காமல் கருணை மனப்பாங்குடன் அக்குழந்தைகளின் எதிர்காலம் குறித்து விரைவான தீர்மானத்தினை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment