ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 368 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர் - News View

About Us

About Us

Breaking

Sunday, April 1, 2018

ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைந்த 368 மாணவர்கள் கெளரவிக்கப்பட்டனர்

கல்வி அபிவிருத்தி போரம் (EDF) இன் ஐந்தாம் ஆண்டு புலமை பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களை கெளரவித்து சான்றிதல் மற்றும் நினைவுச்சின்னம் வழங்கும் 14 ஆவது நிகழ்ச்சித்திட்டம் இன்று அனுராதபுரம் யொவுன் நிக்கத்தனய கேட்போர் கூடத்தில் அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமானின் பங்கேற்புடன் நடைபெற்றது.

EDF இன் தலைவர் SL.மன்சூரின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அனுராதபுரம், புத்தளம், குருநாகல், வவுனியா, கிளிநொச்சி, மன்னார் ஆகிய 6 மாவட்டங்களில் இருந்து 2017 ஆம் ஆண்டில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் அதிகூடிய புள்ளிகளை பெற்று சித்தியடைந்த 368 மாணவர்களும், அவர்களது பெற்றோர் மற்றும் அவர்களுக்கு கற்பித்த ஆசிரியர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

குறித்த மாவட்டங்களில் முதலாமிடத்தை தக்க வைத்துக்கொண்ட மாணவர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் சான்றிதல்களையும், நினைவுச்சின்னங்களையும் வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அனுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இஷாக் ரஹுமான் அங்கு உரையாற்றுகையில், 

எமது சமூகம் இன்று கல்வியில் பின் தங்கியிருப்பதற்கு காரணம் பெற்றோர்களே ஆவர், ஐந்தாம் ஆண்டு வரை மாணவர்களின் கல்வியில் அதிகம் ஆர்வம் செலுத்தி அவர்களுக்கு உந்துசக்தியாக இருந்து ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் வெற்றியடைவதற்கு பிரதான காரணமாக உள்ள பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளின் மேல் உள்ள கண்காணிப்பிணை அத்தோடு நிறுத்தி விடுகின்றனர்.
பிள்ளைகளின் எதிர்கால வளர்ச்சி ஐந்தாம் ஆண்டு புலமைப்பரீட்சையில் சித்தியடைவதோடு நின்றுவிடுவதில்லை. மாறாக க.பொ.த. சாதாரண தர பரீட்சை, க.பொ.த. உயர்தரப்பரீட்சை ஆகிய முக்கியமான இரு பரீட்சைகள் உள்ளன. தங்கள் பிள்ளைகள் இவ்வனைத்து பரீட்சைகளையும் வெற்றிகரமாக நிறைவு செய்து பல்கலைக்கழகம் வரை சென்று சிறப்பாக கற்று நல்லதொரு தொழிலுக்கு செல்லும் வரை தங்களது பிள்ளைகளை பெற்றோர் தங்களது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும்.

இல்லையேல் அவர்களது எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும், கல்வியில் நமது சமூகம் மேலும் பின் தங்கும். ஆகவே பெற்றோர்களே பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியில் முக்கிய பங்குதாரர்களாக விளங்குகின்றனர். இனி வரும் காலங்களில் பிள்ளைகளின் மேல் உள்ள கண்காணிப்பை பெற்றோர்கள் அதிகப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.

ஊடகப்பிரிவு 

No comments:

Post a Comment