வாகரை - காயான்கேணி ஆணைக்கல் கடற்கரையில் ஆழ்கடல் நிலநடுக்கத்தை அளவிடும் சுனாமி முன்னெச்சரிக்கை கருவி கரையொதுங்கியுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவிப்பணிப்பாளர் எம்.ஏ.சி.எம். றியாஸ் தெரிவித்தார்.
சர்வதேச ஆழ்கடல் பகுதியில் இடம்பெறும் நில நடுக்கத்தை அளவிட்டு, அதனை சுனாமி முன்னெச்சரிக்கை நிலையத்திற்கு தகவல் வழங்கும் மிதக்கும் வோயா காயான்கேணி ஆணைக்கல் கடற்கரையில் நேற்று முன்தினம் 01.02.2018ம் திகதி வியாழக்கிழமை கரையொதுங்கியுள்ளது.
காயான்கேணி பிரதேச மீனவர்களிடத்தில் விசாரணைகளை நடாத்திய போது, முன்னெச்சரிக்கைக் கருவி மிதக்கும் வோயா கரையொதுங்கிய போது, இதில் அன்டனா மற்றும் பல்வேறு உபகரணங்கள் தென்பட்டதாகவும், தற்போது அவற்றில் எந்தவித உபகரணமுமில்லையெனவும் அனர்த்த முகாமைத்துவப்பிரிவு தெரிவித்துள்ளது.
இந்த முன்னெச்சரிக்கைக்கருவி மிதக்கும் வோயாவானது சர்வதேச ஆழ்கடல் பகுதியிலிருந்து இங்கு வந்திருக்கலாமெனவும், இந்த வோயாவை கடற்படை அதிகாரிகளின் உதவியுடன் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மேற்கொண்டு வருகின்றது.
மேலும், இதிலிருந்து திருடப்பட்டதாகக்கூறப்படும் பொருட்கள் தொடர்பாக வாகரைப்பொலிஸில் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பான விசாரணை வாகரைப் பொலிஸார் மேற்கொண்டு வருவதாகவும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவியாளர் ஏ.எம்.எம்.ஹசீர் தெரிவித்தார்.
முர்ஷித் - வாழைச்சேனை
No comments:
Post a Comment