இலங்கையில் வெளியிடப்பட்ட முதலாவது அஞ்சல் முத்திரை - News View

About Us

About Us

Breaking

Friday, March 30, 2018

இலங்கையில் வெளியிடப்பட்ட முதலாவது அஞ்சல் முத்திரை

உலகின் முதலாவது அஞ்சல் முத்திரை 1840ம் ஆண்டு மேமாதம் 6ம் திகதி பிரித்தானியாவில் பொதுமக்களின் பாவனையின் பொருட்டு வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து அந்நாட்டின் அஞ்சல் சேவையில் மறுமலர்ச்சி ஏற்பட்டது. இதனையடுத்து ஏனைய நாடுகளிலும் முத்திரைப் பாவனையில் ஆர்வம் தோன்றியது.

தொடர்ந்து முத்திரைப் பாவனையானது உலகளாவிய ரீதியில் வியாபித்து வளர்ச்சியுற்றதுடன் தமது ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்த நாடுகளிலும் முத்திரைப் பாவனை பழக்கத்தை அதிகமாக்கும் முயற்சிகளை பிரித்தானிய ஆட்சியாளர்கள் மேற்கொண்டனர். இதற்கமைய 1847ல் மொரிசியஸ் தீவுகளில் முத்திரை வெளியீடு இடம்பெற்றது. ஆசியாவில் முதலாவது முத்திரை 1852ம் ஆண்டு இந்தியாவில் வெளியிடப்பட்டது. 

இலங்கையில் இற்றைக்கு 161 ஆண்டுகளுக்கு முன் 1857 ஏப்ரல் 01ம் திகதி சொந்த அஞ்சல் முத்திரை வெளியிடப்பட்டது. இந்நாட்டின் முத்திரைப் பாவனை விடயத்தில் அஞ்சல் அலுவலகம் மற்றும் மக்கள் சமூகம் என்பவற்றின் மத்தியில் பல்வேறு மட்டங்களில் ஆர்வமும் அக்கறையும் நிலவியது. அன்றைய காலப் பகுதியில் இலங்கையின் அஞ்சல் மா அதிபராகப் பணியாற்றிய ஜி. ஜி. பிறேஸர் இவ்விடயத்தில் மிகுந்த அக்கறையோடு செயல்பட்டார். 

முதல் தடவையாக இங்கிலாந்தில் பாவனையிலிருந்த முத்திரை வகையொன்றை இலங்கையின் பொருட்டு மேலதிகமாக அச்சிட்டு இலங்கைக்கு தருவித்தல் அவரது இலட்சியமாக இருந்தது. இந்நாட்டிலிருந்து கப்பல் மூலம் கடல் மார்க்கமாக அஞ்சல் பொருட்களை அனுப்புவதற்காக அதற்கான அஞ்சல் கட்டணமாக ஆறு பென்ஸ் பெறுமதியிலான அஞ்சல் முத்திரைகள் அவசியமானது.

இப்புதிய அஞ்சல் முத்திரையின்பொருட்டு அதில் சித்தரிக்கப்பட வேண்டிய உருவத் தோற்றமாக விக்டோரியா மகாராணியாரின் மேல் அரை உருவத் தோற்றம் பயன்படுத்தப்பட்டது. இதனை வடிவமைத்தவர் உலகின் முதலாவது முத்திரையை வடிவமைத்த எட்வேர்ட் ஹென்றி என்பவராவார். இவ்வுருத் தோற்றத்தை அச்சுத் தகட்டில் செதுக்கியவர் வில்லியம் ஹமறீஸ் என்பவராவார்.

எமது நாட்டின் முதலாவது அஞ்சல் முத்திரையானது உலகில் முதலாவது அஞ்சல் முத்திரையை அச்சிட்ட பேர்கின்ஸ்பேக்கன் கம்பனியினரால் அச்சிடப்பட்டு நாளொன்றுக்கு 250 முத்திரைகள் என்றவாறு முத்திரைகள் அச்சிடப்பட்டன. நட்சத்திர நீர்க்குறிகொண்ட வெளிர் நீல நிறமுடைய விஷேட வகைத்தாளில் வெளியான பிரவுண் மற்றும் நாவல் நிறத்தில் அச்சிடப்பட்ட இம்முத்திரை 1955ம் ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்குத் தருவிக்கப்பட்டது.
இந்த முத்திரை வெளியீட்டில் ஏற்பட்ட தாமதம் பற்றிச் செய்திப் பத்திரிகை மூலமாக சுட்டிக்காட்டப்பட்டதன் பின்னர் இலங்கையின் முதலாவது அஞ்சல் முத்திரையானது 1857ம் ஆண்டு ஏப்ரல் முதலாந் திகதி வெயியிடப்பட்டது. முத்திரைகளை பரித்தெடுக்க கத்திரிக்கோல் பயன்படுத்தப்பட்டது. முத்திரைத் துளையீடுகள் பின்னரே அறிமுகமாகின. இம்முத்திரைக்கு மேலதிகமாக மேலும் ஆறு முத்திரைகள் 1857ம் ஆண்டு வெளியிடப்பட்டன.

இலங்கையின் அஞ்சல் முத்திரைகள் வரலாற்றுக்கு அமைய 1857ம் ஆண்டு முதல் 1900 ஆண்டுவரை விக்டோரியா மகாராணியின் உருவத்தோற்றத்தை பலவாறாகக் கொண்ட முத்திரைகளும் 1903ம் ஆண்டு தொடக்கம் 1912ம் ஆண்டு வரை ஏழாம் எட்வர்ட் மன்னரின் உருவத்தோற்றமும் 1912 முதல் 1935 வரை ஐந்தாம் ஜோர்ஜ் மன்னரினதும் 1937 முதல் 1945 வரை ஆறாம் ஜோர்ஜ் மன்னரினதும் உருவத் தோற்றங்களும் அஞ்சல் முத்திரைகள் தொடர்பாக பாவிக்கப்பட்டன. 

1835ம் ஆண்டில் இந்நாட்டினது காட்சித் தோற்றங்கள் பல முத்திரைகளில் சித்தரிக்கப்பட்டன. 1948ஆம் ஆண்டில் இலங்கை ஒரு சுதந்திர நாடாக அங்கீகரிக்கப்பட்ட பின் இன்றுவரை எமது நாடு தொடர்பான பல்வேறு அம்சங்களைப் பற்றிய தகவல்களை சித்தரிக்கும் அஞ்சல் முத்திரைகள் பெருவாரியாக வெளியிடப்பட்டுள்ளன. 

இவை யாவும் இலங்கையின் வரலாறு கலைகள், மக்கள் வாழ்க்கை முறை அழகியல் விடயங்கள் மற்றும் வேறு சிறப்புமிக்க தகவல்களை உலகிற்கு வெளிக்கொணரும் தகவல் சாதனங்களாகும். எதிர்வரும் காலங்களிலும் மக்களின் தேவைகளையும் ஆர்வத்தையும் புரிந்துகொண்டு இலங்கையின் அஞ்சல் முத்திரைக்கலையை மென்மேலும் விருத்தி செய்வதற்கு முயலவேண்டும்.

கடந்தாண்டு இலங்கையின் முதலாவது அஞ்சல் முத்திரையின் 160வது ஆண்டு நிறைவைக் குறிக்குமுகமாக 15 ரூபா பெறுமதியான நான்கு முத்திரைகளை இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப்பணியகம்2017 ஏப்ரல் 11ம் திகதி அஞ்சல் தலைமையகத்தில் வெளியிட்டது. விக்டோரியா அரசியின் உருவம் பொறித்த ஆறுபென்ஸ், நாலு பென்ஸ், எட்டு பென்ஸ், ஒன்பது பென்ஸ் முத்திரைகள் இம்முத்திரைகளில் பொறிக்கப்பட்டுள்ளன.

கே.ஏ. அலீம் - கம்பளை 

No comments:

Post a Comment