காணிகளை விடுவித்து தருகின்ற விடயத்தில் தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இராணுவ தளபதி லெப்டினன் ஜெனரல் மஹேஸ் சேனநாயக்க யாழ்ப்பாணத்தில் நேற்று (30) தெரிவித்தார்.
தெல்லிப்பளை பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட கீரிமலை நல்லிணக்க வீட்டு திட்டத்தில் இரண்டாம் கட்டமாக 25 பயனாளிகளுக்கு வீடுகளை கையளிக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இவர் இங்கு மேலும் தெரிவித்தவை வருமாறு:- யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது மக்களின் அனைத்து காணிகளையும் எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டு பரிசாக பொதுமக்களுக்கு வழங்க வேண்டும் என்று அரசாங்க அதிபர் என். வேதநாயகன் எம்மிடம் கோரியுள்ளார்.
இவற்றை பிடித்து வைத்திருக்க வேண்டும் என்றெல்லாம் எமக்கு ஆசை கிடையாது. அதேநேரம் தேசிய பாதுகாப்பை முன்னிறுத்தி தீர்மானம் எடுக்க வேண்டிய பொறுப்பில் நான் இருக்கின்றேன். இங்கு பிரசன்னமாகி உள்ள இராணுவ வீரர்களில் 90 சதவீதமானவர்களுக்கு சொந்த வீடு கிடையாது என்கிற ஒரு உண்மையை நான் சொல்ல வேண்டியுள்ளது.
ஆனால், தமிழ் உறவுகளுக்கு வீடுகளை கட்டி கொடுத்து தமிழ் உறவுகளின் வாழ்க்கை, எதிர்காலம் ஒளிமயமானதாக பிரகாசிக்க வேண்டும் என்று அவர்கள் விரும்புகின்றார்கள். ஏனென்றால், மீண்டும் ஒரு கொடிய யுத்தம் ஏற்படுவதையும், அப்பாவி பொதுமக்கள் அதனால் பாதிக்கப்படுவதையும் அவர்கள் விரும்பவில்லை.
எனவே, இந்த தருணத்தில் எனது வீரர்களை அவர்களின் சேவை மனப்பான்மைக்காக பாராட்டுகின்றேன் என்று அவர் குறிப்பிட்டார். 500 ஏக்கர் நிலப்பரப்பை மக்களுக்காக விடுவியுங்கள் என்று அரசாங்க அதிபர் வேதநாயகன் கோரி உள்ளார். தேசிய பாதுகாப்பை கருத்தில் கொண்டு அவருடன் பேசிய விடயங்கள் குறித்தும் உரிய நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
பருத்தித்துறை முதல் காங்கேசன்துறை வரையான வீதியை நாம் பொதுமக்களின் பாவனைக்கு ஏற்கனவே விடுவித்து தந்துள்ள போதிலும் தேசிய பாதுகாப்பை ஒட்டி இலங்கை போக்குவரத்து சபை பஸ்களை மாத்திரம் அதில் பயணிக்க அனுமதித்து உள்ளோம்.
இந்த தருணத்தில் யாழ்ப்பாண மாவட்ட கட்டளை தளபதியையும் வைத்து கொண்டு நான் ஒரு விடயத்தை கூறுகின்றேன். அது என்னவென்றால் அடுத்த வருட ஆரம்பம் முதல் இந்த வீதி வழியாக பொது மக்களின் வாகனங்களும் பயணிக்க முடியும். நான் உங்களிடம் வாக்கு கேட்பதற்காக வந்து இதை கூறவில்லை என்பதையும் தெரிவித்து கொள்கின்றேன்.
இங்கு வருகை தந்துள்ள பெற்றோர் அவர்களுடைய பிள்ளைகளின் மனங்களில் நல்லிணக்கம், சகோதரத்துவம் ஆகியவற்றை விதைத்து அவர்களை நல்லொழுக்கம் உள்ள நற்பிரஜைகளாக வளர்க்க வேண்டும் என்று கேட்டு கொள்கின்றேன்.
மீண்டும் ஒரு கொடிய யுத்தம் வேண்டாம் என்கிற செய்தியை உங்கள் பிள்ளைகள், உறவுகள், இளைய தலைமுறையினர் ஆகியோருக்கு எடுத்து சொல்லுங்கள் என்று இராணுவ தளபதி என்கிற வகையில் நான் கேட்டு கொள்கிறேன்.
ஏனென்றால், யுத்தத்தோடு சம்பந்தப்பட்டவர்களில் பெரும்பான்மையானோர் வெளிநாடுகளுக்கு சென்று தப்பி விட, எந்தவொரு சம்பந்தமும் இல்லாத அப்பாவிகள்தான் இங்கிருந்து கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றார்கள். உங்களுக்கு வீடுகள் போன்றவற்றை நாம் இப்போது வழங்கி வைப்பது போல அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீண்டும் எம்மால் பிடுங்கி கொள்ள முடியும்.
அத்தகைய நிலைக்கு தயவு செய்து நீங்கள் ஆளாக வேண்டாம் என்று கேட்டு கொள்கின்றேன். நான் முன்தீர்மானம் எதையும் மனதில் எடுத்து கொண்டவனாக திட்டமிட்டு இதை கூறவில்லை. எமது குழந்தைகளின் ஒளிமயமான எதிர்கால வாழ்வுக்காகவே கூறுகின்றேன் என்றார் இராணுவத் தளபதி.
No comments:
Post a Comment