திருடர்களை பிடிக்க முடியாவிட்டால் மக்களிடம் மன்னிப்புக் கோரி கதையை முடிக்க வேண்டும் - News View

About Us

Add+Banner

Breaking

  

Friday, March 2, 2018

demo-image

திருடர்களை பிடிக்க முடியாவிட்டால் மக்களிடம் மன்னிப்புக் கோரி கதையை முடிக்க வேண்டும்

sl-4-4
ஜனாதிபதியை மட்டும் நம்பி நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை நம்பியே நான் பொதுவாழ்வில் இருக்கிறேன். பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சர் பதவியை கொடுக்க முடியாவிட்டால், ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள். இதுவும் முடியாவிட்டால், எம்மால் திருடர்களை பிடிக்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் இந்நாட்டு மக்களிடம் மன்னிப்புக் கோரி கதையை முடிக்க வேண்டும் என முற்போக்கு கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்தார்.

கொழும்பு மட்டக்குளி போதி சமுத்ரா ராமவிஹாரையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மனோகணேசன் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பில் அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்,

“தனக்கு மூன்று மாதங்களுக்கு பொலிஸ் துறை அமைச்சு பதவியை கொடுங்கள். நான் திருடர்களை பிடிக்கிறேன்” என ஜனாதிபதி ஒருமுறை, அமைச்சரவையில் சொன்னார்.  அது நடைபெறவில்லை. அப்போது திருடர்களை பிடிப்பதை பிரதமர் ரணிலின் ஐக்கிய தேசிய கட்சி தடை செய்கிறது என மக்கள் பேசினார்கள். 

இப்போது பொலிஸ் துறை அமைச்சர் சாகல ரத்னாயக்க பதவி விலகிய பின், அந்த பதவியை சரத் பொன்சேகாவுக்கு கொடுக்க முடிவு செய்யப்பட்டது. அந்த முடிவை இன்று ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி எதிர்க்கிறது. இதனால் இப்போது திருடர்களை பிடிப்பதை ஜனாதிபதி மைத்திரியின் கட்சி தடை செய்கிறது என மக்கள் பேசுகின்றார்கள்.

அமைச்சர்கள் ராஜித, சம்பிக்க, அர்ஜுன, பொன்சேகா ஆகியோரும் ஒருமுறை திருடர்களை பிடிக்க இந்த அரசு தவறி விட்டது என்று கடுமையாக குற்றம்சாட்டி அமைச்சரவை கூட்டு பத்திரம் ஒன்றை அமைச்சரவையில் கொண்டு வந்தார்கள். 

ஆகவே, இன்று பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சர் பதவியை கொடுக்க முடியாவிட்டால், அதை ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள். இதுவும் முடியாவிட்டால், எம்மால் திருடர்களை பிடிக்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் இந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி கதையை முடிக்க வேண்டும்.

2015 ஆம் ஆண்டு மக்கள் தந்த ஆணையில் பல விஷயங்கள் உள்ளன. நாம் கொடுத்த வாக்குறுதிகளும் பல உள்ளன. ஜனநாயகம், பொலிஸ் சுயாதீனம், நீதிமன்ற சுயாதீனம், அரசியல் தீர்வு தரும் புதிய அரசிலமைப்பு, அரசியல் கைதிகள், காணி மீளளிப்பு, தோட்ட தொழிலாளருக்கு மலையகத்தில் காணி, தனி வீடு மற்றும் திருடர்களை பிடிப்பது என உள்ளன. 

இவற்றில் ஜனநாயகம், பொலிஸ் சுயாதீனம், நீதிமன்ற சுயாதீனம் ஆகியவை தொடர்பில் நம் முன்னேறியுளோம். ஏனைய சிலவற்றில் அரைக்கிணறு தாண்டியுள்ளோம். ஆனால், திருடர்களை பிடிக்க முழுக்க தவறிவிட்டோம். திருடர்களை பிடிப்பதில், அவரை இவரும், இவரை அவரும் தடுக்கிறார்கள். இரண்டும் கட்சி அரசியல்தான் காரணங்கள். 

ஒருதரப்பு பிடிக்க போனால், அடுத்த தரப்பு தடுப்பது இன்று ஒரே பிரச்சினையாக மாறியுள்ளது. இது ஒரு கள்ளன் பொலிஸ் விளையாட்டு அரசாங்கம் என்று மக்கள் பேசுகிறார்கள். கள்ளனை பிடிக்க பொலிஸ் போவார்களாம். ஆனால், கள்ளன் பிடிபட மாட்டார்களாம் அப்புறம் அதற்கு ஒரு காரணம் சொல்வார்களாம்.

இதற்கு ஜனாதிபதியும், பிரதமரும் மக்களுக்கு ஒரு நம்பும்படியான உடன் தீர்வை தர வேண்டும். மக்களின் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. உண்மையான மக்கள் பிரதிநிதிகளான எங்கள் பொறுமைக்கும் ஒரு எல்லையுண்டு. பிரதமரையோ, ஜனாதிபதியையோ மட்டும் நம்பி நாம் அரசியலுக்கு வரவில்லை. மக்களை நம்பியே நான் பொதுவாழ்வில் இருக்கிறேன் என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

Contact Form

Name

Email *

Message *