சுதந்திரக் கிண்ண முத்தரப்பு இருபதுக்கு 20 தொடருக்கான இறுதி இலங்கை அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் இலங்கை அணியின் விக்கெட் காப்பாளரும் துடுப்பாட்ட வீரருமான நிரோஷன் திக்வெல்ல இறுதி 15 பேர் கொண்ட அணியில் இடம்பெறவில்லை. ஆனால் கடந்த சில தொடர்களில் ஆடாமல் இருந்த குசல் ஜனித் பெரேரா காயத்திலிருந்து மீண்டு வந்து மீண்டும் அணியில் இடம்பிடித்துள்ளார்.
இலங்கை - இந்தியா - பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகள் மோதும் சுதந்திரக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பு ஆர்.பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் அரங்கில் ஆரம்பமாகவுள்ளது. இத் தொடரின் முதலாவது போட்டியில் இலங்கையும் இந்தியாவும் பலப்பரீட்சை நடத்துகின்றன.
இத் தொடருக்கான இருபது பேர் கொண்ட உத்தேச அணியொன்று கடந்த செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டது. அந்த வீரர்கள் பட்டியல் விளையாட்டுத்துறை அமைச்சரின் அனுமதிக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்றுமுன்தினம் இரவு 15 பேர் கொண்ட இறுதி அணியை இலங்கைக் கிரிக்கெட் நிறுவனம் அறிவித்தது.
அதன்படி முதலில் இருபது பேர் கொண்ட அணியில் இடம்பெற்றிருந்த நிரோஷன் திக்வெல்ல இறுதி அணியில் இடம்பெறவில்லை. அத்தோடு குசல் ஜனித் பெரேரா அந்த இடத்தைப் பிடித்துள்ளார். அதிரடி ஆட்டக்காரர்களான இருவரும் விக்கெட் காப்பாளர்கள் என்பதும் விசேட அம்சமாகும்.
அந்த வகையில் அறிவிக்கப்பட்டுள்ள இறுதி 15 பேர் கொண்ட அணியில் தினேஷ் சந்திமால் (அணித் தலைவர்), உபுல் தரங்க, தனுஷ்க குணதிலக, குசல் மெண்டிஸ், தசுன் சானக்க, குசல் ஜனித் பெரேரா, திஸர பெரேரா, ஜீவன் மெண்டிஸ், சுரங்க லக்மால் (உப தலைவர்), இசுரு உதான, அகில தனஞ்சய, அமில அபொன்சோ, நுவன் பிரதீப், துஷ்மந்த சமீர, தனஞ்சய டி சில்வா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
No comments:
Post a Comment