ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிராக கொண்டு வரப்படும் நம்பிக்கையில்லா பிரேரணையை ஆதரிப்பதா அல்லது நிராகரிப்பதா என்பது குறித்து கட்சியின் மத்திய குழுவில் தீர்மானம் எடுப்போம். நாம் எடுக்கும் தீர்மானங்கள் மக்களுக்கும், நாட்டுக்கும் ஏற்றவையாக அமையும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
அமைச்சரவை மாற்றங்களின் பின்னர் அடுத்த இரண்டு ஆண்டுகள் சரியான ஆட்சியினை கொண்டு செல்வோம் எனவும் அவர் தெரிவித்தார். தேசிய அரசாங்கத்தில் இடம்பெற்றுள்ள அமைச்சரவை மாற்றங்கள் மற்றும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் எழுந்துள்ள நெருக்கடிகளின் மூலம் பிரதமருக்கு எதிராக கொண்டுவரவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் நிலைப்பாட்டினை வினவியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது குறித்து அவர் மேலும் கூறுகையில்.
அமைச்சரவை மாற்றம் ஐக்கிய தேசியக் கட்சியின் பக்கமே இடம்பெற்றது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் அமைச்சர்கள் மாற்றம் அடுத்த வாரமளவில் இடம்பெறும் என எதிர்பார்க்க முடியும். வழமையான மாற்றங்களே இடம்பெற்றுள்ளன. அமைச்சரவை மாற்றங்களில் எப்போதுமே அனைவரும் மகிழ்ச்சியடைவதில்லை. எனினும் சரியான மாற்றங்கள் இடம்பெற்றால் அது வரவேற்கக்கூடியதாக அமையும் என நாம் நம்புகின்றோம்.
இரண்டு கட்சிகள் இணைந்து ஆட்சியினை முன்னெடுக்கும் நிலையில் குழப்பங்கள் இடம்பெறாமல் இல்லை. நல்லாட்சி அரசாங்கம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் இருந்து சில சில முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன. அதனை கருத்தில் கொண்டு நாம் இணைக்கப்பாடுகளையும் கண்டுள்ளோம். முன்னெடுக்கப்பட வேண்டிய முக்கிய மாற்றங்கள் அனைத்தும் விரைவில் இடம்பெறும். அடுத்த இரண்டு ஆண்டுகள் எந்தவித முரண்பாடுகளும் இல்லாத வகையில் நாம் ஆட்சியினை முன்னெடுப்போம்.
பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்று கொண்டுவருவது குறித்து ஐக்கிய தேசியக் கட்சியினர் காரணிகளை முன்வைத்துள்ளனர். எனினும் அவர்கள் எந்தக் காரணிகளை உள்ளடக்கிய நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றினை கொண்டுவரப்போகின்றனர் என்பது தெரியவில்லை. எம்மிடமும் இது குறித்து எந்தவித கலந்துரையாடலும் இடம்பெறவில்லை. அவர்கள் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதை அடிப்படையாகக் கொண்டே எமது செயற்பாடுகளும் அமையும்.
எவ்வாறு இருப்பினும் பிரதமருக்கு எதிராக கொண்டுவரும் நம்பிக்கையிலா பிரேரணை குறித்து ஸ்ரீலங்கா சுதந்தரக் கட்சியின் மத்தியகுழுக் கூட்டத்தில் நாம் ஆராய்வோம். அதில் ஜனாதிபதி இறுதியாக எடுக்கும் முடிவுக்கு அமைய நாமும் செயற்படுவோம். இப்போது வரையில் நம்பிக்கையில்லா பிரேரணை குறித்து நாம் எந்தவித தீர்மானமும் எடுக்கவில்லை.
அவசியமான நேரத்தில் உரிய தீர்மானங்களை நாம் முன்னெடுப்போம். எடுக்கும் தீர்மானம் நாட்டுக்கும் மக்களுக்கும் ஏற்ற ஒன்றாகவும் அரசாங்கத்தினை குழப்பாத அதேபோன்று நாட்டினை குழப்பாத வகையிலும் அமையும் என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும்.
எவரதும் தனிப்பட்ட தேவைகளில் காய்நகர்த்தலை முன்னெடுக்க கையாளும் சூழ்ச்சியாக இவை அமையுமாயின் நாமும் அதில் பங்குகொள்ள முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் அவர்களுக்குள் ஏற்பட்டுள்ள குழப்பங்களை அனைவரையும் வைத்து தீர்த்துக்கொள்ள முடியும் என நினைத்தால் அது ஏற்றுகொள்ள முடியாத விடயமாகும். எனினும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி சரியான முடிவுகளை எடுக்கும். நாம் ஆரோக்கியமான செயற்பாடுகளை முன்னெடுப்போம். அதில் எந்த சந்தேகமும் இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment