இலங்கை முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியான சம்பவங்கள் இடம்பெற்றாலும், முஸ்லிம்களின் முழுமையான ஆதரவோடு ஆட்சிபீடம் ஏறிய தற்போதையே ஜனாதிபதி மைத்திரி பால சிறிசேன, எந்தவித கருத்துக்களையும் வெளியிடாது மௌனத்தை தொடர்ச்சியாக பேணி வருகிறார்.
ஒரு நாட்டில் பேசுபொருளான பிரச்சினை எழுகின்ற போது, அந்த நாட்டின் அரச தலைவர் அது பற்றிய தெளிவுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். அதற்காகவே தான், அவர் அந்நாட்டின் அரச தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். இலங்கை முஸ்லிம்களின் முழு ஆதரவோடு இந்த அரசு நிறுவப்பட்டிருந்தது.
தங்களுக்கு ஆதரவளித்த முஸ்லிம்களுக்கு ஒரு பிரச்சினை என்றால், அந்நாட்டின் அரச தலைவர் ஒரு படி மேல் கவனம் செலுத்தி குறித்த பிரச்சினையை கையாள வேண்டும். முஸ்லிம்களுக்கு எதிராக எப்படியான பாரதூரமான விடயங்கள் இடம்பெற்றாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவோ தொடர்ச்சியாக மௌனத்தையே கடைப்பிடிப்பதையே வழக்கமாக கொண்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் ஆட்சிக் காலத்தில் அளுத்கமை கலவரம் நடைபெற்றிருந்தது. இதன் போது பதில் பாதுகாப்பு அமைச்சராக மைத்திரிபால சிறிசேனவே இருந்தார். அளுத்கமை கலவரத்தின் போது உடனடியாக செயற்பட்டு முஸ்லிம்களை சரியான முறையில் பாதுகாக்காமைக்கான முழுப் பொறுப்பையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவே ஏற்க வேண்டும். அந்த கலவரம் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி எங்கும் பேசிய வரலாறில்லை. குற்றக் கறை என்னவோ, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மீதே படிந்துள்ளது.
தற்போதைய ஜனாதியின் ஆட்சிக் காலத்தில் கிந்தோட்டை மற்றும் அளுத்கமை ஆகிய பிரதேசங்களில் நேரடியான கலவரங்கள் நடைபெற்றுள்ளன. இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி ஒரு வார்த்தையளவான கருத்து கூட வெளியிடவில்லை.
முஸ்லிம்களது பிரச்சினைகள் தொடர்பில் கருத்து கூற அஞ்சும் ஜனாதிபதி, முஸ்லிம்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பார் என்று நம்புவதை போன்ற மடமை வேறு எதுவுமே இருக்காது. இந்த விடயமானது அவர் முஸ்லிம்களை ஒரு பொருட்டாகவே கவனத்தில் கொள்ளமையை எடுத்து காட்டுகிறது. இலங்கை முஸ்லிம்களுக்கு சரியான நீதி நிலை நாட்டப்பட வேண்டுமாக இருந்தால், முதலில் ஜனாதிபதி மைத்திரியை முஸ்லிம்கள் புறக்கணிக்க வேண்டும்.
No comments:
Post a Comment