காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கு சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றியாகுமென்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் 2016ம் ஆண்டில் காணாமல் போனோர் தொடர்பான அலுவலகச் சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்ற முடிந்தது. இந்த அலுவலகம் கடந்த மாதம் முதல் செயற்பட்டு வருகின்றது.
இலங்கையில் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களைக் கண்டறிந்து, அது தொடர்பான சிபார்சுகளை மேற்கொள்வதே இந்த அலுவலகத்திற்கு உள்ள முக்கிய பொறுப்பாகும். இது தொடர்பாக அமைச்சர் மங்கள சமரவீர வெளியிட்டுள்ள அறிக்கையில்,
1980ம் ஆண்டு முதல் காணாமல் போனோர் தொடர்பான விடயங்களை இது தொடர்பில் தாம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாக சுட்டிக்காட்டினார்.
ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு 1980ம் ஆண்டு முதல் காணாமல் போனோர் குறித்து, முக்கிய தகவல்களைப் பெற்றுக் கொடுத்து, காணாமல் போனோரின் குடும்ப அங்கத்தவர்களுக்கு நீதியை நிலைநாட்டுவதற்காக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷம், தாமும் செயற்பட்டதாக அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.
இந்த முயற்சி வெற்றி பெறுவதற்காக, அன்னையர் முன்னணி அமைப்பு என்ற பெயரில் அமைப்பொன்றும் அமைக்கப்பட்டது. அதன் இணை அமைப்பாளராக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும், தாமும் செயற்பட்டதாக அவர் குறிப்பிட்டார். இருப்பினும் மஹிந்த ராஜபக்ஷ தற்போது படை வீரர்களை பணயமாக பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டி இதற்கு எதிராக செயற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த விடயம் ஒருதரப்பினருக்கு வரையறுக்கப்பட்டதல்ல. 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் கடந்த காலங்களில் காணாமல் போயிருந்தனர். இவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கும் நீதியை நிலைநாட்டுவதே இந்த பணியகத்திற்கு உள்ள பொறுப்பாகும். இதனால் குறுகிய அரசியல் நோக்கத்தை நிறைவேற்றுவதற்கான முயற்சி இதுவல்ல.
இன, மதம், பிரதேச வேறுபாடுகளின்றி காணாமல் போனோர் தொடர்பான குடும்ப அங்கத்தவர்கள் எதிர்கொண்ட சிரமங்களுக்குத் தீர்வை மேற்கொள்வதே இதன் நோக்கமாகும். இதனால் இன பேதங்களுக்கு அப்பால் அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டுமென்றும் அமைச்சர் மங்கள சமரவீர மேலும் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment