புராதன இலங்கையில் காணப்பட்ட நீர்ப்பாசனத் துறை வளர்ச்சியை மீண்டும் நாட்டில் ஏற்படுத்தும் நோக்கோடும் விவசாயத்தில் தன்னிறைவடைந்த நாட்டினைக் கட்டியெழுப்பும் நோக்கோடும் முன்னெடுக்கப்படவுள்ள 2400 குளங்களைப் புனரமைக்கும் செயற்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களின் தலைமையில் இன்று (02) முற்பகல் இடம்பெற்றது.
நீண்டகாலமாக புனரமைப்புச் செய்யப்படாத வடக்கு, கிழக்கு, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலுள்ள 2400 புராதன குளங்கள் இந்த செயற்திட்டத்தின் ஊடாக புனரமைப்புச் செய்யப்படவுள்ளதுடன், பொலன்னறுவை மாவட்டத்தில் 123 குளங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
இச் செயற்திட்டத்தின் கீழ் புனரமைப்புச் செய்யப்படவுள்ள முதலாவது குளமான மின்னேரிய, ஹிங்குராங்கொட பிரதேசத்திலுள்ள சந்தனபொக்குன குளத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.
புராதன அரச காலத்தில் நிர்மாணிக்கப்பட்ட இக்குளத்திலிருந்து ஆயிரக்கணக்கான ஏக்கர் விளை நிலங்களுக்கு நீர் விநியோகிக்கப்படுகின்றது. 800 சதுர அடிகள் பரப்புடைய நீர்க் கொள்ளளவினை கொண்ட இந்த வாவியினால் பிரதேசத்தின் 300 விவசாயக் குடும்பங்கள் நன்மை அடைகின்றன.
'எழுச்சிபெறும் பொலன்னறுவை' மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் கீழ் இலங்கை இராணுவத்தின் பங்களிப்புடன் இந்த புனரமைப்புச் செயற்பாடுகள் இடம்பெறுகின்றன.
பிரதேசத்தின் மக்கள் பிரதிநிதிகள் பலரும் பொலன்னறுவை மாவட்ட செயலாளர் ரஞ்சித் ஆரியரத்ன, ”எழுச்சி பெறும் பொலன்னறுவை” மாவட்ட அபிவிருத்தி செயற்திட்டத்தின் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டன.
No comments:
Post a Comment