துபாயில் மரணம் அடைந்த ஸ்ரீதேவியின் உடல் நேற்றிரவு மும்பை வருவதற்கு உறுதுணையாக இருந்து கேமராக்களில் சிக்காத ஒருவரைப் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
துபாய், ஷார்ஜா, அபுதாபி போன்ற ஐக்கிய அரபு நாடுகளில் அசாதாரண சூழலில் யார் மரணம் அடைந்தாலும், இங்குள்ளவர்களில் ஏழை, செல்வந்தர் என்ற பாகுபாடு இல்லாமல் அரசு சார்ந்த நடைமுறைகள் அனைவருக்குமே பொதுவானது.
மரணம் பற்றிய தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்துக்கு மருத்துவர்களும், போலீசாரும் வந்து சேருவார்கள். மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்ததும் அந்த உடல் போலீஸ் பிணவறைக்கு அனுப்பி வைக்கப்படும். சுமார் 24 மணி நேரத்துக்கு பின்னர் வெளியாகும் பிரேத பரிசோதனை அறிக்கை போலீசாருக்கு திருப்தி அளித்தால் மட்டுமே பிணவறையில் இருந்து பிரேதம் விடுவிக்கப்படும்.
அப்படி இல்லாமல், சந்தேகிக்கும் சூழலில் மரணம் நேர்ந்திருந்தால், பொது விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு அந்த இறுதி முடிவு தெரிந்த பின்னர்தான் உடலை பெற்று செல்லலாம். இப்படி, மரணம் அடையும் வெளிநாட்டினர் தொடர்பான வேலைகளை பொதுத்தொண்டாக கவனித்து வருபவர் அஷ்ரப் ஷெர்ரி தாமரஸ்ஸேரி (44).கேரள மாநிலத்தை சேர்ந்த இவர் அஜ்மன் நகரில் மெக்கானிக்காக தொழில் செய்து வருகிறார்.
ஐக்கிய அரபு நாடுகளில் பணியாற்ற சென்று, பல்வேறு காரணங்களால் உயிரிழந்த சுமார் 4,700 பிரேதங்கள் தொடர்பான அந்தந்த நாடுகளின் அரசு நடைமுறைகளை பூர்த்தி செய்து, மரணச் சான்றிதழ் பெற்று 38 வெளிநாடுகளுக்கு அனுப்பி வைக்க துணையாக இருந்துள்ளார். மேலும், கடனுடன் காலமான சிலரது பிரேதங்களுக்கான பாக்கித்தொகையை சரிசெய்து, அவர்களின் தாய்நாட்டுக்கு அனுப்பி வைப்பதிலும் இவர் உதவியுள்ளார்.
அவ்வகையில், நடிகை ஸ்ரீதேவி உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டபோது, உள்ளூர் பத்திரிகையாளர்களும், வெளிநாட்டு - குறிப்பாக, இந்திய ஊடகங்களும் தாமரஸ்ஸேரியின் கைபேசி இணைப்பில் வரிசைகட்ட தொடங்கினர்.
ஸ்ரீதேவியின் பிரேத பரிசோதனை மற்றும் உடல் கூறியல் அறிக்கை வெளியானதும், போலீசாரின் அனுமதி பெறுவதில் தாமதம் ஏற்பட்டது. பின்னர், உடலை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க போலீசாரின் அனுமதி கிடைத்ததும், சற்றும் தாமதிக்காமல் அந்த கடிதத்துடன் ஊருக்கு ஒதுக்குபுறத்தில் ஸ்ரீதேவியின் உடலை பதப்படுத்தும் (எம்பால்மிங்) ஸ்குவாட் என்னும் இடத்தை நோக்கி புழுதி பறக்கும் சாலை வழியாக தாமரஸ்ஸேரி விரைவாக சென்றடைந்தார். அதற்குள் ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட்டும் ரத்து செய்யப்பட்டது.
அங்கிருந்த அதிகாரிகளிடம் ஸ்ரீதேவியின் உடலை விடுவிக்க அனுமதிக்கும் துபாய் அரசின் உத்தரவை ஒப்படைத்தார். மேலும், போனி கபூர் உள்ளிட்ட மூன்று பேர் உடனடியாக ஸ்ரீதேவியின் உடலுடன் செல்லும் விமானத்தில் பயணிப்பதற்கான அனுமதி கடிதத்தையும் அளித்தார்.
அதற்குள் பதப்படுத்தி முடிக்கப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் உடனடியாக தனி விமானம் காத்திருந்த இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. உடல் ஏற்றப்பட்டதும் சற்றும் தாமதிக்காமல் இந்தியாவை நோக்கி விமானம் தனது பயணத்தை தொடங்கியது. அதுமட்டுமின்றி, நேற்று ஒருநாளில் மட்டும் மேலும் 5 வெளிநாட்டினரின் பிரேதங்களை அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பியும் வைத்துள்ளார்.
சுமார் 48 மணிநேர உழைப்பு மற்றும் அலைச்சலுக்கு பின்னர் துபாயில் இருந்து தென்மேற்கே சுமார் 35 கிலோமீட்டர் தூரத்தில் தனது மனைவி பிள்ளைகளுடன் வாழ்ந்துவரும் அஷ்ரப் ஷெர்ரி தாமஸ்ஸேரி, ஸ்ரீதேவியின் உடலை சுமந்த விமானம் துபாயில் இருந்து புறப்பட்ட பிறகுதான் தனது வீட்டுக்கு சென்றுள்ளார்.
இதுபோன்ற தன்னலமற்ற பொதுச்சேவையை பாராட்டி அளிக்கப்பட்ட ஏராளமான விருதுகளும் கேடயங்களும் அவரது வீட்டு அலுமாரியை அலங்கரித்து வருகின்றன. சுவரில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் அவர் இருக்கும் புகைப்படத்தையும் பார்க்க முடிகிறது. இவரைப் பற்றிய தகவல்களை துபாய் ஊடகங்கள் நேற்று வெளியிட்ட பின்னர் பின்னிரவு நேரம் என்றும் பாராமல் அஷ்ரப் ஷெர்ரி தாமஸ்ஸேரியின் வீட்டை பத்திரிகையாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
நான் இந்த சேவையை மற்றவர்களின் ஆசிர்வாதங்களை பெறுவதற்காக மட்டுமே செய்து வருகிறேன். அதுமட்டுமின்றி, இங்கே வெளிநாட்டினர் யாராவது இறந்து விட்டால் அவர்களின் உடலை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க செய்ய வேண்டிய அரசு நடைமுறைகள் பற்றி அவர்களுடன் இருக்கும் நண்பர்களுக்கோ, உறவினர்களுக்கோ அதிகம் தெரிவதில்லை. அதனால் அவர்களுக்கு தேவையான உதவிகளை நான் செய்து அனுப்பி வைக்கிறேன் என்று இவர் கூறி முடிப்பதற்குள் அவரது கைபேசி மணி மூச்சுவிடாமால் ஒலித்து கொண்டிருக்கிறது.
அந்த அழைப்புகளில் பெரும்பாலானவை.. அரபு நாடுகளில் இறந்துப்போன உறவினரின் பிரேதத்தை எதிர்பார்த்து வெளிநாடுகளில் சோகத்துடன் காத்திருக்கும் சுற்றத்தாரின் அழைப்பாகவும் இருக்கலாம்!
No comments:
Post a Comment