நிதிசார் ஆபத்தைக் கட்டுப்படுத்துவதற்கு நாடுகளுக்கு இடையில் ஓர் இணக்கப்பாடு அவசியம் என்று நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தினார்.
ஜி-24 நாடுகளின் தொழில்நுட்பக்குழுக் கூட்டம் கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஆரம்பமானது. நிதி ஆபத்துக்களைக் கட்டுப்படுத்துவதற்காக நாடுகளுக்கு இடையில் ஒருமைப்பாடு அவசியம் என ஆரம்ப நிகழ்வில் பங்கேற்ற அமைச்சர் மங்கள சமரவீர வலியுறுத்தினார். இதற்காக ஒரு கொள்கை ரீதியான இணக்கப்பாடு அவசியம் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறைந்த வருமானம் பெறும் நாடுகளுக்கும் வளர்முக நாடுகளுக்கும் உதவி செய்வதற்காக உலக வங்கியும், சர்வதேச நாணய நிதியமும் கடந்த ஒக்டோபர் மாதம் கடனை சமநிலையில் பேணும் புதிய திட்டமொன்றை வகுத்தன. இது இந்தவருடத்தின் நடுப்பகுதியில் இருந்து நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதன் மூலம் நிதிசார் ஆபத்துக்களை குறைக்கும் வல்லமை காணப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார். ஜி-24 பணியகத்தின் தற்போதைய தலைமைத்துவம் இலங்கைக்கு கிடைத்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இரண்டு நாட்கள் நடைபெறும் இந்த மாநாட்டில் ஜி-24 குழும நாடுகளைச் சேர்ந்தநிதியமைச்சுக்களின் செயலாளர்கள், மத்திய வங்கி ஆளுநர் உட்பட 45 ற்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.
No comments:
Post a Comment