அரசாங்கம் மூன்று வருட பொருளாதாரத் திட்டமொன்றை வகுத்திருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.
தலா வருமானத்தை 5 ஆயிரம் டொலர்கள் வரை அதிகரித்தல், 10 இலட்சம் தொழில்வாய்ப்புக்களை உருவாக்குதல், நேரடி வெளிநாட்டு முதலீடுகளை ஐந்து பில்லியன் டொலர்கள் வரை அதிகரித்தல் என்பன இதன் நோக்கமாகும்.
இதன் மூலம் இலங்கையை நடுத்தர வருமானம் பெறும் நாடாக மாற்றும் 2025ம் ஆண்டு இலக்கை அடைந்து கொள்ள முடியும் என்று குறிப்பிட்டார். மும்பை நகரில் நடைபெற்ற இந்திய மற்றும் தெற்காசிய முதலீட்டு மாநாட்டில் கலந்து கொண்டு அவர் இந்தக்கருத்துக்களை வெளியிட்டார்.
ஏற்றுமதி வருமானம் கடந்த வருடம் 13 தசம் 4 பில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளது. இது அதற்கு முந்திய வருடத்துடன் ஒப்பிடுகையில் 10 சதவீத வளர்ச்சியாகும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதேபோல் தேயிலை மற்றும் மீன்பிடித்துறைகள் தலா 20 மற்றும் 40 சதவீதங்களால் அதிகரித்துள்ளன. குறிப்பாக ஜிஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை மூலம் இலங்கையினால் ஐரோப்பாவிற்குள் தமது சந்தை வாய்ப்பை விரிவுபடுத்த முடிந்திருப்பதாகவும் தெரிவித்தார்.
2017ம் ஆண்டின் நிறைவுப் பகுதியில் 7 தசம் 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்த இலங்கையின் வெளிநாட்டு கையிருப்பு நிதியை இந்த வருட இறுதிப்பகுதிக்குள் 10 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாகவும் இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment