அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்! அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்! - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

அம்பாறை நகரில் மிலேச்சத்தனமான தாக்குதல்! அமைச்சர் ரிஷாட் பங்கேற்ற உயர்மட்டக் கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள்!

அம்பாறையில் இடம்பெற்றது போன்று, இந்த நாட்டில் இவ்வாறான மோசமான சம்பவங்கள் இனிமேலும் இடம்பெறாத வண்ணம் பாதுக்காப்புத் தரப்பினர் முன்கூட்டியே நடவடிக்கை எடுத்து அதனை உறுதிப்படுத்த வேண்டுமென, அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர், அமைச்சர் ரிஷாட் பதியுதீன் வலியுறுத்தினார்.

அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் அலுவலகத்தில், அரசாங்க அதிபர் துசித பி வனிகசிங்க தலைமையில் இன்று மாலை (28) இடம்பெற்ற உயர்மட்டக் கூட்டத்தில், அமைச்சர் இவ்வாறு வலியுறுத்தினார்.

பொலிஸ், இராணுவ உயரதிகாரிகள் கலந்துகொண்ட இந்த உயர்மட்டக் கூட்டத்தில் பிரதி அமைச்சர் அமீர் அலி, ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் தலைவர் ஹசன் அலி, மக்கள் காங்கிரஸின் முக்கியஸ்தர்களான நௌஷாட், அன்சில் உட்பட பலரும் கருத்துக்களை வெளியிட்டனர்.
பள்ளிவாசல் மீது நேற்று முன்தினம் இடம்பெற்ற வெறித்தனமான தாக்குதலின் பின்னர், அந்தப் பிரதேசத்தில் வாழும் மக்கள் பீதியுடன் வாழ்ந்து வருகின்றனர். பள்ளிவாசலில் ஐவேளை தொழுவதற்குக் கூட அச்சம் ஏற்பட்டுள்ளதால், பள்ளிவாசலுக்கு அருகே பொலிஸ் பாதுகாப்புச்சாவடி ஒன்றை அமைத்துத் தருமாறு தம்மிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாகவும், அதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் உயர்மட்டக் கூட்டத்தில் தெரிவித்தபோது, அங்கு பிரசன்னமாகி இருந்த பிரதிப் பொலிஸ்மா அதிபர் டீ.ஐ.ஜீ. நுவன் மெதசிங்க அதனை ஏற்றுக்கொண்டு, இதற்கான நடவடிக்கைகளை எடுப்பதாக உறுதியளித்தார்.

பள்ளிவாசலில் துண்டிக்கப்பட்ட நீர் மற்றும் மின்சாரம் ஆகியவற்றை இடையறாது வழங்குவதற்கும் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அத்துடன், அம்பாறை பிரதேசத்தில் உள்ள ஏனைய பள்ளிவாசல்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தொடர்பில் இங்கு பரிசீலிக்கப்பட்டது.

இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை தோற்றுவிக்கும் வகையில் இந்தப் பிரதேசத்தில் இவ்வாறான வன்முறைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றன. இதனை கட்டுபாட்டிற்குள் கொண்டுவராவிட்டால், நாட்டிலே வேறொரு பிரச்சினை தலைதூக்கும். இன்று சர்வதேச ஊடகங்களினூடாக இந்த பள்ளிவாசல் தாக்கப்பட்ட செய்திகள் சர்வதேசத்தைச் சென்றடைந்திருக்கின்றது.
சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்கள் இந்தப்பிரதேசத்தில் அந்நியோன்னியமாக நீண்டகாலமாக வாழ்ந்து வந்திருக்கின்றார்கள். எனவே, அவர்களுடைய பாதுகாப்பு என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும். அதற்காக குறிப்பாக பொலிஸார் சட்டத்தை உரியமுறையில் நடைமுறைப்படுத்துவதற்கு நான் ஒருபோதும் தடையாக நிற்கபோவதில்லை. அவர்கள் சட்டத்தை அமுல்படுத்துவதோடு, இவ்வாறான சம்பவங்கள் இனிமேலும் ஏற்படவிடாமல் தடுப்பதற்கான சமாதானக் குழுவை ஏற்படுத்தி அமைதியை நிலை நாட்டுமாறு அரசாங்க அதிபரிடம், அமைச்சர் கோரிக்கை விடுத்தார்.

இது திட்டமிடப்பட்ட ஒரு செயலா? இல்லையா? என்பது தொடர்பில் உரிய முறையில் ஆராய்ந்து, அறிக்கை சமர்ப்பிக்கவேண்டியது பொலிஸாரின் கடமையாகும். ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களிடம் இது தொடர்பிலும் நாம் கலந்தாலோசித்திருக்கின்றோம்.

கடந்த 40, 50 வருட காலமாக இந்தப் பிரதேசத்திலே இவ்வாறான பிரச்சினைகள் இடம்பெறவில்லை. தொடர்ந்து மூன்று முஸ்லிம் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளமையானது, ஒரு திட்டமிட்ட செயலாக இருக்கலாம் என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. இந்த பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்த வேண்டியது பொலிஸாரின் கடமையாகும் என அமைச்சர் ரிஷாட் வலியுறுத்தினார்.

இதேவேளை, அம்பாறை பள்ளிவாசலின் தலைவர், எதிர்காலத்தில் இந்த நகரில் வாழும் சிங்கள, முஸ்லிம், தமிழ் மக்களின் இன நல்லுறவை வலுப்படுத்துவதற்கான அவசியம் குறித்து தனது கருத்துக்களையும் முன்வைத்தார்.

No comments:

Post a Comment