பெல்லன்வில ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் பேராசிரியருமான சங்கைக்குரிய பெல்லன்வில விமலரதன தேரர் இன்று (03) காலமானார். நேற்றைய தினம் (02) குறித்த விகாரையின் யானைக் குட்டியொன்றுக்கு உணவு வழங்குவதற்கு சென்ற வேளையில், குறித்த யானையால் தாக்கப்பட்டு, காயமடைந்த நிலையில் களுபோவிலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
வலது தோள்பட்டை என்பு, மற்றும் 10 இற்கும் மேற்பட்ட விலா என்புகள் உடைந்த நிலையில் காணப்பட்டதை அடுத்து, அங்கிருந்து தனியார் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சுமார் 10 மணித்தியால சத்திரசிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார். ஆயினும் குறித்த சிகிச்சைகள் பலனளிக்காத நிலையில், 75 வயதான பெல்லன்வில விமலரதன தேரர் இன்று (03) காலை மரணமடைந்தார்.
ஶ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக வேந்தரான பெல்லன்வில விமலரதன தேரர், களனி வித்யாலங்கார பல்கலைக்கழகத்தில் கலைமாணி பட்டத்தை பெற்ற அவர், இங்கிலாந்தின் லங்கெஸ்டர் பல்கலைக்கழகத்தில் முதுமாணி மற்றும் கலாநிதி பட்டங்களை பெற்ற அவர், பெளத்த மதம் சார்ந்த பல்வேறு நூல்களை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2015 ஓகஸ்ட் 04 ஆம் திகதி பெல்லன்வில விமலரதன தேரருக்கு மீண்டும் 5 வருடங்களுக்கு ஶ்ரீ ஜயவர்தன பல்கலைக்கழக வேந்தராக நியமனம் நீடிக்கப்பட்ட போது..
அவரது இறுதிக் கிரியைகள் தொடர்பான கலந்துரையாடல் இன்று (03) இரவு அனைத்து தரப்பினரதும் பங்குபற்றுதலுடன் இடம்பெறவுள்ளதாக பெல்லன்வில விகாரையின் பெரஹர குழு செயலாளர் கேசரலால் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை அவரது இறுதிக் கிரியைகள் இடம்பெறும் தினத்தை துக்க தினமாக பிரகடனப்படுத்துமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment