இலங்கையின் 70ஆவது சுதந்திர தின நிகழ்வு நாளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கொழும்பு காலிமுகத்திடலில் இடம்பெறவுள்ளது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தலைவர்களும் முப்படை பிரதானிகளும் அரசியல் பிரமுகர்களும் நிகழ்வில் கலந்துகொள்கின்றனர்.
பிரித்தானிய அரச குடும்பத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி இளவரசர் எட்வேர்ட்டும் அவரது பாரியாரும் சுதந்திரதின நிகழ்வில் கலந்துகொள்வதுடன், இந்தியா, சீனா, அமெரிக்கா மற்றும் சர்வதேச நாடுகளின் பிரதிநிதிகள், தூதுவர்கள் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.
முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா குமாரதுங்க அம்மையார், மஹிந்த ராஜபக்ஷ் மற்றும் முன்னாள் பிரதமர் தி.மு ஜெயரத்ன ஆகியோருக்கும் அழைப்புகள் விடுக்கப்பட்டுள்ளன. பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் ஆளும், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அனைவருக்கும் நிகழ்வில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள சர்வமத வழிபாட்டு நிகழ்வுகள் இன்று ஆரம்பமாகின்றன. கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள முழு இரவு பிரித் நிகழ்வு இன்று இடம் பெறவிருக்கின்றது. அதேபோல் சுதந்திர தினத்தன்று ஒழுங்கு செய்யப்பட்டுள்ள இந்து மத வழிபாட்டு நிகழ்வு கொழும்பு பொன்னம்பலவாணேஸ்வரர் ஆலயத்தில் இடம்பெறவிருக்கின்றது. அத்துடன் இஸ்லாமிய மத நிகழ்வுகள் கொழும்பு அக்பர் ஜூம்ஆ பள்ளிவாசலில் விசேட தொழுகை இடம்பெறவிருக்கின்றன. கிறிஸ்தவ மத வழிபாட்டு நிகழ்வுகள் கொழும்பு டாம் வீதியில் அமைந்துள்ள மெதடிஸ் தேவாலயத்தில் இடம்பெறவிருக்கின்றன. கத்தோலிக்க சமய ஆராதனைகள் கொழும்பு-10, பற்றிமா தேவாலயத்தில் இடம்பெறவிருக்கின்றது.
நாளைய தினம் விஷேட போக்குவரத்து, பாதுகாப்பு கட்டமைப்புக்களை பொலிஸார் செயற்படுத்த தீர்மானித்துள்ளனர். அதன்படி சுதந்திர தினத்தன்று பொலிஸார் விஷேட பாதுகாப்பு மற்றும் போக்கு வரத்து கடமைகளில் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இன்று கொள்ளுபிட்டி, கொம்பனி வீதி பகுதியிலும் விஷேட போக்கு வரத்து திட்டங்கள் அமுலாக்கப்படவுள்ளன.
இன்று ஒத்திகைகள் இடம்பெறுவதால் கொள்ளுபிட்டி சந்தி, கொம்பனி வீதி சந்தி பகுதிகளை ஊடறுத்தோ காலி முகத்திடல் ஊடாகவோ காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை எவரும் பயணிக்க வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக இன்று ஒத்திகைகளின் போது, காலி முகத்திடல், கோல்பேஸ் சுற்றுவட்டம் தொடக்கம் என்.எஸ்.ஏ. சுற்றுவட்டம் ஊடாக லோட்டஸ் வீதியின் செரமிக் சந்திவரையான வீதியும், கொம்பனி வீதி புகையிரத நிலையத்தின் அருகில் இருந்து கோல்பேஸ் சுற்றுவட்டம் வரையிலான மார்க்கன் மார்க்கர் வீதியும் காலை 7.00 மணி முதல் நண்பகல் 12.00 மணிவரை மூடப்பட்டிருக்கும். இதனைவிட கொள்ளுபிட்டி சந்தியில் இருந்து கோல்பேஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதியின் போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டு, அலுவலகங்கள், பாடசாலை, அப்பகுதியில் வசிப்போர் மட்டும் செல்ல அனுமதிக்கப்படுவர்.
இதனைவிட சுதந்திர தினத்தன்று விஷேட போக்குவரத்து திட்டங்கள் அமுல்படுத்தப்படும். அதிகாலை 5.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரை இந்த போக்குவரத்து திட்டம் அமுலில் இருக்கும். நாளைய தினம் குறித்த காலப்பகுதியில் காலி வீதியின் கோல்பேஸ் சுற்றுவட்டம் முதல் ஜனாதிபதி செயலகம் வரையிலான பாதையும் மற்றும் சைத்திய வீதி ஆகியன் முற்றாக மூடப்பட்டிருக்கும்.
அத்துடன் கொள்ளுபிட்டி சந்தி முதல் கோல்பேஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி, கொள்ளுப்பிட்டி சாந்த மைக்கல் சுற்றுவட்டம் ஊடாக காலி வீதிக்குள் நுழையும் வீதி, ரொடுன்டா சுற்றுவட்டம் ஊடாக காலி வீதிக்குள் உள் நுழையும் வீதி, செரமிக் சந்தி ஊடாக ஜனாதிபதி செயலகம் நோக்கி செல்லும் வீதி, சீனோர் சந்தி ஊடாக கோட்டை சி.டி.ஓ. பகுதிக்கு உள் நுழையும் வீதி, கோட்டை சி.டி.ஓ. சந்தி ஊடாக செரமிக் சந்தியை நோக்கி செல்வது, கான் சுற்றுவட்டம் ஊடாக கோட்டை பகுதிக்கு , மாகன் மாக்கார் மாவத்தை, உத்தராநந்த மாவத்தை சந்தி ஊடாக கோல்பேஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி ஆகியனவும் மூடப்படும்.
இதேவேளை காலி முகத்திடலை ஊடறுத்து கொழும்புக்குள் உள்நுழையும் பார ஊர்திகள் அன்றைய தினம், வெள்ளவத்தை டப்ளியூ.ஏ.சில்வா மாவத்தை ஊடாக, பழைய ஹெவலொக் வீதி, மாயா சுற்றுவட்டம் , ஹெவலொக் வீதி, திம்பிரிகஸ்யாய வீதி, பேஸ்லைன் வீதி ஊடாக கொழும்புக்குள் உள்நுழைய முடியும். இதனைவிட ஹெவலொக் வீதி, தும்முல்லை, சொய்ஸா சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி ஊடாக மருதானை, டெக்னிகல் சந்தி ஊடாகவும் கொழும்பை வந்தடைய முடியும்.
கொழும்பில் இருந்து வெளியேறும் பார ஊர்திகளும் அதே வீதியின் ஊடாக வெள்ளவத்தை வரை பயணிக்க முடியும். இதே நேரம் காலி வீதியூடாக கொழும்புக்குள் உள் நுழையும் பஸ் மற்றும் இலகு ரக வாகங்கள், காலி வீதியூடாக பகதலே வீதி, ஆர்.ஏ.டி.மெல் மாவத்தை, பெளத்தாலோக்க மாவத்தை, தும்மூலை சுற்றுவட்டம், தேஸ்டன் வீதி, ஜே.ஓ.சி. சந்தி, கிளாஸ் ஹவுஸ் சந்தி, நந்த மோர்ட்டர்ஸ், ஹோர்ட்டன் சுற்றுவட்டம், சொய்ஸா சுற்றுவட்டம், டீன்ஸ் வீதி, டெக்னிகல் சந்தி ஊடாக கொழும்புக்குள் வரலாம்.
அல்லது கொள்ளுபிட்டி சந்தியில் வலது பக்கம் திரும்பி தும்மூலை நோக்கி சென்று அங்கிருந்து நகர மண்டபம் ஊடக கொழும்பு நோக்கி பயணிக்க முடியும். இதேவேளை கொழும்பில் இருந்து வெளியேறும் பஸ், இலகு ரக வாகங்கள், ஒஸ்டின் மாவத்தை, டெக்னிகல் சந்தி, மருதானை, டி.பி.ஜாயா மாவத்த, இப்பன்வல சந்தி, யூனியன் பிளேஸ், லிபடன் சுற்றுவட்டம் , தர்மபால மாவத்த, எப்.ஆர். சேனநாயக்க மாவத்தை, கண்னங்கர மாவத்த, நந்த மோர்ட்டர்ஸ் சந்தி, சுதந்திர சதுக்க சுற்றுவட்டம், ரீட் மாவத்தை, தும்மூலை சுற்றுவட்டம், பெளத்தாலோக்க மாவத்தை, ஆர்.ஏ.டி. மெல் மாவத்தை ஊடாக காலி வீதிக்கு சென்ரு மேற்கொன்டு பயணிக்க முடியும்.
பிரமாண்ட அணிவகுப்பு பரியாதையில் இராணுவம் விமானப்படை, கடற்படை, பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப் படை, சிவில் பாதுகாப்பு படையணி தேசிய சிறுவர் படையணி ஆகியவற்றின் 7882 பேர் பங்கேற்கவுள்ளனர்.
இந்த அணிவகுப்பு மரியாதையானது யாழ். கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டி ஆரச்சியின் கீழ் இடம்பெறவுள்ளது. பிரதி கட்டளைத் தளபதியாக பிரிகேடியர் என்.கே.வடுகொட்டபிட்டிய செயற்படவுள்ளார். இதில் இராணுவத்தை சேர்ந்த 4156 பேரும் கடற்படையைச் சேர்ந்த 910 பேரும் விமானப்படையைச் சேர்ந்த 1125 பேரும் பொலிஸ், பொலிஸ் விஷேட அதிரடிப்படையைச் சேர்ந்த 927 பேரும் சிவில் பாதுகபபு படையணியைச் சேர்ந்த 664 பேரும் தேசிய மாணவ படையணியில் இருந்து 100 பேரும் அணி வகுப்பு மரியாதையில் தனித்தனி படையணிகளாக பங்கேற்கவுள்ளனர். அணிவகுப்பு மரியாதை, சாகச நிக்ழ்வுகளில் விமானப்படை வசமுள்ள கிபீர் விமாங்கள் உள்ளிட்ட போர் விமானங்களும் ஹெலிகொப்டர்களும் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இராணுவத்தின் வசமுள்ள 58 நவீன யுத்த தளபாடங்களும் இதன்போது அணிவகுப்பில் இணைக்கப்படவுள்ளன. இதனைவிட கடற்படையில் பங்கேற்கும் 910 பேருக்கு மேலதிகமாக, அவர்கள் வசமுள்ள 21 பாரிய, அதிவேக கப்பல், படகுகளும் அணிவகுப்பு மரியாதைக்கு இணைக்கப்படவுள்ளன. அத்துடன் பொலிஸ் படையணியானது சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரவி விஜேகுணவர்தனவின் கட்டளையின் கீழ் செயற்படவுள்ளது.
அதில் பெண்கள் படையணி வேறாக செயற்படுவதுடன் மோப்ப நாய்கள், குதிரைப் படைப் பிரிவும் உள்ளடங்கவுள்ளது. பொலிஸ் விஷேட அதிரடிப் படையின் அணிவகுப்பை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் அயேஷ கருணாதிலக வழி நடத்தவுள்ள நிலையில் அவர்கள் சார்பில் 560 பேர் பங்கேற்கின்றனர். இதில் பெண் படையணியும் உள்ளடங்கும். சிவில் பாதுகாப்பு படையனியின் 664 பேரும் தேசிய மாணவர் படையணியின் 100 பேரும் இதன்போது அணிவகுப்பு மரியாதையில் பங்கேற்கவுள்ளனர்.
No comments:
Post a Comment