70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் 1000 ரூபா நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு - News View

About Us

About Us

Breaking

Friday, February 2, 2018

70வது சுதந்திரதினத்தை முன்னிட்டு வெளியிடப்படும் 1000 ரூபா நாணயத்தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

பெப்ரவரி 04 ஆம் திகதி இடம்பெறும் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டங்களை முன்னிட்டு இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள 1000 ரூபாய் பெறுமதியுடைய நாணயத்தாள் இன்று (02) முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்ரஜித் குமாரசுவாமியினால் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களிடம் கையளிக்கப்பட்டது. இது மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள நான்காவது நினைவு நாணயத்தாள் ஆகும்.

நாணயத்தாளின் பருமன், நிறங்கள், பாதுகாப்பு அடையாளங்கள் என்பன தற்போது பாவனையில் உள்ள 11வது நாணயத் தொடருக்குரிய ஆயிரம் ரூபா நாணயத்தாளுக்கு ஒப்பானதாக காணப்படுவதுடன், இதன் இடதுபக்க கீழ் மூலையில் வண்ணத்துப்பூச்சியின் உருவத்திற்கு பதிலாக பல்லினத் தன்மையை கொண்டாடும் இலட்சினையும் 70வது சுதந்திர தினக் கொண்டாட்டத்தின் இலச்சினையும் பொறிக்கப்பட்டுள்ளன. 
11வது நாணயத் தொடருக்குரிய ஆயிரம் ரூபா நாணயத்தாளின் மத்தியில் காணப்படும் ரம்பொட சுரங்க கால்வாய் உருவிற்கு பதிலாக விகாரை, பள்ளிவாசல், கோவில் மற்றும் தேவாலயத்தின் உருவங்கள் மாத்திரம் பொறிக்கப்பட்டுள்ளன.

இந்த நினைவு நாணயத்தாள்கள் 2018.02.06 ஆம் திகதி முதல் அத்தாட்சிபெற்ற வர்த்தக வங்கிகளினூடாக பாவனைக்கு வெளியிடப்படுமென மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் நிதி பயன்பாடுகள் திணைக்களத்தின் தலைவர் தீபா செனவிரத்ன, மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதிஆளுநர் நந்தலால் வீரசிங்க உள்ளிட்ட குழுவினர் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment