நேற்றைய தம்புத்தேகம ஆர்ப்பாட்ட சம்பவம் : 50 பேருக்கு விளக்கமறியலில் - News View

About Us

About Us

Breaking

Wednesday, February 28, 2018

நேற்றைய தம்புத்தேகம ஆர்ப்பாட்ட சம்பவம் : 50 பேருக்கு விளக்கமறியலில்

அநுராதபுரம் - இராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் இருந்து நீரைப் பெற்றுக்கொண்டு முன்னெடுக்க உத்தேசிக்கப்பட்டுள்ள குடிநீர் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் தம்புத்தேகம நகரில் முன்னெடுத்த ஆர்ப்பாட்டம் கலகமாக மாறியதில் கைது செய்யப்பட்ட 59 பேரில் 50 பேர் எதிர்வரும் 5 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தம்புத்தேகம நீதவான் சமிலா நதிஷாணி முன்னிலையில் நேற்றிரவு அவர்கள் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த ஆர்ப்பாட்டத்தின்போது நீதிமன்ற உத்தரவை மீறி கலகம் விளைவிக்கும் வகையில் செயற்பட்டமை தொடர்பில் 59 சந்தேகத்துக்குரியவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களுள், 2 பெண்கள் அடங்களாக 50 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை, 6 ஆண் மற்றும் 3 பெண் சந்தேகத்துக்குரியவர்கள் அடங்களாக 9 பேர் சரீரப் பிணையில் செல்ல தம்புத்தேகம நீதவான் அனுமதியளித்துள்ளார்.

நீதிமன்ற உத்தரவை மீறியமை, கலகம் விளைவித்தமை, பொலிஸார் மீது தாக்குதல் நடத்தியமை தொடர்பில் அவர்களை கைது செய்ததாக பிரதேசத்துக்கு பொறுப்பான் உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குருணாகல் - அனுராதபுரம் பிரதான வீதியின் தம்புத்தேகம பொலிஸ் சந்தியில் நேற்று பெரும்தொகையிலான விவசாயிகள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்றினை நடாத்தினர். இராஜாங்கனை நீர்த்தேகத்தை அண்மித்துள்ள 17 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படும் நிலையில், இராஜாங்கனை குளத்தை, போத்தலில் அடைக்கப்படும் குடிநீரை தயாரிக்கும் நோக்கில் சீன தனியார் நிறுவனம் ஒன்றுக்கு வழங்க உத்தேசிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இந்த ஆர்ப்பாட்டம் நடாத்தப்பட்டது.

இதன்போது தம்புத்தேகம பகுதியில் உள்ள அனைவரும் ஒன்றுகூடியிருந்தனர். இதனால் குருணாகல் - அனுராதபுரம் வீதியி ஊடான போக்குவரத்து பல மணி நேரம் தடைப்பட்டது. இதேவேளை ஆர்ப்பாட்டத்துக்கு எதிராக பொலிஸார் நீதிவான் நீதிமன்ற தடை உத்தரவையும் பெற்றிருந்தனர். எனினும் அதனை கணக்கில் கொள்ளாது ஆர்ப்பாட்டக்காரர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் கடும் வாக்கு வாதம் ஏற்பட்ட நிலையில், பொலிஸ் நிலையம் மீது ஆர்ப்பாட்டக்காரர்கள் கல்வீச்சு தாக்குதலை நடத்தினர். இதனால் அவ்விடத்தில் பதற்ற சூழல் ஏற்பட்டது.

அதனை கட்டுப்படுத்தும் விதமாக பொலிஸார் ஆர்ப்பாட்டக்காரர்களை கண்ணீர் புகைக் குண்டு தாககுதல் நடாத்தியும் தண்ணீர் பீய்ச்சி அடித்தும் தடியடிப் பிரயோகம் செய்தும் களைத்தனர்.

ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையிலான மோதலின் போது 4 பொலிஸார் காயமடைந்து தம்புத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், பொலிஸார் 59 பேரைக் கைது செய்தனர்.

No comments:

Post a Comment