வெளிநாட்டில் இருந்து சுமார் இருபத்தைந்து இலட்ச ரூபா மதிப்புள்ள சிகரெட் தொகையை இலங்கைக்குள் கடத்திவர முயன்ற இலங்கையர் இருவரை கட்டுநாயக்க விமான நிலைய சுங்கத் துறையினர் இன்று கைது செய்தனர். குவைட்டில் இருந்து இன்று காலை 10 மணியளவில் இலங்கை வந்த விமானத்தில் இவ்விரு இலங்கையரும் பயணித்திருந்தனர்.
தீர்வையற்ற பொருட்களை எடுத்துச் செல்லும் பகுதி வழியாகச் சென்ற இவர்களை, சந்தேகத்தின் பேரில் சுங்கத் துறையினர் சோதனை செய்தனர். அதன்போது, இவர்களிடம் 242 தொகுதிகளில் மொத்தமாக 48,400 சிகரெட்கள் கைவசமிருந்ததை சுங்கத் துறையினர் கண்டுபிடித்தனர்.
கொழும்பில் இயங்கிவரும் ஒரு நிறுவனத்தின் அதிகாரிகளாகிய 27 மற்றும் 47 வயதுடைய இவ்விருவரும் குவைட்டுக்கு குறுகிய கால பயணம் மேற்கொண்டிருந்தமை விசாரணையில் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்ட இருவரும் மூன்று இலட்ச ரூபா சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
No comments:
Post a Comment