இலஞ்ச, ஊழல், பாரிய நிதி குற்ற வழக்குகளை ஆராய விசேட நீதிமன்றம் - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 31, 2018

இலஞ்ச, ஊழல், பாரிய நிதி குற்ற வழக்குகளை ஆராய விசேட நீதிமன்றம்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக விசேட மேல் நீதிமன்றம் ஒன்றினை ஸ்தாபிக்க நேற்று 2018.01.30 ஆம் திகதி நடைபெற்ற அமைச்சரவை சந்திப்பின் போது அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் மற்றும் மிகவும் சிக்கலான நிதிக்குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை துரித கதியில் விசாரிப்பதற்காக நீதிபதிகள் மூவரடங்கிய, விசேட மேல் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிப்பதற்கு 1978ம் ஆண்டு 02 ஆம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்காக, அமைச்சரவை ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.

அதன் அடிப்படையில், தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு அமைய, அதில் குறிப்பிடப்படும் குற்றங்கள் தொடர்பில் சட்டமாதிபர் அல்லது இலஞ்ச, ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளரால் (தற்போது பரிந்துரை செய்யப்பட்டுள்ள) மூவரடங்கிய மேல் நீதிமன்றத்திடம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும்.

இதன்போது நிலைமைக்கு ஏற்ப, உரிய குற்றத்தின் தன்மை, பாரிய, சிக்கலான, அரசாங்கத்திற்கு அல்லது பாதிக்கப்பட்டவருக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு, தேசிய நல்லுறவு போன்ற விடயங்கள் உரிய முறைமையின் கீழ் கருத்திற் கொள்ளப்படும்.

இம்மூவரடங்கிய மேல் நீதிமன்றத்தை அமைக்கும் பொருட்டான விதிமுறைகளை உள்ளடக்கியதாக, 1978 ஆம் ஆண்டின் 02 ஆம் இலக்க நீதிமன்ற அமைப்பு சட்டத்தை திருத்தம் செய்வதற்கான சட்டமூலத்தை, அரசாங்கத்தினால் வர்த்தமானி படுத்துவதற்கும், அதன் பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்குமான யோசனையை, நீதியமைச்சர் தலதா அதுகோரளவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை, இலங்கையில் இலஞ்சம் மற்றும் ஊழலை இல்லாதொழிக்கும் நோக்கில், ஏற்கனவே காணப்படுகின்ற சட்டங்களை தற்போதுள்ள தேவைகளுக்கு பொருந்தும் வகையில் மாற்றியமைப்பதற்கான அவசியத்தை அடையாளம் கண்டு, இலஞ்ச ஊழல் குற்ற விசாரணை ஆணைக்குழு சட்டம் மற்றும் அதன் இணை சட்டங்களை திருத்துவதற்கு அமைச்சரவை ஏற்கனவே அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைவாக, இலஞ்ச குற்றச்சாட்டுகளுக்கு மேலதிமாக ஊழல் குற்றச்சாட்டுகள் தொடர்பான வழக்குகளை, நீதவான் நீதிமன்றங்களில் மாத்திரமல்லாது மேல் நீதிமன்றத்திலும் விசாரிப்பதற்கு ஏற்ற வகையிலான விதிமுறைகளை உள்ளடக்கிய, 1954 ஆம் ஆண்டு 11 ஆம் இலக்க இலஞ்ச சட்டத்தின் 70 ஆவது பிரிவை திருத்தம் செய்ய வேண்டியுள்ளதாக ஜனாதிபதியால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில், அது தொடர்பில் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும், பின்னர் அங்கீகாரத்துக்காக பாராளுமன்றத்தில் முன்வைப்பதற்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

No comments:

Post a Comment