இன்றைய அபூர்வ கிரகணம் இவ்வாறுதான் நிகழ்கிறது! - News View

About Us

About Us

Breaking

Wednesday, January 31, 2018

இன்றைய அபூர்வ கிரகணம் இவ்வாறுதான் நிகழ்கிறது!

152 ஆண்டுகளுக்குப் பிறகு ஓர் அபூர்வ சந்திர கிரகணம் இன்று இடம்பெறவிருக்கிறது. இதே போன்ற ஒரு வானியல் நிகழ்வு 1866-ம் வருடம் மார்ச் 31-ம் தேதி நிகழ்ந்தது. அதன் பிறகு இன்று தான் நடைபெற இருக்கிறது. வழக்கமாக நடைபெறும் சந்திர கிரகணம் போல இல்லாமல் இது சற்று வித்தியாசமானது. அப்படி என்ன வித்தியாசம் என்று பார்ப்பதற்கு முன்னால் சூரிய, சந்திர கிரகணங்கள் எப்படி ஏற்படுகின்றன என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோம்.

சூரிய கிரகணம் (Solar Eclipse) மற்றும் சந்திர கிரகணம் (Lunar Eclipse) :
பூமி, நிலவு மற்றும் சூரியன் ஆகியவை நேர்க்கோட்டில் வரும் பொழுதுதான் கிரகணம் என்ற நிகழ்வு ஏற்படுகிறது. பூமிக்கும் சூரியனுக்கும் இடையில் நிலவு வரும்பொழுது சூரிய கிரகணம் ஏற்படுகிறது. சூரிய கிரகணத்தின் போது பூமியில் இருந்து பார்த்தால் நிலவானது சூரியனின் ஒரு பகுதியையோ அல்லது முழுமையாகவோ மறைக்கும். அதே போல சந்திர கிரகணம் என்பது சூரியனுக்கும் நிலவுக்கும் இடையில் பூமி நேர்க்கோட்டில் வரும்பொழுது ஏற்படுகிறது அப்பொழுது பூமியின் நிழல் நிலவின் மீது விழும். சூரியனுக்கு எதிர்த்திசையில் நிலவு இருக்கும் பொழுதுதான் சாத்தியம் என்பதால் எப்பொழுதும் பௌர்ணமி நாளில்தான் சந்திர கிரகணம் நடைபெறும், அதேபோல எப்பொழுதும் அமாவாசை நாளில்தான் சூரிய கிரகணம் ஏற்படும்.

அபூர்வ சந்திர கிரகணம்
முழு சந்திர கிரகணமானது, பிளட் மூன் (Blood Moon), சூப்பர் மூன் (Super Moon), மற்றும் ப்ளூ மூன் (Blue Moon) போன்ற அனைத்து நிகழ்வுகளும் சேர்ந்து ஒரே கிரகணமாக இன்றுக்கு காட்சி தரப்போகின்றன. ப்ளூ மூன் என்றால் நிலவு நீல நிறத்தில் தெரியுமா, சூப்பர் மூன் என்றால்என்ன என்பது போன்ற பல கேள்விகள் பலருக்கு இருக்கக்கூடும். சரி, இந்தப் பெயர்களுக்கு பின்னால் இருக்கும் உண்மையான அர்த்தம்தான் என்ன? 'ப்ளூ மூன்' என்பதை தமிழில் 'நீல நிலவு' என்றும் அழைக்கலாம் ஆனால் நிலவு நீல நிறத்திற்கு மாறுவதில்லை.

'ப்ளூ மூன்' (Blood Moon)
ஒரே மாதத்தில் இரண்டு முறைக்கு மேல் பௌர்ணமி வரும்பொழுது இரண்டாவதாக வரும் பௌர்ணமி 'ப்ளூ மூன்' என்று குறிப்பிடப்படும். ஏற்கெனவே இந்த வருடத்தின் தொடக்க நாளான ஜனவரி 01ஆம் திகதியன்றே முதல் பௌர்ணமி தோன்றியது மறுபடியும் மீண்டும் இன்று (31) தோன்றுவதால் அதன் பெயர் ப்ளூ மூன் என அழைக்கப்படுகிறது. இது போன்ற நீல நிலவு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே இவ்வாறு தோன்றும்.
'சூப்பர் மூன்' (Super Moon)
நிலவு பூமியை ஒரு நீள்வட்டப்பாதையில் சுற்றிவருவது அனைவரும் அறிந்த தகவல். நீள்வட்டப்பாதையில் சுற்றுவதால் ஒரு சில நேரங்களில் பூமிக்கு அருகிலும் சில நேரங்களில் பூமியை விட சற்று தொலைவிலும் இருக்கும், அப்படி அண்மைநிலையில் நிலவு இருக்கும் பொழுது பௌர்ணமியாக இருந்தால் அன்றைக்கு நிலவு வழக்கத்தை விட 14 மடங்கு பெரிதாகவும், 30 மடங்கு பிரகாசமாகவும் தோன்றும். அதுவே பெரு நிலவு / சூப்பர் மூன் என்று அழைக்கப்படுகிறது. ஒரு வருடத்தில் நான்கு முதல் ஆறு பெரு நிலவுகள் தோன்றும்.

'பிளட் மூன்' (Blood Moon)
எனப்படுவது இது போன்ற நிகழ்வுகளின் போது சூரிய ஒளி நேரிடையாக நிலவின் மீது படாமல் பூமியின் வளிமண்டலத்தால் சிதறடிக்கப்பட்டு நிலவின் மேல் விழும். பூமியின் வளிமண்டலத்தால் பிற நிறங்கள் வடிகட்டப்பட்டு அதிக அலைநீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலவை சென்றடையும் அதனால் நிலவு சிவப்பாக காட்சியளிக்கும். இதுவே ’சிவந்த நிலவு’ என்று அழைக்கப்படுகிறது.

அது போல இன்று நிகழப்போவது முழு சந்திர கிரகணம் என்பதால் பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைக்கும். இந்த அனைத்து நிகழ்வுகளும் ஒன்றாக நடைபெறுவதுதான் இன்றைய சந்திர கிரகணத்தை அபூர்வ சந்திர கிரகணமாக மாற்றி இருக்கின்றன. இதை ஆங்கிலத்தில் 'சுப்பர் ப்ளூ பிளட் மூன்' (Super Blue Blood Moon) என்கிறார்கள். 

இன்று ஏற்படும் சந்திர கிரகணத்தை எப்படி பார்க்கலாம் ?
சூரிய கிரகணம் என்றால் அதற்கென பிரத்யேகமாக தயாரிக்கப்பட்ட கண் கண்ணாடிகள் மூலமாகவோ அல்லது பிற பாதுகாப்பு சாதனங்கள் மூலமாகவோ மட்டுமே பார்க்க வேண்டும். மாறாக சந்திர கிரகணத்தை வெறும் கண்களாலேயே பார்க்கலாம். சந்திர கிரகணம் கண்களுக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்துவதில்லை. இன்று (31) இலங்கை நேரப்படி மாலை 6.14 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழத்தொடங்கும், அதன் பிறகு 6.21 மணி முதல் 7.37 வரை பூமியின் நிழல் முழுவதுமாக நிலவை மறைக்கும். இது முழு சந்திர கிரகணம் என்று அழைக்கப்படும். அதன் பிறகு பூமியின் நிழல் கொஞ்சம் கொஞ்சமாக நிலவிலிருந்து விலகத்தொடங்கும். 7.37 மணி முதல் 9.38 மணி வரை பகுதி சந்திர கிரகணமாக காட்சியளிக்கும். 8.41 மணி முதல் 9.38 மணி வரை பகுதியளவான அல்லது அரிநிழல் கிரகணம் நிகழும்.
இதனால் மனிதர்களுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்படுமா ?
இது ஒரு சாதரணமான இயற்கை நிகழ்வுதான். இதனால் மனிதர்களுக்கு எந்த விதமான பாதிப்பும் ஏற்படுவதில்லை. எனவே இன்று (31) நிகழவுள்ள இந்நிகழ்வைப் பார்க்க மறந்துவிடாதீர்கள்.

No comments:

Post a Comment