அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம் - News View

About Us

About Us

Breaking

Saturday, July 17, 2021

அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி களுத்துறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டம்

(நா.தனுஜா)

அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்டு வரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இன்று களுத்துறை நகரில் பாரிய ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

ஐக்கிய மக்கள் சக்தியின் களுத்துறை மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேராவினால் களுத்துறை நகர சபைக்கு அண்மையில் இன்று சனிக்கிழமை காலை 9.30 மணியளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த ஆர்ப்பாட்டம் ஐக்கிய மக்கள் சக்தியினதும் பிரதான எதிர்க்கட்சியினதும் தலைவரான சஜித் பிரேமதாஸவின் தலைமையில் நடைபெற்றது.

'ஜனநாயகத்தையும் மக்களின் சுதந்திரத்தையும் பாதுகாத்தல்' என்ற தொனிப்பொருளில் முன்னெடுக்கப்பட்ட இந்த அரசாங்கத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் சரத் பொன்சேகா, ராஜித சேனாரத்ன உள்ளிட்ட முக்கிய பாராளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய மக்கள் சக்தியின் நகர மற்றும் பிரதேச சபை உறுப்பினர் பலரும் பெருமளவான கட்சி ஆதரவாளர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் 'அடக்குமுறைகளுக்கு அடிபணிய மாட்டோம்', 'வாழ்க்கைச் செலவைக் குறையுங்கள்', 'மீனவர்களுக்குரிய நிவாரணத்தை வழங்குங்கள்', 'ஆசிரியர்களை அவமதிக்க வேண்டாம்', 'உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல்கள் தொடர்பில் தாமதமின்றி நீதி நிலைநாட்டப்படுவதை உறுதிப்படுத்துங்கள்', 'பசிலாலும் முடியாது' போன்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்திருந்தததுடன் அரசாங்கம் முன்னெடுத்து வரும் ஜனநாயக விரோத செயற்பாடுகளை உடனடியாக நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தும் வகையிலான கோஷங்களையும் எழுப்பினர்.

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் ஜோன் கொத்தலாவல தேசிய பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்ட மூலத்திற்கு எதிராகவும் உரப் பிரச்சினை, ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வைப் பெற்றுக் கொடுக்குமாறும் வலியுறுத்தி அண்மையில் பலதரப்பட்டவர்களாலும் ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்ட நிலையில், அவற்றில் சில போராட்டங்கள் பொலிஸாரால் அடக்கப்பட்டது.

அதேவேளை மேற்படி சட்ட மூலத்திற்கு எதிராகவும் அரசாங்கத்தின் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராகவும் பாராளுமன்ற சுற்று வட்டத்தில் கடந்த வாரம் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment